Friday, October 7, 2011

பக்த பிரகலாதன் - 4

                                    இரண்யகசிபு வரம்

தம்பியின் மரணத்திற்கு
காரணம்
விஷ்ணுவின் விவேகம்;

அந்த விவேகத்திற்கு
ஈடு கொடுக்க
வேண்டும் வேகம்;

உணர்ந்து கொண்டான் அண்ணன்;


வேகம் வேண்டி
வேள்வி செய்தான்;
மந்தார
மலை சென்றான்;
வரம் பெற
தவம் செய்தான்;

பிரம்மனைப் பணிந்தான்;
விஷ்ணுவைப் பகையென எண்ணினான்;
அவன் பலியே தன் பணியெனக் கருதினான்;

    



கட்டை விரலைக்
கீழ் பதித்து
ஒரு காலில் நின்று கொண்டான்;
இரு கையையும் தலை மேல் கூப்பினான்;
முக்காலமும் முகத்தை பிரமலோகம் நோக்கி
நான்முகனை எண்ணித் தவம் புரிந்தான்;
ஐம்புலனும் அடக்கி அவன் புரிந்த தவம்
ஆறு போல் அனலைப் பொழிந்தது தேவலோகத்தில்;
ஏழேழு ஜென்மத்திலும் எவரும் செய்யமுடியாத தவம்
எட்டியது பிரம்மன் செவிக்கு;
கிட்டியது கெட்ட நேரம் புவிக்கு;



     

எதிர் வந்து நின்றான்;
என்ன வேண்டுமென்று கேட்டான்;
சாவதிருக்க வரம் கேட்டான்;
சாத்தியமில்லை; மாற்றி யோசி என்றான்
நன்றாய் யோசித்து வரம் தர வந்தவன்;

அப்படியெனில்
மனிதனோ, மிருகமோ
உன்னால் படைக்கப்பட்டது எதனாலும்
எனக்கு அழிவு ஏற்படக் கூடாது;
வீட்டின் உள்ளே, வெளியே
எனக்கு அழிவு ஏற்படக் கூடாது;
காலையில் காரிருளில்
எனக்கு அழிவு ஏற்படக் கூடாது;
எந்த ஆயுதத்தாலும்
எனக்கு அழிவு ஏற்படக் கூடாது;
தரையில் நான் சாகக் கூடாது,
ஆகாயத்திலும் அதுபோல்
எனக்கு அழிவு கூடாது;

தவம் செய்தேன் உனக்கு
வரம் தா எனக்கு;
கேட்டான் அரக்கன்;
கொடுத்தான் பிரம்மன்;

கொடியவன் மகிழ்ந்தான்;
கொடுத்தவன் மறைந்தான்;

                                                                        ( பக்தி தொடரும் )

Thursday, October 6, 2011

பக்த பிரகலாதன் - 3

                                    இரண்யாக்சன்


இரண்யாக்சன்
அக்கிரமம் பல
அநுதினம் செய்யும்
அரக்கன்;
அன்பென்ற ஒன்று
கொஞ்சம் கூட
நெஞ்சில் கொள்ளாக்
கிறுக்கன்; நல்லோர்
சொல் கேளா
செருக்கன்;

இமையோர் எல்லோரையும்
இரண்யாக்சன் சண்டைக்கு
இழுத்தான்;
இரண்யாக்சனுக்கு பயந்து
இமையோர் எல்லோரும்
இல்லாது போயினர்; தலை
மறைத்து வாழ்ந்தனர்; தம்
நிலைமை நினைத்து நொந்தனர்;

     


மாயை புரி;
மக்களைக் காப்பாற்று என்று
மன்றாடினார் அந்தத் திரு
மாலிடம்;

இரண்யாக்சன்
பூமிப்பந்தை ஆழ்கடலில் அழுத்தி வைத்தான்;
தன்னையே காவலுக்கு அருகில் வைத்தான்;

பரப்பிரம்மம்
பன்றி உருவமெடுத்தார்;
பக்தியோடு தமை அண்டியவர்களைப்
பாதுகாக்க முடிவெடுத்தார்;

சிறிய உருவத்தில் இருந்தது,
சிறிது சிறிதாய் வளர்ந்தது,
பெரிய மலை ஆனது;

வராக
வடிவத்தில்
வந்தவன்
விஷ்ணுவே என்று
உணர்ந்து கொண்டான்;
உடன் கோபம் கொண்டான்;

தண்ணீரில் நுழைந்தது பன்றி;
தன் கூரான பல்லால் பூமிப்பந்தைத்
தள்ளி தண்ணீர் மேல் கொண்டுவந்தது;


     

இரண்யாக்சன் கத்தினான்;
'முட்டாள் பன்றியே,
இருந்த இடத்தில்
இந்தப் பந்தை
எறிந்து விட்டு
இங்கிருந்து சென்று விடு'
எச்சரித்தான்;
'இல்லை தலையில் அடித்து
உன்னைக் கொன்றுவிடுவேன்'
கர்ஜித்தான்;

இரண்யாக்சனின் மரணம்
சம்பவிக்க தக்க தருணம்
இதுவே என்று எண்ணினார்
திருமால்;
இருவரும் சண்டையிட்டனர்;
இரவாகும் முன்னமே
இராக்கனை வீழ்த்திட வேண்டுமென்று
எடுத்துரைத்தார் பிரம்மா;
இரவானால்
இராக்கன் பலம் பெறுவான்
என்று எச்சரித்தார்;



