Monday, December 31, 2012
வாழ்க புத்தாண்டு !
Wednesday, December 5, 2012
கிருஷ்ணாஷ்டகம் 1
மலர்களால் தன்னை அலங்கரித்துக் கொள்ளும்
( தொடரும் )
Wednesday, November 7, 2012
இனி நான் காதலிக்கலாம்
கவிதை பல கிறுக்கலாம்
Thursday, November 1, 2012
எதுவும் இன்னும் மறக்கவில்லை
நெஞ்சை விட்டு நீங்காது நினைவிலிருக்கு;
உன் பார்வை, பரிதவிப்பு,
பள்ளியில் தள்ளி உட்கார்ந்திருந்தும்
கள்ளி நீ என்னோடு
கண்ணால் பேசியது,
மிதிவண்டியில் செல்கையில்
என் மீது மோதியது,
மன்னிக்கச் சொல்லி கை தொட்டுக்
கெஞ்சியது, பின்
கண்ணடித்துச் சிரித்தது ;எதுவும் இன்னும்
மறக்கவில்லை;
தீபாவளி தினத்தன்று
என்னோடு கோவில் வந்தது,
என் பெயர் சொல்லி
அர்ச்சனை செய்தது,
நீ கொஞ்சம் நான் கொஞ்சம் என்று
பிட்டு பிட்டு உண்டது,
என் உடை நனையாதிருக்க
தாவணியைக் குடையாய்ப் பிடித்தது,
எதுவும் இன்னும்
மறக்கவில்லை;
ஒன்றாய் சினிமா சென்றது,
நாயகி சிரிக்க சிரித்தது,
நாயகி அழ அழுதது,
முத்தமிடும் காட்சியில் மட்டும்
முடியாதென முரண்டு பிடித்தது,
எதுவும் இன்னும்
மறக்கவில்லை;
திருவிழாவில் நான் பெண் வேடமிட்டு
ஆடியதைக் கண்டு நீ நானியது,
வளையல் கடை ஆளிடம் சண்டையிட்டு
எனைக் கடை ஆளாய் மாற்றியது,
வளையல் மாட்டி விட்டதற்கு
குறைக்காது கூலி தந்தது,
குச்சி ஐஸ் தின்று
குரல் வராது திண்டாடியது,
எதுவும் இன்னும்
மறக்கவில்லை;
(மறக்காது இருந்தால் தொடரும்)
Friday, July 27, 2012
அரிச்சந்திரன் - 13
தலைவன் அரிச்சந்திரன்
தன் கடமையைச் செய்ய
தயாரானான்;
தலைவியிடம்
தன்னை மன்னிக்கக் கோரினான்;
கணவன்
கையால் மடிவதில்
தனக்குக் கொஞ்சம் கூட
தயக்கமில்லை,
கவலையில்லை,
கடமை செய்,
காரியம் நிறைவேற்று என்று
உற்சாகப்படுத்தினாள்;
வாள் ஓங்கினான் அரிச்சந்திரன்;
கண் மூடித் தயாரானாள் சந்திரமதி;
'நில் அரிச்சந்திரா நில்'
சொல்லிக்கொண்டே,விஸ்வாமித்திரர் அங்கு வந்தார் ;
கண்களில் கண்ணீர் மல்க நின்றார்;
தன்னை மன்னிக்க வேண்டினார்;
வசிஷ்டரிடம் தான் செய்த சபதம் சொன்னார்;
இத்தனைக் கஷ்டம் தந்தது தானே என்று
ஒப்புக்கொண்டார்;
பிள்ளை பொன் பொருள் அரசாங்கம் எல்லாம் திருப்பித் தந்தார்;
காசி அரசனின் பிள்ளையை உயிரோடு எழுப்பி
சந்திரமதி குற்றமற்றவள் என்று நிரூபித்தார்;
அரிச்சந்திரன் வணங்கி நின்றான்;
அவன் சந்ததி அவன் பின்னே நின்றது;
'என்ன வரம் வேண்டுமோ கேள் ?'
என்றார் விஸ்வாமித்திரர்;
'எந்நாளும் எப்பிறவியிலும்
சத்தியம் தவறாது வாழ விளைகிறேன்'
கேட்டான் மன்னன்;
கேட்டதைக் கொடுத்தார் முனிவர்;
கவலை எல்லாம் தீர்ந்தது,
காசி விட்டு அயோத்தி செல் என்று அறிவுறுத்தினார்;
அப்படியே செய்தான் அரிச்சந்திரன்;
அதன்பிறகு அவன் வாழ்க்கை
அணுவளவும் துயரமில்லாது,
அன்போடு சத்திய தர்மத்தோடு
ஆட்சி செய்து வந்தான்;
( முற்றும் )
Thursday, July 26, 2012
அரிச்சந்திரன் - 12
அந்திமக் காரியங்கள் செய்ய
ஆகும் பொருளைத் தர வேண்டும்,
அவரிடம் சென்றுக் கேள்,
அவர் தருவதை வாங்கி வா, என்று
அறிவுறுத்தினான்
அரிச்சந்திரன் தன் மனைவிக்கு,
துணை யாரும் இல்லாதத் துணைவிக்கு;
இதமாய்ப் பேசவேத் தெரியாதவன்,
இம்மியளவும் அன்புடன் நடத்தாதவன்,
இறுதிச் சடங்குக்கா காசு தருவான் ?
இருந்தும் தன் இல்லான் சொல்வதாலும்,
வேறு வழி இல்லாததாலும் சந்திரமதி
தன் பொறுப்பாளனிடம் பொருள் கேட்கப் புறப்பட்டாள்;
அவ்வமயம் விஸ்வாமித்திரர்
அடுத்து ஓர் விஷமம் செய்தார்;
அரிச்சந்திரனுக்கு இன்னொரு சோதனை
தந்தார்;
அவன் மனைவியை இன்னும்
அழ வைத்தார்;
காசி நகரத்து மன்னனின் மைந்தனை
அரண்மனை விட்டு மறையச் செய்தார்;
அரிச்சந்திரனின் இல்லாள் வரும் பாதையில்
அக்குழந்தையை இறந்து கிடக்கச் செய்தார்;
சந்திரமதி தன் பிள்ளையை எண்ணி அழுதுகொண்டே,
நடந்து வருகையில்,
ஒரு மின்னல் பிரகாசிக்க,
அவ்வொளியில் இறந்து கிடக்கும் பிள்ளை
தன் பிள்ளை போல் அவளுக்குத் தோன்ற,
அவள் அருகே சென்று
அப் பிள்ளையைத் தன் மடியில் வைத்து
அரற்ற,
அந்நேரம் அங்கே காவலர்கள் வர,
அரசனின் பிள்ளை இறந்து கிடப்பதைப் பார்த்து,
அவளைக் கைதுசெய்து
அரண்மனைக்கு இழுத்துச் சென்றனர்;
அவளே கொலை செய்தாள் என்று
அவள் மேல் குற்றம் சுமத்தினர்.
விஸ்வாமித்திரர்
அவளைத் தன்னிலை மறக்கச் செய்தார்;
ஏதும் உணராது
பேசாது நிற்கும் படி செய்தார்;
பேதையும் அப்படியே நின்றாள்;
பெயர் யாது என்ற கேள்விக்கும்
பதில் சொல்லாது நின்றாள்;
அரசன் கேள்விக்கு
அசையாது வாய் திறவாது
அழுதபடியே நின்றாள்;
தன் பிள்ளையைக் கொலை செய்த இவள்
தலையை அறுக்க உத்தரவிட்டான் அரசன்;
தண்டனையை அன்றிரவே நிறைவேற்ற
ஆணை பிறப்பித்தான்;
காவலாட்கள் சந்திரமதியை
இழுத்து வந்தனர்;
அரசாணை அறிவித்து
சிரச்சேதம் செய்ய
அரிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்;
தன் மகனின் உடலை எரிக்க,
பொருள் பெறச் சென்ற மனைவியை எதிர்பார்த்துக்
காத்திருந்தவன்
கைதியாய் மனைவியை அழைத்துவந்ததைக்
கண்டு அதிர்ந்தான்;
இவள் குற்றமற்றவள் என்று சொன்னான்;
இருந்தும் அவன் சொல்லைக் கேட்பார் இல்லை;
அரசாணையை நிறைவேற்ற
அவசரப்படுத்தினர்;
அதுவே அவன் கடமை என்று
அறிவுறுத்தினர்;
( தொடரும் )
Thursday, July 12, 2012
அரிச்சந்திரன் - 11
மயானம்;
காவலில் அரிச்சந்திரன்;
அழுதழுது வீங்கியக் கண்களோடு,
உடைந்த நெஞ்சத்தோடு,
வருகிறாள் சந்திரமதி;
காவலுக்கிருப்பவன் தன் கணவன்
என்பதை அறியாள்;
பிணமாய்க்கிடப்பவன் தன் பிள்ளை
என்பதை அறியான்;
பிணத்தை எரிக்க
வரி கேட்டான்,
தன்னிடம் தர ஏதுமில்லை என்று சொன்னாள்;
அடிமையாய் வாழ்வதை
அவனுக்குச் சொன்னாள்;
என் பங்கான
வாய்க்கரிசி, இடைத்துண்டு
இரண்டையும் நான் தள்ளுபடி செய்கிறேன்;
ஆனால் என்னை வேலைக்கு வைத்தவனுக்கு
வர வேண்டிய வரியை தான்
தள்ளுபடி செய்ய இயலாது; அதைத்
தராது பிணத்தை எரிக்க முடியாது;
கண்டிப்பாய்ச் சொன்னான் அரிச்சந்திரன்;
கண்ணீர் தவிர தன்னிடம் தர வேறொன்றுமில்லை
கதறினாள் சந்திரமதி;
பணமாய் இல்லை என்றால் ஏதேனும்
பொருளாய் வரி தா என்றான்;
என்ன இருக்கு என்னிடம் என்றாள்;
இருக்கு உன் கழுத்தில் தாலி,
அதை எடுத்துத் தா என்றான்;
என் கணவரைத் தவிர வேறெவர்க்கும்
என் கழுத்துத் தாலி தெரியாது,
உமக்கெப்படி தெரிந்தது அது
வினவினாள் சந்திரமதி;
அதிர்ச்சி அடைந்தான் அரிச்சந்திரன்;
யார் நீ என்று வினவினான்;
சந்திரமதி தன் விவரம் விளக்கினாள்;
இறந்து கிடப்பது
இளவரசன், தன் பிள்ளை என்று அறிந்தான்;
கதறி அழுதான், தன்
கண்ணீரால் பிணத்தைக் கழுவினான்;
ஆருயிர்ப் பிள்ளை இறந்து கிடப்பதைக் கண்ட பின்னும்
மண்ணில் வாழ வேண்டியிருக்கே என்று மருவினான்;
ஆனாலும் தன் கடமையை மீறாது இருந்தான்;
மகனே ஆயினும், மரணம் உற்ற போதிலும்,
வரி தராது
பிணமெறிக்க முடியாது என்றான்;
( தொடரும் )
Wednesday, July 4, 2012
அரிச்சந்திரன் - 10
அங்கே இன்னொரு இடத்தில்,
அன்னையும் பிள்ளையும்
அவதியடைகிறார்கள்;
அவர்களை ஏலத்திற்கு எடுத்தவன்
அதிக வேலை வாங்குகிறான்;
அடிக்கிறான், திட்டுகிறான்;
பிள்ளையை வேலை வாங்க
அன்னையைத் திட்டுகிறான்;
அன்னையை வேலை வாங்க
பிள்ளையை அடிக்கிறான்;
தளிர் போன்ற பிள்ளையை
தர்பை பறித்து வரச்சொல்கிறான்;
பிள்ளை வரத் தாமதமானால்
அன்னையைத் திட்டுகிறான்;
அன்னை மேல் கொண்ட பாசத்தால்
அதிக நேர எடுத்துக்கொள்ளாது
அந்தணன் சொன்ன தர்பையை
அள்ளி எடுத்து வர எண்ணுகிறான் பையன்;
அந்தோ, அந்த நேரம் ஒரு பாம்பு
பிள்ளையை கடிக்கிறது;
பாம்பின் விடம் தலைக்கேற
பரிதாபமாய் இறக்கிறான்
பிள்ளை;
பிள்ளை வர நேரமெடுப்பது
பார்த்து அன்னை அவனை தேடிவரத்
துடிக்கிறாள்; ஒரு வேலையும் செய்யத் தெரியாத
பாலகன் என்று அழுகிறாள்;
அவதியுறுகிறாள்;
ஆனால் அவளைப் பொருள் தந்து பெற்றவன்
போகத் தடை விதிக்கிறான்;
போனால் வேலை தடையாகும் என்று
காரணம் சொல்கிறான்;
காலம் மாறுகிறது;
பகல் நகர்கிறது;
இரவு வருகிறது;
இனி செய்ய ஒன்றுமில்லை என்ற பின்
சேயைத் தேட தாயை அனுப்புகிறான்;
தாய் தேடி வருகிறாள்,
தன் பிள்ளையைப் பார்க்க ஓடி வருகிறாள்;
பெயர் சொல்லி அழைக்கிறாள்;
கண்ணே மணியே நீ எங்கே என்று கதறுகிறாள்;
பசி மயக்கத்தில் எங்கோ கிடக்கிறானோ ?
