Thursday, October 6, 2011

பக்த பிரகலாதன் - 3

                                    இரண்யாக்சன்


இரண்யாக்சன்
அக்கிரமம் பல
அநுதினம் செய்யும்
அரக்கன்;
அன்பென்ற ஒன்று
கொஞ்சம் கூட
நெஞ்சில் கொள்ளாக்
கிறுக்கன்; நல்லோர்
சொல் கேளா
செருக்கன்;

இமையோர் எல்லோரையும்
இரண்யாக்சன் சண்டைக்கு
இழுத்தான்;
இரண்யாக்சனுக்கு பயந்து
இமையோர் எல்லோரும்
இல்லாது போயினர்; தலை
மறைத்து வாழ்ந்தனர்; தம்
நிலைமை நினைத்து நொந்தனர்;

     


மாயை புரி;
மக்களைக் காப்பாற்று என்று
மன்றாடினார் அந்தத் திரு
மாலிடம்;

இரண்யாக்சன்
பூமிப்பந்தை ஆழ்கடலில் அழுத்தி வைத்தான்;
தன்னையே காவலுக்கு அருகில் வைத்தான்;

பரப்பிரம்மம்
பன்றி உருவமெடுத்தார்;
பக்தியோடு தமை அண்டியவர்களைப்
பாதுகாக்க முடிவெடுத்தார்;

சிறிய உருவத்தில் இருந்தது,
சிறிது சிறிதாய் வளர்ந்தது,
பெரிய மலை ஆனது;

வராக
வடிவத்தில்
வந்தவன்
விஷ்ணுவே என்று
உணர்ந்து கொண்டான்;
உடன் கோபம் கொண்டான்;

தண்ணீரில் நுழைந்தது பன்றி;
தன் கூரான பல்லால் பூமிப்பந்தைத்
தள்ளி தண்ணீர் மேல் கொண்டுவந்தது;


     

இரண்யாக்சன் கத்தினான்;
'முட்டாள் பன்றியே,
இருந்த இடத்தில்
இந்தப் பந்தை
எறிந்து விட்டு
இங்கிருந்து சென்று விடு'
எச்சரித்தான்;
'இல்லை தலையில் அடித்து
உன்னைக் கொன்றுவிடுவேன்'
கர்ஜித்தான்;

இரண்யாக்சனின் மரணம்
சம்பவிக்க தக்க தருணம்
இதுவே என்று எண்ணினார்
திருமால்;
இருவரும் சண்டையிட்டனர்;
இரவாகும் முன்னமே
இராக்கனை வீழ்த்திட வேண்டுமென்று
எடுத்துரைத்தார் பிரம்மா;
இரவானால்
இராக்கன் பலம் பெறுவான்
என்று எச்சரித்தார்;



திருமால்
தன் திருக்கரத்தில் இருக்கும்
சக்ராயதத்தை எடுத்தார்;
அரக்கனை நோக்கி வீசினார்;
அது அவன்
ஆயுதத்தை எல்லாம்
அழித்தது;
ஆக்ரோஷமாய்
அரக்கன் எதிர்த்து வர, மகாவிஷ்ணு
அவன் நெஞ்சில் ஒரு அடி தர,
அடியின் வேகம் தாங்க முடியாது
அக்கணமே அரக்கன்
தரை மேல் விழுந்தான்;
உயிர் நீத்தான்;

தம்பியைக் கொன்ற விஷ்ணு மீது
தாளாத பகை கொண்டான் அண்ணன்;

                                                                        ( பக்தி தொடரும் )

No comments:

Post a Comment