Sunday, October 9, 2011

பக்த பிரகலாதன் - 6

                                    பிரகலாதன்

பிரகலாதன் -

பண்புள்ளம் படைத்த சிறுவன்;
அரக்கக் குளத்தில் பிறந்தும்
இரக்க குணம் நிறைந்த ஒருவன்;
சேற்றில் முளைத்த செந்தாமரை இவன்;

இரண்யகசிபுவின் பிள்ளை;
இவனைப் போல் பக்தி செய்ய
இன்னொருவன் இல்லை;

நாராயணன் நாமம் எப்பொழுதும்
நாவில் கொள்வான்;
நாராயணனைத் தவிர வேறேதும்
நெஞ்சில் கொள்ளான்;

அரக்கனின் செல்வன்
அற வழியில் செல்வதெப்படி ?

பிரகலாதன் கருவில்
இருக்கையில்,
இரண்யகசிபு தவம் செய்துகொண்டு
இருக்கையில், யாருமறியாது
இந்திரன்
இரண்யகசிபுவின் பத்தினியைக் கவர்ந்து
இழுத்துச் செல்கையில்,
இதனைக் கண்ட நாரதர்
'இந்திரா உன் தகுதிக்கு ஒவ்வாத செயல்
இது, இவளை விட்டு விடு
இக்கணமே' என்கிறார்;

'நாரதரே,
நாலும் அறிந்தவரே,
இரண்யகசிபு வே இவ்வளவு
இடுக்கு எமக்கு அளிக்கையில்
இரண்யகசிபு விற்கு பிறக்கும் பிள்ளை
இன்னும் எவ்வளவு துன்பம் செய்வான்; எனவே
இவளைச் சிறையிலடைத்து
பிள்ளை பிறந்ததும் அப்
பிள்ளையைக் கொல்லப் போகிறேன்'
பதிலுரைத்தான்; தன் செயலை
நியாயப்படுத்தினான் இந்திரன்;

நாரதர் நகைத்தார்;
நடக்கப்போவதை இந்திரனுக்கு
நவின்றார்;
'பிறக்கப் போகும் பிள்ளை
பரந்தாமனுக்குப் பிடித்த பிள்ளை;
அப் பிள்ளை எவருக்கும் தீங்கு
செய்வான் இல்லை;
நெஞ்சில் கொள் என் சொல்லை;
நீ கவலை கொள்ள
தேவை இல்லை;

இரண்யகசிபுவின் மனைவியை விடு,
நீ புறப்படு';

அறிவுரை சொல்லி
அனுப்பி வைத்தார் தேவர்களின் தலைவனை;
அழைத்துச் சென்றார் தன்னோடு
இரண்யகசிபுவின் துணைவியை;

இரண்யகசிபு வரும் வரை தன்
இருப்பிடத்தில் தங்க வைத்தார்,
நாராயணன் மகிமையை
நாளும் ஓதினார்
நங்கையின் காதினுள்;

காதினுள் நுழைந்தது
கருவிலிருக்கும் பிள்ளையின்
நெஞ்சினுள் சென்றமர்ந்தது;

மண்ணை ஆளப் பிறந்தவன்
மனதை ஆண்டது நாராயணன்
மந்திரம்;

                                                                        ( பக்தி தொடரும் )

No comments:

Post a Comment