பாவிகள் யாரேனும் பிள்ளையை பயமுருத்தினறோ ?
பாதை தெரியாது பாவல் எங்கோ அலைகிறானோ ?
இன்னும் என்னென்னவோ எண்ணி
இங்கு அங்கு என அலைந்தவள்,
முடிவில் கண்டு கொள்கிறான் தன்
மொட்டு மரணமடைந்துக் கிடப்பதை;
எழிலாய் இருப்பவன்
எழாது இருப்பதை;
அன்பான பிள்ளை
ஆருயிர் நீத்துக் கிடப்பதை;
கதறுகிறாள்;
பிதற்றுகிறாள்;
மண்ணில் விழுந்து புரள்கிறாள்;
என்ன செய்வதென்று
ஏதும் தெரியாது விழிக்கிறாள்;
தன் மனதைத் தேற்றிக்கொண்டு
தன் பிள்ளையை சுமந்து கொண்டு
மயானம் நோக்கி நடக்கிறாள்;
( தொடரும் )
Monday, July 2, 2012
அரிச்சந்திரன் - 9
ஒரு யோசனை சொன்னாள்;
தன்னையும் பிள்ளையையும்
அடிமையாய் யாரிடமாவுது
விற்றுவிடச் சொன்னாள்;
விற்று பெற்ற பொருள் கொண்டு
விஸ்வாமித்திரர்க்குத் தந்த சொல் காத்திட
யோசனை சொன்னாள்;
அந்த யோசனை கேட்டு
அரிச்சந்திரன் அதிர்ச்சி அடைகிறான்;
அரற்றுகிறான்;
கண்ணீர் விட்டுக் கதறுகிறான்;
மனைவியும் பிள்ளையும் அவனைத் தேற்றுகின்றனர்;
தங்களுக்கு உதவுவதே எங்கள் கடமை
என்று சொல்லுகின்றனர்;
'நாள் முடிகிறது,
இன்றோடு முனிவர் தந்த தவணை
முடிகிறது;
சீக்கிரம் கடன் முடிக்கவும்,
முடியவில்லை என்றால் அதைச்
சொல்லித் தொலைக்கவும்'
அவரசப்படுத்துகிறான்
முனிவன் அனுப்பிய சேவகன்;
தன் குடும்பத்தை
விற்க முடிவுசெய்கிறான்
முன்னாள் மன்னன்;
'அன்பான காசி நகரத்து மக்களே,
அயோத்தி நகரத்தை
ஆண்ட அரசன் நான்;
அன்று நான் விஸ்வாமித்திரர்க்குத்
தருவதாய்ச் சொன்ன பொருளுக்கு,
இன்று என் மனைவி மகனை
அடிமையாய் விற்க
ஆட்பட்டேன்; என் தேவைக்கேற்ப
பொருள் தருவோர் இவர்களை
அடிமையைக் கொள்ளலாம்'
அறிவித்தான் அரிச்சந்திரன்;
அவ்ஊரிலே பணக்காரர் வந்தார்;
அரிச்சந்திரன் கேட்கும் பொருள் தந்தார்;
அடிமைகளாய் வாங்கியவர்களைத் தன்னோடு
அழைத்துச் சென்றார்; விஸ்வாமித்ரர்
அனுப்பிய சீடன்
அரிச்சந்திரன் கடன் தீர்ந்தது என்று சொன்னான்;
இருந்தும் தன் அன்பு மனைவி மகனைப் பிரிவதை எண்ணிக்
கண்ணீர் வடித்தான் அரிச்சந்திரன்;
அம்மட்டும் தான் சொன்ன சொல்லைச் காக்க உதவியதற்கு
அந்த காசி நாதனை வணங்கி நன்றி சொன்னார்;
தான் இனி போகலாமா என உத்தரவு கேட்டார், அந்தணணிடம்;
தனக்குத் தர வேண்டிய தரகு பாக்கி, அதைத்
தந்து விட்டு செல், அந்தணன் சொன்னான் அரசனிடம்;
தரகு தருவதாய்ச் சொல்லவில்லை என்றான் அரிச்சந்திரன்;
தரகு தராது கணக்கு முடிவதில்லை என்றான் அந்தணன்;
தராது போனால் விஸ்வாமித்ரரின் பொருளில்
தன் தரகை எடுத்துக் கொள்கிறேன் என்றான்;
தன் மனைவி மக்களை விற்றவன்
தன்னை விற்க தயங்குவானா என்ன ? அரிச்சந்திரன்
தன்னை அடிமையாக விற்றான்; அதில் கிட்டியதை
அந்தனனுக்குத் தந்தான்;
அரிச்சந்திரனை அடிமையைக் கொண்டவன்
அவ்வூரில் சுடுகாட்டைக் காப்பவன்;
அவ்வேளை முதல் அரிச்சந்திரனை
அச்சுடுகாடு காக்கும் வேலை செய்யப் பணிந்தான்;
அந்தணன் தன் பொருள் பெற்றுக் கொண்டு
அவ்விடம் விட்டகன்றான் ;
( தொடரும் )
Saturday, June 30, 2012
அரிச்சந்திரன் - 8
அடர்ந்த காடு
தளர்ந்த நடை
கஷ்டப்பட்டு கடக்கிறார்கள்
பசியால் மகன் வாடுகிறான்,
நீர் வேண்டி மனைவி வேண்டுகிறாள்;
விசுவாமித்ரரின் சீடன் தனக்கு
பணிவிடை செய்ய ஆணை இடுகிறான்;
அல்லல் படுகிறான் அரிச்சந்திரன்;
'பொருள் தர முடியாதெனச் சொல்,
உடன் நான் திரும்பிச் செல்கிறேன்,
உனை இக்கணமே விட்டு
விலகிச் செல்கிறேன்;
உன் கஷ்டம் உன்னோடு,
நானேன் கஷ்டப்பட வேண்டும் உன்னோடு,
விளக்கம் இருக்கா, சொல்லிடு ?'
பொறுத்துக்கொள்ளக் கெஞ்சினான் அரிச்சந்திரன்;
‘போதாது இன்னும் உண்ணக் கொடு,
குடிக்க நீர் கொடு’
எல்லாம் எனக்குக் கொடு,
கூடவே வந்து
கேடு செய்தான்,
தொல்லை தந்தான்
மனைவி தன் தாகம் பொறுத்துக் கொண்டாள்.
மகன் தன் பசி மறந்துத் தொடர்ந்தான்.
காட்டு வழி வந்தவர்,
காசி அடைந்தனர்;
தம் கஷ்டங்கள் தீர
மனமுருகி வேண்டினர்;
'காசி விஸ்வநாதா,
எம்மைக் காத்திடுவாய்.
கெடுதி எது வந்த போதிடினும்
தர்ம நெறி தவறாது வாழ வழி செய்வாய்.
எப்பிறப்பிலும்
எப்பாவம் செய்திட்ட போதிடினும்
எமை மன்னித்து அருள்வாய்.
சொன்ன சொல் தவறாது வாழ
சொக்கநாதா அருள் புரிவாய்.
ஒன்றுமறியா பாலன்
எம்மோடு துயரடைகிறான்.
அவனுக்கு எத்துயரும் நேராது
தயை செய்திடுவாய்'.
அப்பொழுது சந்திரமதி
ஒரு யோசனை சொன்னாள்;
தன்னையும் பிள்ளையையும்
அடிமையாய் யாரிடமாவுது
விற்றுவிடச் சொன்னாள்;
விற்று பெற்ற பொருள் கொண்டு
விஸ்வாமித்திரர்க்குத் தந்த சொல் காத்திட
யோசனை சொன்னாள்;
அந்த யோசனை கேட்டு
அரிச்சந்திரன் அதிர்ச்சி அடைகிறான்;
அரற்றுகிறான்;
கண்ணீர் விட்டுக் கதறுகிறான்;
( தொடரும் )
Thursday, June 28, 2012
அரிச்சந்திரன் - 7
அயோத்தி அரண்மனை,
அரிச்சந்திரன் வந்தான்,
ஏனைய அமைச்சர்களும் வந்தனர்,
விஸ்வாமித்திரர் வந்தார்,
அவர்தம் சீடர்களும் வந்தனர்,
நாட்டை தாரை வார்த்துக் கொடுக்கத் தயாரானான்
அரிச்சந்திரன்;
'அவசரப்பட்டு முடிவெடுக்காதே,
அப்புறம் சங்கடப்படாதே'
விஸ்வாமித்திரர் சொன்னார்;
'முனிவரே, சொன்ன சொல் மாற மாட்டேன்;
நாடு மக்கள் அரண்மனை அதைச் சேர்ந்த சொத்து செல்வம்
பொன் பொருள் எல்லாம் இனி உமக்குச் சொந்தம்,
இவற்றோடு எமக்கினி
இல்லை பந்தம்';
'நீ உன் மனைவி மகன் எல்லோரும்
அணிந்திருக்கு ஆடையையும்
அவிழ்த்து விட்டு,
துறவாடை தரித்து
தூரச் செல்லுங்கள்'
'அப்படியே செய்கிறேன், ஆணைப்படி
உமது சொல்படி';
தன் குடும்பத்தாரோடு
தனியே நடக்கத் தொடங்கினான்
தலைவன்;
'அரிச்சந்திரா நில்'
அழைத்தார் முனிவர்;
'யாகம் செய்ய
எனக்குத் தருவதாய் வாக்களித்தப்
பொருள் எங்கே ? - அதைத்
தந்து விட்டுச் செல்'
'சுவாமி,
அப்பொருள் மிக பத்திரமாய்
அரண்மனைக் கருவூலத்தில் உள்ளது;
எடுத்து வரவா இப்பொழுது ?'
