Friday, November 11, 2011

உத்தவ கீதை - 8

கொல்லன்,
தன் பட்டறையில்
தன் வேலையில்,
கண்ணும் கருத்துமாக,
வேறு சிந்தனை
ஏதுமின்றி,
எப்படி உழைக்கிறானோ
அப்படி இறைவன் மேல்
எப்பொழுதும்
கவனம் கொண்டு செயல்பட்டால்
கவலை இல்லாது
கரையேறலாம் என்று
கொல்லன் எனக்குக் கற்பித்தான்;

பாம்பு,
தனியாய் வசிக்கும்;
ஆள் ஆரவாரம் கேட்டால்
அக்கணமே அங்கிருந்து ஓடிவிடும்;
அதுபோல் தனியே
அதிகம் பேசாது
அடக்கமாக வாழ்.
பாம்பு சொல்லித் தந்தப்
பாடம் இது;

பட்டுப் பூச்சி
பட்டு நூல்களை உற்பத்தி செய்து வலை
பின்னுகிறது,
பின்னொரு நாளில்
பின்னிய வலையைத் தானே தின்னுகிறது;
படைக்கும் பொருள் அனைத்தையும்
பிரளயக் காலத்தில்
பரம்பொருளே அழிக்கிறார்;
பட்டுப் பூச்சி கற்றுத் தந்தப்
பாடமிது;

குளவி, தன் கூட்டில்
புழுவை அடைத்து
அதைச் சுற்றி ஒலி எழுப்பும்;
குளவியின் ஒலி கேட்டு
வளரும் புழு குளவியாகவே
உருவெடுக்கும்;
அதுபோல்
ஆண்டவனை எண்ணியே
அனுதினமும் இருப்போர்
ஆண்டவனாகவே வாழ்வர் என்பது
குளவி எனக்குக்
குருவாய் இருந்துக்
கற்பித்தப் பாடம்;

இவ்வாறு
இந்த
இருபத்தி நான்கு குருக்களிடமிருந்து
இருக்கையில் எப்படி
இருப்பது என்று கற்றுக்கொண்டேன் என
இனிய அவதூதர் சொல்லி முடித்தார்;
இன்னொன்றையும் தொடர்ந்து சொன்னார்;
இந்தச் சரீரம் நமக்கு
இன்ப துன்பத்தை அளிக்கிறது;
இறப்பு பிறப்பு இதில் பிணைந்து
இருக்கிறது;
இதனால் விவேகம், வைராக்கியம் கிடைப்பதனாலே
இவ் உடலும் எனக்கு ஒரு குரு ஆனது;

துவாரகை மன்னன்
ஸ்ரீ கிருஷ்ணன்
தன் நண்பன்
உத்தவனுக்கு
உரைத்த இந்த
அறிவுரைகளே
உத்தவ கீதை எனப்படும்;

                                                                        ( கீதை முடிந்தது )

No comments:

Post a Comment