Monday, March 26, 2012

பின்னால் பார்த்தே பழகி விட்டேன்

பின்னால் பார்த்தே பழகி விட்டேன்

எல்லாம் கடந்த பிறகு
ஏக்கத்துடன் திரும்பிப் பார்க்கிறேன்;

இன்னும் இரண்டு நாள்
இருந்து விட்டு இறந்திருக்கலாமே;

முதுமைஎனினும்
மூச்சிருக்கே,
முனகிக்கொண்டே மூலையில்
முடங்கிக் கிடந்திருக்கலாமே;

மனைவி குழந்தை என்று
மகிழ்வோடு இருந்திருக்கலாமே;

தாவணி காண
தவமிருந்ததும்,
'தரை பார்த்து நடக்கும் அது
எனை பார்த்து சிரித்தது'
கவிதை எழுதிக் கிடந்திருக்கலாமே;

கட்டுப்பாடில்லாக் குதிரை போல்
காதலில் விழாது
சுற்றித் திரிந்த சுகம்
மாற்றாது இருந்திருக்கலாமே;

கல்லூரியில் காளையாய்
ஆடிப் பாடிய ஆட்டம்
ஆகலாதிருந்திருக்கலாமே;

பள்ளியில் படித்தது
கடவுளைத் துதித்து
கட்டுக்கோப்போடு
வாழ்ந்த வாழ்க்கை
விலக்காதிருந்திருக்கலாமே;

குழந்தையாய்க்
குறை ஏதுமில்லாது
குதூகலத்தோடு இருந்திருக்கலாமே;

தாயின் கருவரையில்
கண் திறவாது, மண்ணுலகில் பிறவாது
இருந்திருக்கலாமே;

எல்லாம் போன பிறகே
எண்ணிப் பார்க்கிறேன்;

எல்லாம் கடந்த பிறகு
ஏக்கத்துடன் திரும்பிப் பார்க்கிறேன்;

No comments:

Post a Comment