'யாருடைய கருவூலத்தில்?'
'என் ... மன்னிக்கவும், தங்களுடைய கருவூலத்தில்'
'என் கருவூலம் பணத்தை
எனக்கு தருவது தான் தானமா ?
இது தான் நீ கற்ற தர்மமா ?'
'....'
'எனக்குத் தருவதாய் சொன்னப் பொருளை
எப்படித் தரப்போகிறாய் ?
எப்பொழுது தரப்போகிறாய் ?'
'சுவாமி, எனக்குக் கொஞ்சம் தவணை தர வேண்டும்,
தங்கள் பொருளைத் தந்து விடுகிறேன்,
தயை காட்ட வேண்டும்'
'ம்ம்ம்ம் ... சரி என் சீடனை உன்னோடு அழைத்துச் செல்,
உனக்கு 15 நாள் தவணை,
அதற்குள் எனது பொருளை ஒப்படைத்துவிடு,
என் பொருள் என்னிடம் வரும் வரை,
எனது சீடன் உன்னுடன் இருப்பான் தவறில்லை,
அவனுக்கு ஒரு குறையும் நேராது காப்பது உன் கடமை'
'அப்படியே ஆகட்டும்'
'அரிச்சந்திரா,
ஒரு சொல் மாற்றிச் சொல்,
பொருள் தருவதாய் நான் சொல்லவில்லை,
என்று மட்டும் சொல்,
மாறிடும் உன் நிலைமை,
சம்மதமா சொல், உன்
சங்கடம் மாற்றுவேன் ஒரு பொழுதில்'
'சுவாமி, சத்தியம் தருமம் வீழ வாழ மாட்டேன்,
சொன்ன சொல் தவற மாட்டேன்'
'சரி, நீ செல்க,
15 நாளில் பொருள் திருப்பித் தருக,
என் சீடனை அதுவரை உன்னோடு கொள்க,
ஆசி'
அரிச்சந்திரன் அரண்மனை விட்டுச் செல்கிறான்,
அவனைத் தொடர்ந்து அவன் குடும்பம்,
அவர்களைத் தொடர்ந்து விஸ்வாமித்திரரின் சீடன்,
அதன் பின் அமைச்சர்கள், காவலாட்கள்,
அவர்களைத் தொடர்ந்து
அயோத்தி நகரத்து மக்கள்,
கலங்கியக் கண்ணோடு,
கனத்த நெஞ்சோடு;
( தொடரும் )
Tuesday, June 26, 2012
அரிச்சந்திரன் - 6
விஸ்வாமித்ரர் வந்தார்; தன் கூடவே
வஞ்சியர் இருவரையும் அழைத்து வந்தார்;
பொய்க் கோபத்தோடு
புரவலனிடம் பேசினார்;
'அடேய் அரிச்சந்திரா,
அடுக்குமா நீ செய்த காரியம் ?
அரசனுக்கு இது தகுமா ?
அழகியர் இருவரையும் ஆட வைத்து, பின்
அவர் யாசிப்பதை தர மறுப்பது நியாயமா ? தர்மமா ?
அணுவளவும் வழுவா செங்கோல் ஆட்சி இதுவா ?
இவர்களை அவமதிப்பது
இவர்கள் கற்ற கலையை அவமதிப்பதாகும்;
இங்ஙனம் இவர்கள் கற்ற கலையைப்
பயிற்றுவித்த என்னை அவமதிப்பதாகும்;
இது நியாயமாகும் ?'
அடுக்கடுக்காய்க் கேள்விக்கணை வீசினார் முனிவர்;
அவர் முடிக்கும் மட்டும் காத்திருந்த அரசன்,
அடுத்து தன் நியாயத்தை ஓதினான்;
அப்பெண்டீர் கேட்டது அதர்மம் என்றான்;
அவ்வழியில் தான் செல்வது அடாது என்றான்;
அவரையே தர்மப்படி ஒரு வழி சொல்லப் பணிந்தான்;
அங்ஙனம் அவர் சொல்வதை
அரசன் தான் செய்வதாய் ஒப்பினான்;
'அரிச்சந்திரா,
அரசனென்ற ஆணவம் உன்னை
ஆட்டிவிக்கிறது;
அதை நான் போக்குகிறேன்;
அதற்கு உன் அரசை
அடியேனுக்கு தாரை வார்த்துக் கொடு'
'அவ்வாறே தர
ஆவலாய் இருக்கிறேன்
அருள்கூர்ந்து பெற்றுக்கொள்ளவும்'
அரசன் சொன்னதைக் கேட்டு
அந்தணர்
ஆச்சரியம் அடைந்தாலும்
அதை வெளிக்காட்டாது,
'அந்தி வேளை இது,
அடுத்த நாள் காலை
அரண்மனை வருகிறேன்,
அயோத்தியை என்னிடம் தந்துவிட்டு
அப்படியே நீ சென்று விடு.'
ஆணையிட்டார்,
அரசன் சம்மதித்தான்;
நாட்டை ஆளப்போகும் முனிவன்
காட்டு வழி சென்றான்;
காட்டில் வாழப்போகும் அரசன்
நாட்டு வழி சென்றான்;
( தொடரும் )
Sunday, June 24, 2012
அரிச்சந்திரன் - 5
விஸ்வாமித்ரர் வந்து,
யாகம் செய்ய பொருள் வேண்ட,
அரசனும் அதைத்தருவதாய்
வாக்குத் தர,
வாக்கு பெற்றுக்கொண்டு
வந்த வழி முனிவர் திரும்ப,
அதனைத் தொடர்ந்து
அரசனைக் காண
அயோத்தி மக்கள் வர,
தங்கள் வயலை
சேதப்படுத்தும் மிருகங்களை
வேட்டையாட அவர்கள் உதவி கேட்க,
அரசன் கிளம்பினான் வேட்டைக்கு;
தன் மக்களின் உதவிக்கு;
வேட்டை நடந்தது;
வயலை நாசமாக்கும்
விலங்கினங்கள் வீழ்த்தப்பட்டது;
வேட்டையாடி களைத்தவர்களுக்கு
ஓய்வு தேவைப்பட்டது;
அரசரும் மற்றவர்களும்
ஆங்காங்கே ஓய்வெடுத்தனர்;
அப்பொழுது இரு மங்கையர்
அரசனைக் காண வந்தனர்;
அழகாய் நாட்டியம் ஆடுவோம்,
அந்தக் குயிலைப் போல் பாடுவோம்,
அதைக் கண்டு கழிக்க வேண்டும் தாங்கள்,
தாங்கள் புகழ்ந்தால்
மகிழ்வோமே நாங்கள்;
ஆணை வந்தது;
ஆட்டம் நடந்தது;
ஆடினார், பாடினர்
அழகு காட்டு
அதிசயக்க வைத்தனர்;
அரசன் மகிழ்ந்தான்,
அழகாய் முத்து மாலை
அன்புப் பரிசாய்த் தந்தான்;
'ஏராளமாய்ப் பொன் பொருள்
இருக்கு எங்களிடம்,
எனவே இதை வைத்துக்கொள்ளும்
தாங்கள் தங்களிடம்'
என்று சொல்ல,
வேறென்ன வேண்டும் என வினவ
'வேந்தே தங்கள் செங்கோல் எங்கட்கு
வேண்டும்' எனச் சொல்ல,
'தலைவன் தன் செங்கோலையும்,
தலை மகுடத்தையும்
தானமாய்த் தருவது
சத்திய நெறிக்கு ஒவ்வாது,
வேறேதும் கேளுங்கள்' என்றான்.
'சரி எங்களை
விவாகம் செய்து கொள்ளுங்கள்' என்றனர்;
'வஞ்சியரே, நான் ஏகபத்னி விரதம் கடைபிடிப்பவன்,
இன்னொரு மணம் செய்ய மனம் ஒப்பாதவன்,
வேறேதும் ... '
'மன்னா,
எங்களை ஆட வைத்து,
பாட வைத்து,
பின் நாங்கள் கேட்டதை
கொடுக்க மறுக்கும் தங்களைக்
கேள்வி கேட்க ஒரு
துணையோடு வருவோம்'
எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து
விரைந்தனர்;
அடுத்த சிறிது நேரத்திற்கெல்லாம்
அங்கே வந்தார் விசுவாமித்திரர்
அந்தப் பெண்களோடு,
கண்ணில் கோபத்தோடு,
நெஞ்சில் வஞ்சத்தோடு;
( தொடரும் )
Thursday, June 21, 2012
அரிச்சந்திரன் - 4
கனவுகளால்
களைத்துப் போனாலும்
அரிச்சந்திரன்
அரசவையில்
அமைச்சர்களுடன்
ஆலோசித்து
அன்றைய கடமைகளை
ஆற்றிவந்தான்;
அப்பொழுது
அங்கு வந்தார்
முனிவர் விஸ்வாமித்திரர்;
மன்னவன் வரவேற்றான்;
வணங்கினான்;
முனிவருக்கு பணிவிடை செய்தான்;
உட்கார ஆசனம்,
உண்ண அன்னம்
எல்லாம் ஏற்பாடாயிற்று;
வந்த வேலை என்ன என்று வினவினான்,
தன்னால் ஏதும்
தொண்டு செய்ய முடிந்தால் மகிழ்வேன் என்றுரைத்தான்;
'அரிச்சந்திரா,
அயோத்தியின் மன்னா,
யாம் யாகம் ஒன்று செய்யவிருப்பதால்,
எமக்குப் பொருளுதவி வேண்டும்,
எனவே உம்மை நாடி வந்தோம்;
உதவி செய்வாய் என்று நம்புகிறோம்;
என்றுரைத்தார்';
'சுவாமி,
தாங்கள் சொல்லி அனுப்பினால் போதுமே,
இந்த நாடே தங்கள் பின்னே நிற்குமே,
எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்;
எல்லாமே தங்களுக்குத்தான்'
சொல்லி நின்றான் மன்னன்;
இவ்வளவு நல்லவனான
இவனையா சோதிப்பது
என்று எண்ணாது
எள்ளி நகைத்தப்படி தள்ளி நின்றார் முனிவர்;
'மன்னா,
மகிழ்ச்சி;
பொன் எனக்கு இப்பொழுது வேண்டாம்;
பத்திரமாய் என் பொன் உன்வசம் இருக்கட்டும்;
யாகம் பொருட்டு வேறு சில வேலை
இருக்கு;
அவற்றை முடித்து விட்டு வருகிறேன்;
வந்து உன்னிடம் பொன் வாங்கிச் செல்கிறேன்;
இப்பொழுது கிளம்புகிறேன்'
என்று சொல்லிப் புறப்பட்டார்
ஒரு புயலை உருவாக்கி,
அது ஏற்படுத்தும் சேதம் எதுவும் அறியாது
அவருக்கு விடை கொடுத்தான் தலை வணங்கி;
( தொடரும் )
Tuesday, June 19, 2012
அரிச்சந்திரன் - 3
சக்கரவர்த்தி அரிச்சந்திரன் தன் மனைவி
சந்திரமதியுடன், கூடவே
சாந்தமே உருவான புத்திரனுடன்
சயனித்திருக்கிறான்.
