Thursday, July 26, 2012

அரிச்சந்திரன் - 12

அடிமையாய்க் கொண்டவர் தான்
அந்திமக் காரியங்கள் செய்ய
ஆகும் பொருளைத் தர வேண்டும்,
அவரிடம் சென்றுக் கேள்,
அவர் தருவதை வாங்கி வா, என்று
அறிவுறுத்தினான்
அரிச்சந்திரன் தன் மனைவிக்கு,
துணை யாரும் இல்லாதத் துணைவிக்கு;

இதமாய்ப் பேசவேத் தெரியாதவன்,
இம்மியளவும் அன்புடன் நடத்தாதவன்,
இறுதிச் சடங்குக்கா காசு தருவான் ?
இருந்தும் தன் இல்லான் சொல்வதாலும்,
வேறு வழி இல்லாததாலும் சந்திரமதி
தன் பொறுப்பாளனிடம் பொருள் கேட்கப் புறப்பட்டாள்;

அவ்வமயம் விஸ்வாமித்திரர்
அடுத்து ஓர் விஷமம் செய்தார்;
அரிச்சந்திரனுக்கு இன்னொரு சோதனை
தந்தார்;
அவன் மனைவியை இன்னும்
அழ வைத்தார்;

காசி நகரத்து மன்னனின் மைந்தனை
அரண்மனை விட்டு மறையச் செய்தார்;
அரிச்சந்திரனின் இல்லாள் வரும் பாதையில்
அக்குழந்தையை இறந்து கிடக்கச் செய்தார்;
சந்திரமதி தன் பிள்ளையை எண்ணி அழுதுகொண்டே,
நடந்து வருகையில்,
ஒரு மின்னல் பிரகாசிக்க,
அவ்வொளியில் இறந்து கிடக்கும் பிள்ளை
தன் பிள்ளை போல் அவளுக்குத் தோன்ற,
அவள் அருகே சென்று
அப் பிள்ளையைத் தன் மடியில் வைத்து
அரற்ற,
அந்நேரம் அங்கே காவலர்கள் வர,
அரசனின் பிள்ளை இறந்து கிடப்பதைப் பார்த்து,
அவளைக் கைதுசெய்து
அரண்மனைக்கு இழுத்துச் சென்றனர்;
அவளே கொலை செய்தாள் என்று
அவள் மேல் குற்றம் சுமத்தினர்.

விஸ்வாமித்திரர்
அவளைத் தன்னிலை மறக்கச் செய்தார்;
ஏதும் உணராது
பேசாது நிற்கும் படி செய்தார்;
பேதையும் அப்படியே நின்றாள்;
பெயர் யாது என்ற கேள்விக்கும்
பதில் சொல்லாது நின்றாள்;
அரசன் கேள்விக்கு
அசையாது வாய் திறவாது
அழுதபடியே நின்றாள்;

தன் பிள்ளையைக் கொலை செய்த இவள்
தலையை அறுக்க உத்தரவிட்டான் அரசன்;
தண்டனையை அன்றிரவே நிறைவேற்ற
ஆணை பிறப்பித்தான்;

காவலாட்கள் சந்திரமதியை
இழுத்து வந்தனர்;
அரசாணை அறிவித்து
சிரச்சேதம் செய்ய
அரிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்;
தன் மகனின் உடலை எரிக்க,
பொருள் பெறச் சென்ற மனைவியை எதிர்பார்த்துக்
காத்திருந்தவன்
கைதியாய் மனைவியை அழைத்துவந்ததைக்
கண்டு அதிர்ந்தான்;
இவள் குற்றமற்றவள் என்று சொன்னான்;
இருந்தும் அவன் சொல்லைக் கேட்பார் இல்லை;

அரசாணையை நிறைவேற்ற
அவசரப்படுத்தினர்;
அதுவே அவன் கடமை என்று
அறிவுறுத்தினர்;

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment