Monday, October 10, 2011

பக்த பிரகலாதன் - 7

                                    பிரகலாத பாடம்

கல்வி கற்க
குருகுலம் சென்றான் பிரகலாதன்;
அரசனின் பிள்ளை மற்ற
அரக்கர்களின் பிள்ளையோடு
ஆணவமின்றிப் பாடம் கற்றான்
சுக்ராச்சாரியாரின் பிள்ளைகளிடம் ;


இரண்யகசிபுவின்
பராக்ரமமே
பாடமாயிற்று
பிள்ளைகளுக்கு;
எவன் நண்பன்,
எவன் எதிரி
எல்லாம் சொல்லித்தரப்பட்டது;
எப்படி அரசன் சொன்னானோ
அப்படியே செய்யப்பட்டது;
ஒப்பிக்கச் சொன்னதெல்லாம்
ஒப்பிக்கப்பட்டது;

பாடம்
புரியாது
பிரகலாதன்
பரிதவித்தான்;
எல்லாம் அரி
எனில்
எதிரியை அறிவது அரிவது
எதற்கு ?
எதிரி என்பவன்
எவனுமில்லை;
இதைத் தவிர வேறெதுவும்
உண்மையில்லை;

தேவையில்லாததெல்லாம்
கற்பதெதற்கு ?
தேவையில்லாதது எனத்
தெரிந்தும்
கற்பிப்பதெதற்கு ?

கேள்விகள் தினம் எழுந்தது;
படமோ தினம் நடந்தது;
பதில் தெரியாதே
பள்ளியும் தினம் முடிந்தது;

அரசன் ஒருநாள் ஆசைப்பட்டான்
அரசாளப்போகும் தன் பிள்ளை
அறிந்ததென்ன இதுவரை என்று
அறிந்துகொள்ள;

அழைத்தான் பிள்ளையை;
ஆசையில் அணைத்துக்கொண்டான்,
அவனைத் தன் மடியில்
அமர்த்திக்கொண்டான்;

'பிரகலாதா, நீ
படித்ததில்
பிடித்தது எது'
பதில் கேட்டான் தந்தை;
'பிறக்கும் முன்,
பிறந்த பின், எல்லாப்
பொழுதிலும் எனக்குப்
பிடித்தது அந்தப்
பரந்தாமன் நாராயணனின் நாமம்'
பதில் தந்தான் பிள்ளை;

கடுஞ்சினம் கொண்டான் அரசன், எனினும்
சிறுவன் முன் சிரித்து வைத்தான்;
விளையாட அனுப்பிவைத்தான்;
ஆசிரியர்களை
அழைத்தான்;
ஆர் இப்படியெல்லாம்
அவனுக்கு போதித்தது என
அதட்டிக் கேட்டான், கொதித்தான், கோபித்தான்;
அடுத்த முறை இதே பதில்
அவன் தந்தால்
அவர்கள் தலை
அவர்களிடம் இருக்காது என்று சொல்லி மிரட்டி
அனுப்பி வைத்தான்;

தலைகுனிந்தப்படியே
தம் இருப்பிடம் வந்தனர்;
தவறு நடந்தது எங்கு எனத்
தெரியாது தவித்தனர்,
பிரகலாதனுக்குப் பாடப்
பயிற்றுவிக்கும் சுக்ராச்சாரியாரின்
பிள்ளைகள்;

                                                                        ( பக்தி தொடரும் )

No comments:

Post a Comment