விடிகாலைப் பொழுது;
விடிய இன்னும் நேரம் இருக்குப் பொழுது
அரிச்சந்திரன் ஒரு கனவு கண்டான்.
அதிர்ச்சியில் விழித்துக்கொண்டான்;
இருள் போக்கும் வெள்ளி
தன் கவலை தீர வழி காட்டும்
என எண்ணிக் காத்துக் கிடந்தான்;
கனவின் காரணம் தேடிக் கிடந்தான்;
முகம் வாடிக் கிடந்தான்;
அவ்வமயம்
அரிச்சந்திரன்
அன்பு மனைவியும் கனவொன்று காண,
அடுத்தகணமே அஞ்சி
அலறினாள்;
கணவன் தேற்றினான்;
கண்ட கனவு யாது என்று வினவினான்;
"காவலா, தங்களைக்
கருப்பு நிறப் பாம்பு ஒன்று
சுற்றிக் கொள்கிறது,
சிம்மாசனத்திலிருந்து உங்களை அது
கீழே தள்ளுகிறது;
தப்பிக்க முடியாது
தவிக்கிறீர்கள் நீங்கள்;
பின் ஒருவாறு அந்தப்
பாம்பைக் கொன்று
எழுந்து வருகிறீர்கள்;
என்ன ஒரு கொடுமையானக் கனவு"
நடுநடுங்கியே
நவின்றாள் தலைவி;
நல்லதே நடக்கும், நம்பி இரு என்று
ஆசுவாசப்படுத்தினான்
நாடாளும் தலைவன்;
மேலும் தொடர்ந்து பேசினான்;
‘கண்மணி
கலங்காதே,
அந்த ஈஸ்வரன் கிருபையால்
நமக்கு ஒரு ஆபத்தும் நேராதே;
அவனின்றி ஒரு அணுவும் அசையாதே;
நானும் கண்டேன் ஒரு சொப்பனம்;
அதைக் கண்டது முதல் காணவில்லை சயனம்;
நமைக் காக்கும் சிவம்;
அவனே இதற்கு நிவாரணம்';
தாங்கள் கண்ட கனவு யாதென்று
வினவினாள் தமயந்தி;
விளக்கினான் அவள் தலைவன்;
தமயந்தி,
என் கனவில்
உன்னைத் தவிர இரண்டு மனைவியர் எனக்கு;
அவர்களில் ஒருவரை
அரக்கன் ஒருவன்
அபகரிக்கிறான்;
அதையும் தொடர்ந்து
அன்பே நீ என்னை விட்டு பிரிய நேர்கிறது;
இன்னொருத்தி பிரியாது என்
இணையாய் இருக்கிறாள்;
இவ்வளவு இக்கட்டுக்குப் பின்
பிரிந்த இருவரையும் ஒருவாறு
மீண்டும் இணைய முடிகிறது;
சொல்லி முடித்தான் அயோத்தி அரசன்;
சொல்ல முடியாத் துயரம் கொண்டாள் அரசி;
அரசனை விட்டு
அணுவளவும் இதுவரை பிரியாத கற்புக்கரசி;
( தொடரும் )
Sunday, June 17, 2012
அரிச்சந்திரன் - 2
கலகம் நிகழும் இடத்தில்
இருப்பது தானே
கழகப் பிரியர் நாரதரின் விருப்பம்;
நாரதரும் வந்தார்;
விஸ்வாமித்ரரைக் கண்டார்;
யாது செய்தி என்று வினவினார்;
விஸ்வாமித்ரர் விவரித்தார்;
வினை முடிக்க துணை புரியக் கேட்டார்;
அரிச்சந்திரனைப் பொய் சொல்ல வைப்பது
முடியாத காரியம் என்றும்,
அதர்மப் பாதையில்
அரிச்சந்திரன் எந்நாளும் செல்லான் என்றும்
எடுத்துரைத்தார் நாரதர்;
உண்மையை வரவழைப்பது அரிது;
பொய் சொல்ல வைப்பது எளிது;
எனக்குத் துணைபுரி,
உனக்கு நான் வேண்டும்போது உதவி புரிவேன், இதை அறி;
உரைத்தார்
அரசனாய் இருந்து முனிவனாய் மாறியவர்.
ஓர் உபாயம் தந்தார்
முனிவனாகவே வாழ்பவர்;
"ஏதாவது யாகம் செய்வதாய்ச் சொல்லி
பொருள் கேளும்,
தருவதாய் வாக்குத் தருவான்;
பின் அவன் வாக்கு தவறும்படி,
இல்லை என்று சொல்லுப்படி
பெரும் பொருள் படை எல்லாம் கேளும்;
இத்தோடு ஏதும் உபாயம் செய்து
அவனைச் சத்தியம் தவறச் செய்யும்;
இருந்தும் எனக்கு நம்பிக்கை இல்லை,
அவன் பெருந்தன்மைக்கு வானமே எல்லை;
இல்லை என்று சொல்ல அவன் நா
எழுந்ததேயில்லை;
தந்த வாக்கை
தலை விற்றாவது
நிறைவேற்றுவான் அரிச்சந்திரன்";
சொல்லி முடித்துக் கிளம்பினார் நாரதர்;
தான் சொன்ன படி செய்து முடிக்கக்
கிளம்பினார் விஸ்வாமித்திரர்;
( தொடரும் )
Thursday, June 14, 2012
அரிச்சந்திரன் - 1
அரிச்சந்திரன்,
அயோத்யா நாட்டு
அரசன்;
அறநெறியில் வாழ்பவன்;
சத்ய விரதம்
பூண்டவன்;
சத்தியம் தர்மம்
பிறழாது வாழ்பவன்;
உண்மை ஒன்றே
உரைப்பவன்;
உண்மை அற்றவற்றை
உரைக்காதவன்;
சொன்ன சொல் தவறாதவன்;
அற வழியில் நடப்பவர்க்கு
ஆயிரம் சோதனை வரும்;
அரிச்சந்திரனுக்கும்
அதுபோல் சோதனை வந்தது;
அவதி வேதனை
அவனை நாடி வந்தது;
விஸ்வாமித்ர முனி
வேடத்தில் வந்தது;
தேவேந்திரன் திருச்சபை
ஒரு நாள்
இந்திரனும் மற்ற தேவர்களும்
சபையில் கூடி இருக்கையில்,
விஸ்வாமித்ரர் மற்றும்
வசிஷ்டர் ஆகியோரும் அங்கு இருக்கையில்,
வசிஷ்டர்,
தன் சிஷ்யன்
அரிச்சந்திரன்
சத்ய தர்மம் பிறழாது வாழ்பவன்
என்று சொல்ல,
அவனை சோதித்து
அறவழி தவிர்க்க வைப்பேன்,
அப்படி இல்லாது போனால்
என் தவ வலிமையில் பாதி தருவேன்
என விஸ்வாமித்ரர் சூளுரைக்க,
இப்படியாக ஏற்பட்டது
அரிச்சந்திரனுக்கு இக்கட்டு;
இதற்கென குறிக்கப்பட்ட காலம்
ஒரு ஆண்டு;
இது அரிச்சந்திரன் மேலுள்ள கோபத்தால்
ஏற்பட்டதன்று;
வசிஷ்டரே உம்முடைய கர்வத்தை அடக்கும் பொருட்டே
ஏற்பட்டது
என உரைத்து அவ்விடம் விட்டு நகர்ந்தார்
விஸ்வாமித்ரர்.
( தொடரும் )
Friday, June 1, 2012
முருகா
முருகா ! முருகா ! முருகா ! - - எமக்குத் துணையாய் வருவாய் அருள்வாய். கந்தா கடம்பா கதிர்வேலா - எம் கவலைகளைப் போக்கி நீ அருள்வாய். ஆறுமுகனே - அபயம் அளிப்பவனே அழகனே அண்டம் காத்திடத் துணை புரிபவனே, சண்முகா - எம் சங்கடங்களை தீர்த்திட வா ! பார்வதியின் புத்திரனே - எம் பாவங்களைப் போக்கி அருள்பவனே, சிக்கல் சிங்காரவேலவா, சீக்கிரம் எம்முன் வா வா வா; |
கதிர்காம வேலவனே - எம் கவலைகளைத் தீர்ப்பவனே, கார்த்திகை மைந்தனே - நீவிர் வாழி வாழி வாழியவே ! பரமேஸ்வரன் புத்திரா, பார்வையில் சுந்தரா, பக்தர்களின் மித்திரா - நீவிர் வாழி வாழி வாழியவே ! பார்வதிக்கு மகனே, பானை வயிறோனுக்கு இளையோனே, பழனி மலையோனே - நீவிர் வாழி வாழி வாழியவே ! |
Monday, May 7, 2012
போகிறேன் நான் ...
அலுவலகம் இனி செல்ல வேண்டாம் - திங்கள் காலை
அதிர்ச்சி கொண்டு எழுந்திரிக்க வேண்டாம்;
என்னால் முடியாத வேலை சொல்லி இனி
எனை இம்சிக்க முடியாது;
எனக்குப் பிடிக்காத வேலையைச் சொல்லி
நச்சரிக்க முடியாது;
அரசியல் அவதிகள் எனக்கில்லை;
அடுத்து அவரா இவரா - அவசியமில்லை;
வயிறு என்னை மிரட்டாது;
இரவு என்னை விரட்டாது;
கோபம் கொள்ள வேண்டாம்,
பாசம் கொண்டு பரிதவிக்க வேண்டாம்;
அழகான பெண்கள், ஆசையாய்ப் பார்க்க முடியாது;
அவ்வரை மட்டும் வருத்தமே;
என் உடலை
எரிக்கிறார்கள்;
எனக்கெந்த வேதனையும் இல்லை;
நேராய்ப் போகிறேன் - நரகத்திற்கு;
வணக்கம், வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
Monday, April 30, 2012
உழைப்பாளர் தினம்
உழைப்பின் உன்னதம் புரியும் வரை
உழைத்திடு;
உழைத்து உழைத்து ஓடாய்த்
தேய்ந்திடு மனிதா
உழைத்து உழைத்து ஓடாய்த்
தேய்ந்திடு, ஆனாலும்
உழைத்திடு;
உண்டு
உட்கார்ந்து
உறங்கி
உருண்டையாய்
உருமாறுவதை விட
உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்வது
உன்னதம் என்பதை
உணர்ந்திடு;
உழைத்து வாழ்வோர் சிலர்;
உட்கார்ந்து அந்த
உழைப்பின் பலனை
உறிஞ்சுவோர் பலர்; எனினும்
உழைப்பை
உதறாதே, என்றும் மறவாதே;
உழைத்தவர்
உயர நாளாகும், ஆனால்
உயர்வார் ஒருநாள்;
உழைப்பை உறிஞ்சியோர்
உடனே உயர்வர்; ஆனால்
உயரத்திலிருந்து உடனே வீழ்வர்;
உழைப்பே
உன் இலக்கு; அதுவே
உனக்கு விடியல் தரும்
கிழக்கு;
உழைப்பதில் இல்லை
இழுக்கு;
உழைத்து உழைத்து
வாழப் பழகு;
உழைத்திடு மனிதா உழைத்திடு
உழைப்பின் உன்னதம் புரியும் வரை
உழைத்திடு;
Monday, April 23, 2012
தெரு பிச்சைக்காரர்
Friday, April 20, 2012
அது ஒரு காலம்
இனிப்பாய் நான் தரும் சாக்லேட்ஸ்;
பல வண்ணத்தில் நீ செய்யும் அன்னங்கள்;
கை வண்ணத்தில் நான் வரைந்த கிறுக்கல்கள்;
என் சீண்டல்களும், உன் சிணுங்கல்களும்;
கோபப் பார்வை நான் பார்க்க, கண் உருட்டி நீ முறைக்க,
ஆசையாய் நான் கண் நடிக்க,
அதிர்ந்து நீ எழுந்து ஓட
உம்ம்ம் ...
