Wednesday, October 19, 2011

சுதாமா சரித்திரம் - 6

                                    சுதாமாவிற்கு அருள்

ஒருவழியாய் வயிற்றுப் பசி அடங்கியது,
உடல் சோர்வு கிளம்பியது;
கண்கள் உறங்கக் கெஞ்சியது;
வெளியே செல்ல முற்பட்டார்; எங்காவது
கொஞ்சம் உறங்கக் கிளம்பினார்;

கண்ணனோ சுதாமாவைத்
தன் அறைக்கு இழுத்துச் சென்றான்;
நறுமணம் நிறைந்த அறை;
சுத்தமானப் பஞ்சில் மெத்தை;
குளுகுளு காற்று வசதி;
அழகிய மணிகள்
அசைந்தாட இன்னிசை;
தயங்கியப்படியே தள்ளி நின்றார் சுதாமா; அவரை
அமுக்கிக் கட்டிலில் அமர வைத்தான் பரமாத்மா;
கால் பிடித்து விட்டான்; சுதாமா
கண்ணனின் அன்பைப் பார்த்து
கண் கலங்கினார்;
கவலை எதற்கு,
யாமிருக்க ? கண்ணன் கேட்டான்;

எல்லாம் சரி,
எனக்காக என்ன கொண்டு வந்தாய் சுதாமா ?
என்று கேட்டான் கண்ணன்,
எல்லாம் தெரிந்தவன்,
எதுவும் தெரியாதவன் போல் இருப்பவன்;

இத்தனை வித
அமுதம் படைத்தவனுக்கு, வறண்ட இந்த
அவலை அளிப்பது
அவமதிப்பதற்கு சமானம்
என்று எண்ணினார் சுதாமா;
ஏதும் சொல்லாமலே இருந்தார்;

கண்ணனே பேசினான்;
அன்பில்லாமல் பலர்
அள்ளி அள்ளித் தருவர்;
அவர்கட்கு என்
ஆசீர்வாதம் கிடைப்பதில்லை;
அன்போடு எனக்குக்
கொஞ்சம் தந்தாலும்
அப் பக்தர்கட்கு நான்
அடிமை என்றான்;

இவ்வளவு சொன்ன பின்னும்
எடுத்து வந்த அவலைக் கிருஷ்ணனுக்குக்
கொடுக்கத் தயங்கினார் சுதாமா;

கிருஷ்ணன் இத்தனை சொன்ன பின்னும்
கொண்டு வந்த அவலைக்
கொடுக்கத் தயங்கினார் சுதாமா;
'என்ன மூட்டை இது'
என்று தானே சுதாமாவின் அருகில் இருந்ததை
எடுத்தான், பிரித்தான், அதிசயித்தான்;

சுதாமா, எனக்கு மிகவும் பிடித்த அவல்;
ஆகா ஆகா என்று ஆனந்தப்படான்;

ஒரு கை அவல் எடுத்தான்;
தன் வாயில் போட்டுக்கொண்டான்;
இன்னொரு கை அவல் எடுத்தான்;
அதற்குள் மனைவி ருக்மணி
கண்ணனைத் தடுத்தாள்;
ஒரு கை அவலுக்கே சுதாமாவிற்கு
அனைத்து ஐஸ்வர்யங்களும் கிட்டி விடுமே;
இன்னொரு கைப்பிடி அவல் எதற்கு ?
இன்னும் அவருக்குத் தர என்ன இருக்கு ? என்றாள்;

சிரித்துக் கண்டான் சிரீதரன்;

புலர்ந்தது காலை;
மலர்ந்தது புதிய வேளை;
புறப்பட்டார் சுதாமா தன் மனை நோக்கி;
பரந்தாமனின் அன்பைத் தன் மனதில் தேக்கி;
பிரியா விடை தந்தான் கண்ணன்;
பிரிய மனமில்லாப் பள்ளித் தோழன்;

சுதாமா
கண்ணனை எண்ணியப்படியே,
கண்ணனின் கருணையை நினைத்தப்படியே,
கண்ணன் காட்டிய அன்பை அசைபோட்டுக்கொண்டே
தன் ஊருக்கு வந்து சேர்ந்தார்;
தன் வீட்டருகே வந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி;
அங்கே அவர் மனை இருந்த இடத்தில்
அரண்மனை போன்றோர் மாளிகை இருந்தது;
என் மனை எங்கே ?
என் மனைவி, மக்கள் எங்கே ?
என்றவர் குழம்ப,
அதற்குள் சுதாமா வருகையை
அறிந்த அவ்வூர் மக்கள்,
மேல தாளத்துடன் அவரை வரவேற்க வந்தனர்;
சுதாமாவின் மனைவி
சூரிய ஒளிபோல் பிரகாசிக்குமந்த அரண்மனையிலிருந்து
வெளிப்பட்டாள்;
உங்கள் வீடு, உங்கள் மனை என்று
ஊரார் தெரிவித்தனர்;
எல்லாம் அந்தக் கண்ணனின் கருணையால்
நிகழ்ந்தது என்றுணர்ந்தார் சுதாமா;
மரகதம்,தங்கம், வெள்ளி எல்லாம்
மின்னியது அந்த
மாளிகையில்;
சுதாமாவின் வறுமை ஒழிந்தது;
வளமை மிகுந்தது;

சுதாமா -
பணம் வந்திடினும்
பழமை மறக்காது இருந்தார்;
பரந்தாமன் மேல்
பக்தி செய்து வந்தார்;

பரம ஏழை சுதாமாவின் இந்தக் கதையைப்
படிப்பவர்க்கு அந்தப்
பரந்தாமன் அருள்
பாலிப்பான்;

                                    கிருஷ்ணார்ப்பணம்


                                                                        ( சரித்திரம் முடிவுற்றது )

1 comment: