Thursday, November 10, 2011

உத்தவ கீதை - 7

மீன்,
தூண்டில் புழுவை
உண்ண விரும்பி
வாய் திறக்கும்;
தூண்டிலில் சிக்கி
இறக்கும்;
வாயினைக் கட்டுப்படுத்தாது போனால்
வருந்திச் சாக நேரிடும் என்றெனக்குச்
சொல்லித் தந்தது மீன்;

பிங்களா எனும் விலை மாது,
பெரிய விலை கேட்பாள்; தன்
உடல் விருந்து வைப்பாள்;
நாள்பட நாள்பட
அவள் கெட்ட பணம் தர
ஆருக்கும் மனமில்லை;
அங்ஙனம் மனமிருப்போரிடம்
பணமில்லை;
உறங்காது உடல் விற்று
உயிர் வாழ்வதைத் துறந்து,
மகாவிஷ்ணுவை மனதில் நினைத்து
அவர் பக்தையாகிப் போனாள்;
கெட்ட வழி துறந்து
நல்ல வழியில் செல்வதே
நல்லது என்பது
பிங்களா எனக்குச் சொல்லித் தந்தப்
பாடம்;

'குரரம்' எனும்
குருவி,
மாமிசம் ஒன்றைக் கண்டு
கவ்விப் பறந்தது;
மாமிசத்தின் மீது
மையல் கொண்ட பருந்துகள்
குருவியைத் துரத்தின;
ஆசைபட்டப் பொருளை
அப்படியே தூர வீசிவிட்டு
அங்கிருந்து பறந்தது குருவி;
அதனாலே உயிர் தப்பியது;
ஆசை கொண்டு ஒரு பொருளை
அணைத்துக் கிடந்தாள்
அதனால் இன்பம் கிட்டாது,
துன்பமே கிட்டும் என்று
'குரரம்' என்ற அந்தக் குருவி
குருவாய் இருந்து எனக்குச் சொல்லித் தந்தது;

சிறுவன்,
சிறுக் கவலை கூட இல்லாது,
ஆடிப் பாடி ஓடி விளையாடுகிறான்;
பொறாமை, வெறுப்பு, சூழ்ச்சி போன்ற
எந்தத் தீயக் குணமும் மனதில் கொள்ளான்;
எப்பொழுதும் நல்லவனாய் மகிழ்ச்சியாய்
இருக்கிறான்; அதுபோல்
இருப்பார்க்கு அனவிரதமும்
இன்பம் கிட்டும் என்பதைச்
சிறுவனிடம் நான் கற்றப் பாடம்;


தன்னை
மணம் பேச வந்தவர்க்கு
உணவு சமைக்க
நெல் குத்தினாள் பெண் ஒருத்தி;
கையில் இருந்த வளையல்கலெல்லாம்
கலகல என ஒலியெழுப்ப,
ஒன்று ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு
மற்றெல்லாவற்றையும் கழற்றிவைத்து விட்டாள்;
இதிலிருந்து,
ஒன்றாய் எல்லாரும் உரைக்க
சண்டை மூளும்;
ஒன்று மட்டும் தனித்திருந்தால்
அமைதி தரும் என்று
கன்னி எனக்குக்
கற்பித்தாள் பாடம்;


                                                                        ( கீதை தொடரும் )

No comments:

Post a Comment