அது ஒரு காலம்;
இனி கனவுகளில் மட்டும்;
Monday, April 16, 2012
ஏனாதிநாத நாயனார் - 3
வரைமுறைகள் வகுக்கப்பட்டது;
வாள்வீசிப் போர் புரிய
தேதி குறிக்கப்பட்டது;
தன் நெற்றியில் இதுவரை
திருநீறு அணியாதத்
தீயவன் ஆதிநாதன்,
திருநீறு அணிந்த எவரையும்
தீங்கு செய்யார் ஏனாதிநாதர் என்றறிந்திருந்ததால்,
தன் நெற்றியில்
திருநீறு அணிந்துகொண்டான்;
கேடயத்தால் திருநீறு வெளியே தெரியாது மறைத்துக் கொண்டான்;
போர் புரியக் குறிக்கப்பட்ட இடம் நோக்கிச் சென்றான்;
ஏனாதிநாதர் தன்
எதிரியை
எதிர்பார்த்துக் காத்திருந்தார்;
போர் துவங்கியது;
வீரம் கை ஓங்கியது;
தன்னால் இதற்குமேல்
தாங்க முடியாதென்ற நிலை வந்ததும்,
தன் கேடயத்தை விலக்கி
திருநீறு அணிந்தத் தன் நெற்றியைக்
காண்பித்தான்;
கைவா ளுடன் பலகை நீக்கக் கருதியது
செய்யார் நிராயுதரைக் கொன்றார் எனுந்தீமை
எய்தாமை வேண்டும் இவர்க்கென் றிரும்பலகை
நெய்வா ளுடன்அடர்த்து நேர்வார்போல் நின்றார்
ஏனாதிநாதர் அதிர்ந்தார்;
போர் புரியாது சிலையாய் நின்றார்;
கைவாள் கீழே வீசினால்
நிராயுதபாணியைக் கொன்ற பலி
சிவவேடம் தரித்தவனுக்கு வருமென்பதால்
போர் புரிவது போல் நடித்தார்;
இதுவே தக்கத் தருணம்
என்றெண்ணி ஆதிசூரன்
ஏனாதி நாதரை வாளால் குத்திக் கொன்றான்;
எதிரியை வென்றேன்
என வீறு கொண்டு சொன்னான்;
தீயவன் எனினும்
திருநீறு அணிந்தவனுக்கு
தீங்கு ஏதும் நேராது
தயை புரிந்த ஏனாதி நாதருக்கு
எம்பெருமான் சிவன் பார்வதியோடு
தரிசனம் தந்து
தன் வசம் கொண்டார்;
ஓம் நமசிவாய
Saturday, April 14, 2012
ஏனாதிநாத நாயனார் - 2
வாள் பயிற்சியால்
வந்த வருமானம் எல்லாவற்றையும்
வரும் போகும் சிவனடியார்களுக்கு
வாரிவழங்கினார்; இவ்வாறவர்
வாழும் ஊரிலே
வாழ்ந்து வந்தான்
ஆதிசூரன் எனும்
அயோக்கியன்;
அவனும் சொல்லித்தந்தான்
அண்டியோர்க்கெல்லாம் வாள்பயிற்சி;
ஆனாலும் அவனை நாடிச் சென்றோரில்லை;
சுத்தமில்லா நீரைச் சுவைப்பாரில்லை;
நாளுக்கு நாள்
தனக்கு வருவாய் வராது குறைவதையும்,
தான் வறுமையில் வாடுவதையும்,
தன் எதிரி ஏனாதி நாதருக்கு வருவாய் அதிகரிப்பதையும்
அறிந்த ஆதிசூரன்,
ஏனாதி நாதரை
எதிர்த்து போர் புரிந்து வீழ்த்திட
எண்ணினான்;
தன்னோடு சிலரைக் கூட
அழைத்துக்கொண்டான்;
ஏனாதி நாதரைப் போருக்கு
அழைத்தான்;
அவ்விருவருள் எவர் வலியவரோ
அவரே போர் வாள் பயிற்சி
அளிக்கத் தகுந்தவர் என்று சொன்னான்;
ஏனாதிநாதர் இசைந்தார்;
எதிரியோடு போர் புரிந்தார்;
போரில் தோற்றான்;
புறமுதுகு காட்டிப் பறந்தான்;
எண்ணியப்படி நேரெதிர் போர் புரிந்து
ஏனாதினாதரை வீழ்த்த முடியாதென்பதை
அறிந்து கொண்டான்
ஆதிசூரன்;
நயவஞ்சகன்
குறுக்கு வழியில்
எதிர்க்கத் துணிந்தான்.
எப்படி என்ன செய்வதென்று
யோசித்தான்;
சேட்டாருங் கங்குல்
புலர்காலைத் தீயோனும்
நாட்டாரைக் கொல்லாதே
நாமிருவெம் வேறிடத்து
வாட்டாயங் கொள்போர்
மலைக்க வருகவேனத்
தொட்டார்பூந் தாரார்க்குச்
சொல்லி வரவிட்டான்.
இருவருள் ஒருவர் உயிரோடு
இருக்கும்வரை,
இடைவிடாது போர் புரிய வேண்டும்,
இம்முறை தனியே ஓரிடத்தில்
அப்போர் நிகழ வேண்டும்;
அயலார் யாரும்
அவ்விடத்தே வருதல்
தவிர்க்கப்பட வேண்டும்;
வரைமுறைகள் வகுக்கப்பட்டது;
வாள்வீசிப் போர் புரிய
தேதி குறிக்கப்பட்டது;
( தொடரும் )
Thursday, April 12, 2012
ஏனாதிநாத நாயனார் - 1
சோழ நாட்டில்,
சோலைகள் நிறைந்த
மலர்கள் மலர்ந்து மனம் வீச,
வண்டுகள் ரீங்காரமிட,
வயல்கள் நிறைந்த,
குளுமையான ஒரு ஊர்
எயினனூர்.
உயரமாய்
வளர்ந்து நிற்கும் கரும்புகளின்
உயரத்தை விட
உயர்ந்து வளரும்
நெற்பயிர்கள்
நிறைந்த அவ்வூரில்
செல்வச் சிறப்பொடு
அடியார்களுக்குத் தொண்டு செய்து,
வாழ்ந்து வந்தார்
ஏனாதி நாதர்.
தொன்மைத் திருநீற்றுத்
தொண்டின் வழிபாட்டின்
நன்மைக்கண் நின்ற
நலமென்றும் குன்றாதார்
மன்னர்க்கு வென்றி
வடிவாள் படைபயிற்றும்
தன்மைத் தொழில்
விஞ்சையில்தலைமை சார்ந்துள்ளார்.
நெற்றியில் திருநீறு பூசி,
நெஞ்சில் சிவபூசை செய்து,
வாயில் சிவநாமம் சொல்லி, மன்னனின்
படை வீரர்களுக்கு
வாள்போர் பயிற்சி
தந்து வந்தார்;
வாள் பயிற்சியால்
வந்த வருமானம் எல்லாவற்றையும்
வரும் போகும் சிவனடியார்களுக்கு
வாரிவழங்கினார்; இவ்வாறவர்
வாழும் ஊரிலே
வாழ்ந்து வந்தான்
ஆதிசூரன் எனும்
அயோக்கியன்;
அவனும் சொல்லித்தந்தான்
அண்டியோர்க்கெல்லாம் வாள்பயிற்சி;
ஆனாலும் அவனை நாடிச் சென்றோரில்லை;
சுத்தமில்லா நீரைச் சுவைப்பாரில்லை;
( தொடரும் )
Friday, April 6, 2012
சிவபுராணம் - 11
தன்னை எண்ணித்
தவமியற்றும் அர்ச்சுனனை
சோதிக்க எண்ணினான்
சிவன்;
ஒரு வேடன் வடிவம் எடுத்தான்
அவன்;
அவன் வைக்கும் சோதனையிலிருந்து
தப்பிக்க முடிந்தவன் எவன்;
வேகமாய் வந்தான்,
பார்த்திபன் கொல்ல எண்ணிய
பன்றியின் மேல்
பானம் விடுத்தான்;
இருவரின் கணையும்
இரையைத் தாக்க
அக்கணமே
அப்பன்றி
அசைய முடியாது உயிர் விட்டது;
பன்றி இறந்த இடத்திற்கு
பரமேஸ்வரனும் வந்தான்,
பார்த்திபனும் வந்தான்;
இறந்தது எனக்கே சொந்தமென்று
இருவரும் வாதிட்டனர்;
இதனைத் தொடர்ந்து
இருவரும் அம்பெடுத்துச் சண்டையிட்டனர்;
இரு தரப்பிலும் அம்பு
இல்லாது போகவே,
மல்யுத்தச் சண்டை இட்டு ஒருவர்
மற்றவரைச் சாய்த்து விட எண்ணினர்;
மைந்தன்;
சளைக்காது அவனை எதிர் கொண்டான்
சர்வேஸ்வரன்;
சிறிது நேரம் கழித்து
தன் வேடம் மறைத்து
சுய உருவம் எடுத்தான்;
ஆரண்யத்தில் எவனை எண்ணி தவம் செய்தென
அவனிடமே சண்டை இட்டதை அறிந்து
அர்ச்சுனன் வருந்தினான்,
தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்;
'கவலை எதற்கு அர்ச்சுனா,
உன் பானங்கள் எல்லாம்
என்மேல் மாலைகளாகவே விழுந்தன; எனவே
வருத்தம் விடு,
பசுபதாஸ்திரம் பிடி,
எல்லாப் புகழும் பெறு;'
வாழ்த்தி மறைந்தான் விஷ்வேஷ்வரன்.
வணங்கி நின்றான் விஜயன்.
