Friday, November 18, 2011

கண்ணப்ப நாயனார் கதை - 4

எப்பிறவியில்
என்ன தவம் செய்தானோ திண்ணன்
இப்பிறவியில்
சிவன் மேல் ஆர்வம் வர
சிவவயப்பட்டான்;

சிவபெருமானைக் கண்டான்;
கண்ணீர் மல்கச் சேவித்தான்;
தன் வசம் இழந்து நின்றான்;
இந்த அடர்ந்த வனத்தில்
காவலுக்கு எவரும் இல்லாது
இருப்பது முறையா என்று வினவினான்
உலகையே கட்டிக் காப்பவனை;

திண்ணா, யாரோ பூஜை செய்த மலர் சிவன்
திரு மேனியில் இருக்கிறதே பார் என்றான்
திண்ணனுடன் கூட வந்தவன்;
தினமும் பூஜை மட்டும் செய்து விட்டுத்
திரும்பிவிடுகிறார் அவர் என்று
தெரிந்துக் கொண்டான் திண்ணன்;

பூசை முடிந்தது,
புசிக்க உணவு தர வேண்டாமா என்று சொன்னான்;
உடனே ஓடினான்,
நண்பன் சமைத்து வைத்த
பன்றிக் கறியில்
பக்குவமாய் வெந்த
பாகத்தைத் தான் தின்றுப்
பரிசோதித்து
ஒரு இலையில் வைத்துக்கொண்டு
ஓடி வந்தான் மீண்டும்;

உண்ணச் சொல்லி,
தள்ளி நின்றான்;
நண்பர்கள் வந்தனர்;
பைத்தியமா நீ என்று
அதட்டினர்; நாகனை
அழைத்து வருவோம் என்று
தம் வழி சென்றனர்;

திண்ணன் சிவனை விட்டு
அசையாது நின்றான்;
காவல் புரிந்தான்;
தினமும் சேவை செய்தான்;

தன் தலையில் பூவைச் சொருகி,
வாயில் நீரை நிரப்பி வந்து,
தன்
பாதத்தாலே
பழைய பூ மாலை மாமிசங்களை
விலக்கி,
வாயிலிருக்கும் நீரை
சிவன் தலையில் துப்பி,
தன் தலையிலிருக்கும் பூவைச்
சிவன் தலையில் சூட்டுவான்;
மிருகங்களை வேட்டையாடி
மாமிசம் கொண்டு வந்து,
வாயில் வைத்து உண்ணும் வரை
விலகி நிற்பான்;

ஒவ்வொரு முறையும்
திண்ணம் இப்படி
பூசை செய்வான்;
பின் சிவபெருமானின்
பசியாற்ற மான், பன்றி, முயல் என்று
பார்த்துப் பார்த்து வேட்டையாடித்
தான் உண்டு, சுவையானதை மட்டும்
விருந்தாய்ப் படைப்பான் ;

வேட்டையாட இவன் செல்ல,
சிவலிங்கத்திருக்கு தினம்
பூசை செய்யும் பூசாரி வர,
மாமிசத் துண்டு அங்கு சிதறிக் கிடக்க,
அதைக் கண்டு அவர் முகம் சுளிக்க
தினம் இக்கூத்து
தொடர்ந்து நடந்தது;

அழகான சுத்தமானக் கோவிலை இப்படி
அசுத்தம் செய்வது
ஆரெனத் தெரியாது
அவதியுற்றார்;
ஆத்திரப்பட்டார்;

பூசாரி கோவிலைச் சுத்தம் செய்து
பூசை செய்து
புறப்பட, அவரைத் தொடர்ந்து
திண்ணம் நுழைந்து
தன் ஆசைப்படி பூசை செய்ய,
தினம்
தொடர்ந்தது இத்
திருவிளையாடல்;

                                                                        ( கதை தொடரும் )

No comments:

Post a Comment