( தொடரும் )
Wednesday, April 4, 2012
சிவபுராணம் - 10
மகாபாரதக் காலம்;
துரியோதனன் பாண்டவர்களை
கானகத்திற்குத் துரத்தியக் காலம்;
பாண்டவர்கள் காட்டில்
வாழ்ந்து வந்தக் காலம்;
அப்பொழுது ஒருநாள்,
வியாசமுனி வந்தார்;
பாண்டவர்களைச் சந்தித்தார்;
சிவனைச் சிந்தனையில் வைத்துத்
தவம் செய்ய
அர்ச்சுனனுக்கு அறிவுறுத்தினார்;
அதற்கென ஒரு
அரிய மந்திரத்தை
அவனுக்கு ஓதினார்;
பாகிரதி நதி கரையிலுள்ள
இந்திரகிலா மலைக்குச் சென்று
இத்தவம் இயற்ற
இயம்பினார்;
அம்மலை அடைந்தான்;
களிமண்ணால் சிவலிங்கம்
செய்தான்;
சிவனை எண்ணித் தவம்
செய்தான்;
வியாசர் விவரித்த மந்திரத்தை
இடைவிடாது சொல்லி வந்தான்;
பன்றி ஒன்று வந்தது;
தன் தவத்தை கலைக்க வந்த
பன்றியோ ?
தன் எதிரியால்
ஏவப்பட்ட பன்றியோ ?
ஏதாவது அசுரன் பன்றி வடிவில்
வந்திருக்கிறானோ ?
என்று பலவாறு எண்ணினான்;
பன்றியை தன்னிடம் விட்டுத்
துரத்த முயற்சித்தான்;
முடியாது போகவே,
ஒரு அம்பு எடுத்து விடுத்தான்;
பன்றியை ஒரே அடியில்
கொன்றுவிடத் துடித்தான்;
தன்னை எண்ணித்
தவமியற்றும் அர்ச்சுனனை
சோதிக்க எண்ணினான்
சிவன்;
ஒரு வேடன் வடிவம் எடுத்தான்
அவன்;
அவன் வைக்கும் சோதனையிலிருந்து
தப்பிக்க முடிந்தவன் எவன்;
( தொடரும் )
Monday, April 2, 2012
வாழ்க பூமி !
அமைதி எங்கும் நிலவட்டும்,
அன்பாய் மக்கள் இருக்கட்டும்,
ஆனந்தம் எங்கும் பரவட்டும்,
கூடி ஆடி குதுகளிக்கட்டும்,
இருண்ட இரவு முடியட்டும்,
சச்சரவின்றி பொழுது விடியட்டும்,
மண் மணம் வீசட்டும்,
மழை தவறாது பொழியட்டும்,
வயல் விழையட்டும்,
உலகம் சிறக்கட்டும்,
வாழ்க பூமி !
Friday, March 30, 2012
பாதச் சுவடுகள்
வாழ்க்கையில் நான் வாழ்ந்த,
கடந்து வந்த பாதையைக்
காண்பித்தார்;
எங்கும் எல்லா வழியிலும்
இரண்டு ஜோடி பாதச் சுவடுகள்;
உன்னோடு நான்
எப்போதுமிருந்தேன்;
உன்னை விட்டு ஒருபொழுதும்
விலகாது இருந்தேன்;
இதை உணர்த்தும்
இப்பாதச் சுவடுகள்;
விளக்கினார்;
வியந்து நோக்கினேன்;
கர்வமின்றிப் பேசினார்;
கண்ணீர் மல்க நன்றி சொன்னேன்;
ஒருஜோடி பாதச்சுவடுகள் மட்டும்;
ஐயனே, சிவனே
இங்கே மட்டும் ஒரு ஜோடி மட்டும்,
இது எந்த காலம் ?
வினவினேன் நான்;
இது உன் கஷ்ட காலம்;
வேலை இழந்து, வறுமையில் வாடியக் காலம்;
உன் பாவக்கணக்கு நீ சுமந்த காலம்;
அவமானப்பட்டு, அலைகழிக்கப்பட்டு
நீ வருந்தியக் காலம்;
சாந்தமாய்ச் சொன்னார் கடவுள்;
சத்தமாய்க் கத்தினேன் நான்;
சந்தோசமாய் நான் குதித்துத் திரிந்த வேளையில்
என்னோடு இருந்த நீர்,
சுக போகங்களில் உல்லாசமாய் நான் மகிழ்ந்தக் காலங்களில்
என்னோடு களித்த நீர்,
வெற்றி பெற்று நான் வாழ்வில் உயர்கையில்
என்னோடு வந்த நீர்,
எவ்வளவு பூசை உமக்கு செய்தேன்,
என் கஷ்ட காலத்தில்
என்னை விட்டுச் சென்று இருக்கீறே, இது ஞாயமா ?
என் கண்ணீர் துடைத்துச் சொன்னார் கடவுள்;
‘மகனே,
உன் கஷ்டக் காலம் முழுதும்
ஒரு பாதச் சுவடுகள் இருப்பது உண்மை தான்,
ஆனால் அது உன்னுடையதன்று !’
குழம்பிப் போனேன் நான்;
தொடர்ந்து சொன்னார் அவர்;
'உன் கஷ்டக் காலத்தில்
உன்னை சுமந்து கொண்டு வந்தேன் நான்,
நீ காணும் அந்தப் பாடச் சுவடுகள்
என்னுடையவை;
துயரக் கடலில்
நீ தத்தளிக்கும் காலத்தில்
நான் படகாய் இருந்து
உன்னைச் சுமந்து கரை சேர்த்தேன்'.
விளக்கினார் கடவுள்;
விவரமறிந்து வணங்கினேன் நான்;
நன்றி சொல்ல எனக்கு வார்த்தை இல்லை;
இறைவன் காட்டும் அன்பிற்கு அளவு இல்லை;
என்னை நீ நேசிக்கிறாயோ இல்லையோ
நான் உன்னை நேசிப்பேன்;
என்னை நீ நாடுகிறாயோ இல்லையோ
நான் உனக்கு உதவுவேன்;
உன்னோடு என்றும் இருப்பேன்;
உன்னை சுமந்து கொண்டு இருப்பேன்;
கடவுள் சொன்னார்;
கட்டியணைத்துக் கொண்டேன் நான்;
Wednesday, March 28, 2012
வளம் பெரும் அகம்
சிலது முன்னால் நன்றாயிருக்கும்
சிலது பின்னால் பார்த்தால் முன்னால் பார்க்கத் தூண்டும்
சிலது முன்னால் பார்த்தால் பின்னால் பார்க்கத் தூண்டும்
சிலது சகிக்காது;
சிலது பார்த்தாலே பரவசம்;
வளைந்தால் மனது பதறும்;
வர்ணம் வசீகரிக்கும்;
வாசம் வீசும்;
சிலது பார்த்தாலே படிக்கத்தோன்றும்;
சிலது பார்த்தாலே படுக்கத்தோன்றும்;
சிலது படித்துக்கொண்டே இருக்கத்தோன்றும்;
சிலது முடித்தபின் மீண்டும் படிக்கத் தோன்றாது;
சிலது வணங்க மட்டும், படிக்க முடியாது;
சிலது படிக்கையில் சிரிக்க வைக்கும்;
சிலது படிக்கையில் அழுக வைக்கும்;
நெட்டையாய்ச் சிலது
குட்டையாய்ச் சிலது
குண்டாய்ப் பலது
மொத்தத்தில் பலவிதம்
.........
.........
.........
புஸ்தகம்;
படித்தால் வளம் பெரும் அகம்;
Monday, March 26, 2012
பின்னால் பார்த்தே பழகி விட்டேன்
எல்லாம் கடந்த பிறகு
ஏக்கத்துடன் திரும்பிப் பார்க்கிறேன்;
இன்னும் இரண்டு நாள்
இருந்து விட்டு இறந்திருக்கலாமே;
முதுமைஎனினும்
மூச்சிருக்கே,
முனகிக்கொண்டே மூலையில்
முடங்கிக் கிடந்திருக்கலாமே;
மனைவி குழந்தை என்று
மகிழ்வோடு இருந்திருக்கலாமே;
தாவணி காண
தவமிருந்ததும்,
'தரை பார்த்து நடக்கும் அது
எனை பார்த்து சிரித்தது'
கவிதை எழுதிக் கிடந்திருக்கலாமே;
கட்டுப்பாடில்லாக் குதிரை போல்
காதலில் விழாது
சுற்றித் திரிந்த சுகம்
மாற்றாது இருந்திருக்கலாமே;
கல்லூரியில் காளையாய்
ஆடிப் பாடிய ஆட்டம்
ஆகலாதிருந்திருக்கலாமே;
பள்ளியில் படித்தது
கடவுளைத் துதித்து
கட்டுக்கோப்போடு
வாழ்ந்த வாழ்க்கை
விலக்காதிருந்திருக்கலாமே;
குழந்தையாய்க்
குறை ஏதுமில்லாது
குதூகலத்தோடு இருந்திருக்கலாமே;
தாயின் கருவரையில்
கண் திறவாது, மண்ணுலகில் பிறவாது
இருந்திருக்கலாமே;
எல்லாம் போன பிறகே
எண்ணிப் பார்க்கிறேன்;
எல்லாம் கடந்த பிறகு
ஏக்கத்துடன் திரும்பிப் பார்க்கிறேன்;
Thursday, March 22, 2012
ஏனடி ஏற்றுக்கொண்டாய் ?
இன்னும் கொஞ்சம் படபடப்பு;
இன்னும் கொஞ்சம் காதல் கவிதைகள்;
இன்னும் கொஞ்சம் காத்திருப்பு;
இன்னும் கொஞ்சம் ஏக்கம், கனவு;
இன்னும் கொஞ்சம் .....
இன்னும் கொஞ்சம் .....
ஏனடி என் காதலை
இத்தனை சீக்கிரம்
ஏற்றுக்கொண்டாய் ?
Monday, February 20, 2012
மகா சிவராத்திரி
எங்கும் இருள்; எனினும் எந்தக் கவலையுமில்லாமல், அச்சமின்றி அமைதியாய் இருந்தேன்; மனதில் மட்டும் சொன்னதையே சொல்லிக்கொண்டு வந்தேன்; எங்கோ குறைக்கும் நாய்; அமைதியாய் இரு என்று அன்பாய் அதட்டினேன்; மழை வராப்பொழுது; காற்று கொஞ்சம்; குளிர் கொஞ்சம்; உறங்காது விழித்திருந்தேன்; தெரிந்தே தவறேதும் செய்யவில்லை; இனி செய்யப்போவதுமில்லை; என்றும் நீ துணை வர எந்நேரமும் எண்ணி இருப்பேன் உன்னையே; உன் பெயரை சொல்லி வந்தேன்; சொல்லச் சொல்ல அமைதி; அந்தச் சொல்லே நமக்கு வெகுமதி; ஓருடலாய் ஈருயிராய்; முக்கண்ணோடு நாற்புறமும் காப்பவனே, ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்போர்க்கு, வற்றாத ஆறாய் அருள் வாரி வழங்குவோனே, ஓம் நமசிவாய ! |
Wednesday, February 8, 2012
சிவபுராணம் - 9
வாரணாசி அல்லது காசி
என்றழைக்கப்படும் இவ்விடமே
7வது ஜோதிர்லிங்கம் அமைந்த இடமாகும்.
வாரணாசி,
இந்துக்களின் மிகப்புனிதமான
இடம்.
பிரம்மா தேவன் கடுந்தவம்
செய்த இடம்.
பிரள காலத்தில் கூட
அழியாது சிவன் காத்த இடம்.
உத்திரப் பிரதேசத்தில்
உள்ள ஒரு இடம்.
புனிதமான கங்கை நதியின்
மேற்குக் கரையில் கோவில் கொண்ட இடம்.
உலகத்திலேயே
மிகப் பழமையான ஊர்
இதுவே ஆகும்.
ஜோதிர்லிங்கமாய் சிவன் அருள் தரும்
இவ்விடத்தில் இவன் பெயர்
விஸ்வநாதா அல்லது விஷ்வேஸ்வரா.
இதன் பொருள்
இவ்வுலகத்தை ஆள்பவன் என்பதாகும்.
முகலாயர் ஆதிக்கத்தில்
இந்தக் கோவில் பல முறை சிதைக்கப்பட்டும்
மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டு இன்றும்
கம்பீரமாய் நிற்கிறது;
இந்தக் கோவிலின் மிக அருகில்
மசூதி ஒன்று உள்ளது;
அந்த மசூதி இருக்கும் இடமே
கோவிலிருந்த இடம் என்று
சொல்லப்படுகிறது;
ஜோதிர்லிங்கத்தைத் தவிர்த்து
இந்தக் கோவிலில்
இன்னும் பல சன்னதிகள்
இருக்குது;
இந்தக் கோவிலில்
இருக்கும் ஞானவபி என்ற குளத்தில்
மூர்த்தியை ஒளித்து வைத்து
முகலாயரிடமிருந்து காத்ததாய்
சொல்லப்படுகிறது;
காசி விஸ்வநாதரை தரிசிப்போம், நம்
கவலை எல்லாம் தீரும்
வளமாய்
வாழ்ந்திடுவோம்;
( தொடரும் )
Tuesday, February 7, 2012
சிவபுராணம் - 8
அருள் அள்ளித்தரும்
அந்தச் சங்கரனின்
ஆறாவது ஜோதிர்லிங்கம்
இந்த பீமாஷங்கர்.
ராமாயணக் காலத்தில்
ராமனால் கொல்லப்பட்டவர்கள்
ராவணனும் கும்பகர்ணனும்;
சகாயத்ரி மலையில்
கார்கடி என்ற அரக்கி
வாழ்ந்து வந்தாள்;
இவள் கும்பகர்ணனின்
மனைவி ஆவாள்;
இவர்கட்குப் பிறந்த பிள்ளை
பீமன், கார்கடிக்கு துணையாய்
இருந்து வந்தான்;
ஒருநாள் பீமன் தாம்
ஒதுங்கி ஓரமாய் வாழ்வதெதற்கு
என்று வினவ,
கார்கடி அவன் தந்தை பற்றி
அவனுக்கு சொல்ல,
அதைத் தொடர்ந்து
ராமன் கும்பகர்ணனைக் கொன்றதை
அவனுக்கு விளக்க,
தந்தையைக் கொன்றவன்
தலையை எடுப்பேன் என்று
தனயன் கிளம்ப,
தன் செயலுக்கு வலிமை சேர்க்க வேண்டு
பிரம்மனை நோக்கித் தவமிருக்க,
பிரம்மனும் அவனுக்கு
வலிமை கிட்டும் என
வரம் தர,
வலிமை பெற்றவன்
வானவர்களை
வம்புக்கிழுத்து
வதைத்தான்.
இதற்குப் பிறகு
காமரூபன் என்ற அரசனை,
சிவ பக்தனை
எதிர்த்துப் போர் புரிந்தான்;
போரில் வெற்றி பெற்றான்;
அரசனை சிறையிலடைத்தான்;
அரசன், சிறையிலிருந்தாலும்
சிவனை இடைவிடாது
துதித்தான்;
அரசன் செயலை
அரக்கன் கேள்விப்பட்டான்;
அவனை கொன்றுவிடுவதென
அக்கணமே கிளம்பினான்;
காமரூபன் பூசை செய்யும் சிவலிங்கத்தை
இரண்டாய் பிளக்கத்
தன் வாளை உருவினான்;
லிங்கத்திலிருந்து சிவன் தோன்றினான்;
தன் சூலாயுதத்தால்
பீமனின் தலையைத் துண்டித்தான்;
தேவர்கள் மகிழ்ந்தனர்;
பீமனைக் கொன்ற சங்கரனை
அங்கேயே லிங்க வடிவத்திலிருந்து
அருள் பாலிக்க வேண்டினர்;
சிவனும் சம்மதித்தான்;
அனைவருக்கும் ஆசி தந்தான்;
இவனே பீமாசங்கரன்;
பீமனைக் கொன்றவன் இவன்
பிழை தீங்கு செய்தாரை இல்லாது செய்தவன் இவன்
பாசம் தந்தாரை ஆட்கொள்பவன் இவன், அவனே
பீமஷங்கர் என்று புகழப்பெற்ற சிவன்.
( தொடரும் )
Monday, January 23, 2012
சிவபுராணம் - 7
ஜோதிர்லிங்கத்தில் ஐந்தாவது
கேதர்நாத்.
வடஇந்தியாவில்
உத்தரகாண்டில்
உள்ள ஊர்,
பனி நிறைந்த இமாலயப்
பிரதேசத்தின் இடையே
அமைந்த ஊர்,
பழமையான,
பல வரலாறுகள் நிறைந்த ஊர்;
கேதார்நாத்,
சிவத்தலங்களில்
மிகப் புனிதத் தலம்
நடந்து மட்டுமே அடையக்கூடிய,
ஆறு மாதங்கள் மட்டுமே திறந்திருக்கக்கூடிய
அரியத் தலம்.
ஆதிசங்கரரால்
அமைக்கப்பட்டத் திருத்தலம்;
கௌரிகுந்த் என்ற இடத்திலிருந்து
மலையேறி
மகேஸ்வரனை
மனமுருகிக் காண வேண்டும்;
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும்
போர் நடந்து முடிந்த சமயம்;
போரில் கொல்லப்பட்டோரினால் ஏற்பட்டப்
பழிக்குப் பரிகாரம் தேடிப்
பாண்டவர்கள்
பரமேஸ்வரனை நாடி இமாலயம் வந்தனர்;
பல நாட்கள் தேடி
அலைந்தனர்;
அவ்வமயம் வித்தியாசமாய் ஒரு எருது எதிர்பட,
அதன் பின் பாண்டவர்கள் ஓட,
அவ்வெருது
அவர்களிடம் அகப்படாது பூமியுள் புதைய, பீமன்
அதன் வால் பிடித்து இழுக்க,
எருது வால் விடுத்து,
தலையோடு மட்டும் நேபாளம் செல்ல,
அங்கே இந்த எருதுவின் தலையே
பசுபதிநாத் என்று அழைக்கப்பட,
வால் விட்டுச் சென்ற இடத்தில்
ஒரு லிங்கம் தோன்ற,
பரமேஸ்வரன் ஒளி ரூபத்தில் அங்கே
பாண்டவர்களுக்குக் காட்சி அளித்தார்; அவர்கள்
பாவங்கள் தீர்த்தார்;
என்னைக் காண வருவோர் பாவங்கள்
என்னால் தீர்க்கப்படும்
என்று வாக்குத் தந்தார்;
கேதார் என்ற
அவ்விடத்தில் தோன்றிய லிங்கம்
கேதார்நாத் என்றே அழைக்கப்படுகிறது;
எருதாய்த் தோன்றியச் சிவனோடு
சண்டையிட்ட பீமன்,
சிவன் மேல் கொண்ட பாசத்தால்
அவன் மேல் நெய் ஊற்றி வழிபட ஆரம்பித்தான்;
அன்று தோன்றிய
அந்தப் பழக்கம் இன்று வரை
நெய் ஊற்றி வழிபாடு தொடர்கிறது;
இவ்விடத்திற்கு
இன்னொரு கதையும் உண்டு;
நர-நாராயனாகத் தோன்றியத் திருமால்,
பத்ரிகாஸ்ரமத்தில் சிவனை வழிபட,
சிவன் அங்கே தோன்றி நலம் கேட்க,
அதைத் தொடர்ந்து வரம் தர,
மக்கள் வழிபட ஏதுவாக
மகேஸ்வரன் இங்கே இருக்கவேண்டும் என்றும்,
தன் சுய ரூபமான
ஜோதி வடிவில் விளங்க வேண்டும் என்றும்
வரம் கேட்க,
வரம் தந்தார்;
பத்ரிகாஸ்ரமம் இமாலயத்தில்
கேதார் என்ற சிகரத்தில் இருக்கிறது;
இங்கு தோன்றிய சிவம்
கேதார்நாத் என்ற அழைக்கப்படுகிறார்;
நாவின்மிசை யரையன்னொடு
தமிழ்ஞானசம் பந்தன்
யாவர்சிவ னடியார்களுக்
கடியானடித் தொண்டன்
தேவன்திருக் கேதாரத்தை
ஊரன்னுரை செய்த
பாவின்றமிழ் வல்லார்பர
லோகத்திருப் பாரே.
( சுந்தரர் - தேவாரம் )
( தொடரும் )
Wednesday, January 18, 2012
சிவபுராணம் - 6
நர்மதா ஆறு
நாலு புறமும் சூழ,
மந்தாத எனும் இடத்தில்
மகேஸ்வரன் ஒம்கரேஸ்வரராக எழுந்தருளிய
இடமே ஜோதிர்லிங்கத்தில் 4 வது லிங்கமாகும்;
மந்தாத என்ற இவ்விடம்
சிவபுரி எனவும் அழைக்கப்படுகிறது;
நர்மதா ஆற்றில்
ஓம் எனும் வடிவத்தில்
அமைந்துள்ளது
இத் தீவு;
நாரதர் ஒரு முறை
விந்திய மலை வழி வர,
அப்பொழுது அம்மலை
என்னிடம் எல்லாம் இருக்கு,
கொஞ்சம் இங்கே தங்கு,
எனச்சொல்ல,
சுமேரு மலை உன்னோடுச் சிறந்தது,
ஏனெனில் அதில் தேவர்கள் வாசம் செய்கின்றனர்
என நாரதர் சொல்ல,
அடுத்த கணமே விந்திய மலை
அந்த ஈஸ்வரனை எண்ணிப் பிரார்த்திக்க,
ஈஸ்வரன் ஒம்கரேஸ்வரனாக
அங்கே தோன்றினார்.
அங்கேயேத் தங்கி
அருள்பாளிப்பதாய்
வாக்கும் தந்தார்;
இதுவும் தவிர
இன்னொரு கதையும் உண்டு;
இரவி குலத்தில் மந்தாத
இனத்தைச் சேர்ந்த
இரண்டு ராஜ குமாரர்கள்
அம்பரீஷ் மற்றும் முச்குந்த்
சிவனை எண்ணி கடுந்தவம் புரிந்த இடம்
என்பதால் இவ்விடம் மந்தாத என்று அழைக்கப்படுகிறது;
ஓடும் நர்மதையில்
ஒரு தீவில்
ஒய்யாரமாய்
ஒம்கரேஸ்வரர் அருள்பாலிக்க
ஒ ! மக்களே,
ஓடி ஓடிக் கலைத்தவர்களே,
ஒருநிமிடம் தரிசியுங்கள்,
ஓயாத்துயரெல்லாம்
ஒரு நொடியில் நீங்கும், உணருங்கள்.
( தொடரும் )
Tuesday, January 17, 2012
சிவபுராணம் - 5
ஒருமுறை கைலாயத்தில்
சிவ பார்வதியின் பிள்ளைகள்
கணேசனுக்கும்,
கார்த்திகேயனுக்கும், யார்
உயர்ந்தவர் என்ற
விசயத்தில்
வாக்குவாதம்
வந்துவிட, தன்
சந்ததிகளின்
சர்ச்சையைச் சமாளிக்க
பரமேஸ்வரன்
போட்டி ஒன்று அறிவிக்க, மூத்தத்
தனையன் கணேசன் அதில் வென்று
தானே வென்றதாக அறிவிக்க, இளையத்
தனையன் முருகன் கோபத்தில்
தனியே வாழ ஆரம்பிக்க,
சமாதானம் பேச வந்தோரிடமெல்லாம்
சம்மதம் இல்லாது பேசித் திருப்பி அனுப்ப,
சிவ பார்வதியையும் தன்னருகில் அனுமதிக்காது
தனிமையில் வாழ்கையில்,
முருகன் வாழும் மலையின் அருகில்
மகேஸ்வரன் தன் மனைவியோடு
வாழ்ந்து வந்தார்; இவ்விடமே
ஜோதிர்லிங்கத்தில் இரண்டாவதான
மல்லிகார்ஜுனா எனப்படும்;
மகாகாலேஸ்வர்
சிப்ரா ஆற்றின் கரையில்
அமைந்தது
அவந்தி நகரம்;
அவ்வூரில் வேதப்ரியன் என்பவர்
வேதம் பயிற்றுவித்து
வாழ்ந்து வந்தார்;
அவரின் பிள்ளைகளும்
அவரோடு வாழ்ந்து வந்தனர்;
அவந்தி நகரின்
அருகிலே ரத்னமாலா என்ற மலையில்,
அரக்கன் ஒருவன் வாழ்ந்துவந்தான்;
அவன் பெயர் துஷாணன்;
வேதம் வகுத்த பாதை வழி
வாழ்பவர்களைக் கண்டால்
வீரம் கொள்வான், அவர்களை
விரட்டி அடிப்பான்;
வேதப்ரியன் பற்றி அறிந்த
துஷாணன் அவர்கள் இருப்பிடம்
வந்தான்;
வேதம் மற இல்லை நான்
கழுத்தை நெறிப்பேன், இற;
பயமுறுத்தினான்,
பயப்படாது நின்றனர்,
தீயவன் தூயவர்களைக்
கொல்லத் துணிந்தான்;
அப்பொழுது ஒரு சத்தம்,
வேதப்ரியன் வணங்கி வந்த
லிங்கத்திலிருந்து
லிங்கேஸ்வரன் தோன்றினார்;
துஷாணனை எரித்தார்;
வேதப்ரியனும் அவன்
பிள்ளைகளும், சிவனை
இங்கேயே என்றும் தங்கி இருக்க வேண்ட,
சிவனும் சம்மதித்து
அருளாசி வழங்கும்
அந்த இடம் தான்
ஜோதிர்லிங்கத்தில் மூன்றாவதான
மகாகாலேஸ்வர் ஆகும்.
( தொடரும் )
Monday, January 16, 2012
சிவபுராணம் - 4
சிவன் சப்தரிஷிகளை அழைத்தான்;
தன் சார்பாய்த் திருமணம் பேச
பார்வதியின் பெற்றோரிடம்
அனுப்பி வைத்தான்;
சிவ பார்வதி திருமணத்தை
பெற்றோர்கள் அங்கீகரித்தனர்;
திருமண நாள் காலை
கந்தர்வர்கள் பாட
அப்சரஸ்கள் ஆட
அனைத்து தேவர்களும்
சிவனோடு திருமண மண்டபம் நோக்கிச் செல்ல,
பிரம்ம தேவன் முன்னிலையில்
திருமணம் இனிதே நடந்தேறியது;
சிவனும் பார்வதியும்
கைலாயம் திரும்பினர்;
சிவனுக்கும் பார்வதிக்கும்
பிள்ளையாய்ப் பிறந்த
முருகன், தரகாசுரனை
அழித்து தேவர்களைக் காத்தான்;
சந்திரனின் சாபம்
தக்ஷனின் பெண்களில் 27 பேரைச்
சந்திரன் மணந்து கொண்டான்;
அவர்களில் அழகான ரோகினியை
சந்திரன் மிகவும் நேசித்தான்;
இதன்மூலம் மற்ற மனைவியரின்
கோபத்தைப் பெற்றான்.
இதுபற்றி தக்ஷன் பலமுறை எடுத்துக்கூறியும்
சந்திரன் செவி சாய்க்காதிருந்தான்.
'மற்ற மனைவியரை நீ
மறந்ததால்
மெதுவாய் நீ வானிலிருந்து
மறைந்து போவாய்'
தக்ஷன் சாபம் தர,
சந்திரன்
சாபம் தீர பிரம்மனிடம் ஆலோசனை கேட்க,
சிவனை நோக்கி பிரம்மன் விரல் காமிக்க,
சந்திரன் பிரபாச தீர்த்தம் சென்று,
சிவலிங்கம் ஒன்றை நதிக்கரையில் செய்து,
சிவனை எண்ணி வழிபடலானான்.
சிவன் வந்தான்;
சந்திரன் துயர் துடைக்க வழி சொன்னான்;
'கிருஷ்ணபக்ஷத்தில் நீ ஒளி குறைந்து மறைந்து,
சுக்லபக்ஷத்தில் ஒளி மிகுந்து விளங்குவாய்'.
சங்கரன் சொன்னான்,
சந்திரன் மகிழ்ந்தான்;
சந்திரன் வடிவமைத்து வழிபட்ட அந்த
சிவலிங்கமே, ஜோதிர்லிங்கத்தில் முதன்மையான
சோமநாதராகும்;
( தொடரும் )
Friday, January 13, 2012
சிவபுராணம் - 3
வலிமை பெற்றவனானான்;
மூஉலகையும் ஆட்டிப் படைத்தான்;
வரம் தந்தவன்
செய்வதறியாது திகைத்து நின்றான்;
அச்சமயம்
சிவன் இமயமலையில் தவத்தில் இருந்தான்;
பார்வதி தன் பெற்றோரோடு
இமயமலையில் வசித்து வந்தாள்;
இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க
காதல் வயப்பட
காமனைப் பணிந்தான் இந்திரன்;
காமன் வந்தான்;
சிவன் இருப்பிடத்தை அழகாய் அமைத்தான்;
அவ்விடம் பார்வதியை வரவழைத்தான்;
கணை விடுத்தான்;
கண் திறந்தான் சிவன்;
நடந்ததை அறிந்தான் அவன்;
சினம் கொண்டான்;
நெற்றிக்கண் திறந்தான்;
காமனை எரித்தான்;
காமன் மனைவி ரதி தேவி;
கண்ணீர் விட்டுக் கதறினாள்;
கணவன் செய்தப் பிழையைப்
பொருத்தருளப் பணிந்தாள்;
தேவர்கள் வந்தனர்;
தரகாசுரனால் நேரும்
துயர் தீர்க்கவே
தங்கட்கு சினம் தரும் செயல் செய்ய நேர்ந்தது,
தயை கூர்ந்து சினம் தணிந்து
காமனை உயிர்ப்பித்து எம்மெல்லோரையும்
தரகாசுரனிடமிருந்துக் காத்தருள்புரிய வேணும்;
இமையோர் வேண்டினர்;
இரங்கினான் ஈஸ்வரன்; எனினும்
இறந்த மன்மதன் இறந்தவனே;
துவாரகையில்
கிருஷ்ணனுக்கு மகனாய்
பிரத்யும்னனாய்
பிறப்பான் என்றான்
பரமேஸ்வரன்;
பார்வதி தவம்
சிவனை மட்டும் தன்
சிந்தையில் கொண்டு வேறேதும்
சிந்திக்காது
தவம் செய்யப் புறப்பட்டாள்;
வசதியான வாழ்வைத் துறந்தாள்;
பட்டு, தங்க நகைகள் துறந்தாள்;
தாய் தந்தை துறந்தாள்;
உணவு உறக்கம் துறந்தாள்;
சிவனையே கணவனாய்க் கொள்ள
கடுந்தவம் செய்தாள்;
சிவன் ஒரு பிராமண வடிவில்
அவள் முன் தோன்றினான்;
பார்வதி அவரை வரவேற்றாள்;
வணங்கினாள்;
கடுந்தவம் செய்யக்
காரணம் என்ன,
வினவினார் வந்தவர்;
விடைதந்தாள் வணங்கி நின்றவள்;
பரமேஸ்வரனே என்
பதியாய் வரத் தவமிருக்கிறேன்,
பார்வதி சொன்னாள்;
பிராமண வடிவெடுத்து வந்தவர்
பலமாய்ச் சிரித்தார்;
முட்டாள் பெண்ணே,
தங்கத்தைத் தந்துத்
தகரத்தை வாங்கிவோர் உண்டா ?
சந்தனத்தைக்
களி மண்ணில் கரைப்பாரா யாரும் ?
கண்ணுக்கழகாய்க்
கண்ணெதிரே தேவர்கள் பலரிருக்க
கானகத்தில் எங்கோ
கண் மூடி அமர்ந்திருக்கும்
அவனா,அச் சிவனா,உனக்கேத்த ஆள் ?
சாம்பல் உடம்பெங்கும் பூசி,
சடையாய் முடி பரவிக் கிடக்க,
பாம்பு மாலையாய் கழுத்தில் கிடக்க,
பூதங்கள் உடனுரங்க,
அவனா உனக்கு ?
அறிவிருக்கா உனக்கு ?
வாழ்வை வீணாக்காது,
வாழப் பழகு; அவ்வாறு
வாழ்வதே உலக மரபு;
கொதித்தெழுந்தாள் பார்வதி;
கோபத்தோடு பேசினாள்;
சிவம் பற்றித் தெரியாத
நீர் ஒரு ஜடம்;
நீர் தான்
அறிவில்லாத முடம்;
கிளம்பிச் செல்லும் வேறு இடம்;
பார்வதி
பிராமணன் இருப்பதை மறந்தாள்;
தன் வேலை தொடர்ந்தாள்;
சிவனை எண்ணித் தியானம் செய்தாள்;
பிராமண வடிவெடுத்து வந்தவன்,
பரமேஸ்வரனாய் மாறி நின்றான்,
பார்வதியின் தவத்தை மெச்சினான்,
வரம் கேட்கச் சொன்னான்;
பதியாய் வந்து, தன்னுள்
பாதி கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாள்;
( தொடரும் )