திருமால்
தன் திருக்கரத்தில் இருக்கும்
சக்ராயதத்தை எடுத்தார்;
அரக்கனை நோக்கி வீசினார்;
அது அவன்
ஆயுதத்தை எல்லாம்
அழித்தது;
ஆக்ரோஷமாய்
அரக்கன் எதிர்த்து வர, மகாவிஷ்ணு
அவன் நெஞ்சில் ஒரு அடி தர,
அடியின் வேகம் தாங்க முடியாது
அக்கணமே அரக்கன்
தரை மேல் விழுந்தான்;
உயிர் நீத்தான்;

தம்பியைக் கொன்ற விஷ்ணு மீது
தாளாத பகை கொண்டான் அண்ணன்;

                                                                        ( பக்தி தொடரும் )

Wednesday, October 5, 2011

பக்த பிரகலாதன் - 2

                                    இரண்யகசிபு


இரண்யகசிபு -

இராட்சசர்களுக்கெல்லாம்
இராட்சசன்;
அரக்கர்களுக்கெல்லாம்
அரசன்;

அந்தப் பரந்தாமனை எந்நேரமும்
அவதூறாய்
அர்சிப்பவன்;
அவன் பெயரைக் கேட்டாலே
அண்டம் அதிரப் பெரிதாய்க் கர்ச்சிப்பவன்;

விஷ்ணுவை
வெறுப்பவன்;
விடாது
வசை மொழி பல
வழங்குபவன்;

தர்ம காரியம் எங்கு
தலை தூக்கினாலும்
தானே வலியச் சென்று
தடுத்து நிறுத்தி
அதர்மம் செய்பவன்;


அந்த அரி
அல்ல தெய்வம்; தானே
அனைவர்க்கும் தெய்வம் என்று
அறிவித்தான்;
அவ்வாறு அவனைத் துதிக்காதார் தலையை
அரிந்தான்;

பலமுறை தேவர்களைப்
போர் செய்து தோற்கடித்து
புறமுதுகு காட்டி ஓடச் செய்தவன்;
பாவம் செய்வதற்கென்றே
பிறவி எடுத்தவன்;
நல்லவர்களை
நசுக்கினான்;
கெட்டவர்களுக்குக்
கொட்டிக் கொடுத்துக்
குசிபடுத்தினான்;

இவ்வாறு
இரண்யகசிபு
இயற்கைக்கு மாறாக
இயங்குவதற்குக் காரணம் அவன்
இளையவன்
இரண்யாக்சனின் மரணம்,
தம்பியின் மரணம்
தந்த ரணம்;


                                                                        ( பக்தி தொடரும் )

Tuesday, October 4, 2011

பக்த பிரகலாதன் - 1

                                    முன்னுரை - என்னுரை


     

பிரகலாதன்;
பக்த பிரகலாதன்; தன்
பக்தியினாலேயே
பாவம் செய்தவனைப்
பரலோகம்
அனுப்பியவன்;

அகிம்சையினாலேயே,
அட்டூழியம் செய்தவனை
அழித்தவன்;

அவன் கதையை இனி
அனுதினமும்
படித்து ரசிப்போம்;

பக்த பிரகலாதனின்
பக்தியில் திளைத்து
பரவசமடைவோம்,
வாரீர்;

                                                                        ( பக்தி தொடரும் )

Monday, October 3, 2011

அருள் தரும் அய்யப்பன் - 9

                                    சபரிமலை

'மன்னிக்கும் அளவுக்கு
தவறேதும் நிகழவில்லை;
எல்லாம் தன் விருப்பத்தாலே நிகழ்ந்தது;
எதற்காகப் பிறந்தேனோ
அவ்வேலை முடிய
வேளை வந்தது;
அனைத்தும் நடந்தேறியது;
இனி நான் தேவலோகம்
செல்வேன்' என்றுரைத்தான் மணிகண்டன்;

தாங்கள் எங்களோடு இருந்ததுக்கு நினைவாக
தங்களுக்கு ஒரு கோவில்
தான் கட்ட விரும்புவதை எடுத்துரைத்தான்
தந்தையான அரசன்;
தன்
வில்லிலிருந்து ஒரு அம்பு
விடுத்தான்,
வீர மணிகண்டன்; அவ்வம்பு
விழும் இடத்தில் ஒரு கோவில்


அமைக்கச் சொல்லி
அங்கிருந்து மறைந்தான்;
அந்த அம்பு சபரிமலையில்
போய் விழுந்தது;

மணிகண்டன் கட்டளைப்படியும்,
அகத்திய முனியின்
ஆலோசனைப்படியும்,
அரசன் பதினெட்டு படியோடு ஒரு
ஆலயம் அமைத்தான்;
ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான
அன்பர்கள்,
பூஜை சாமான்கள் ஒரு முடியும்,
பாதையில் தாம் சாப்பிடப்
பலகாரங்கள் ஒரு முடியும்,
ஆக இருமுடியோடு
அய்யப்பன் நாமம் சொல்லி பம்பை
ஆற்றில் நீராடி,
ஐயனை வழிபட்டு வருகின்றனர்;


ஆண்டு தோறும் மகர சங்கராந்தி
அன்று, அந்த அய்யன் ஜோதி வடிவில்
அன்பர்களுக்கு காட்சி
அளித்து
அருள் செய்கிறான்;

அய்யப்பன் அருள் நாமும் பெற்று
அநுதினமும் நலமுடன் வாழ்வோம்;


          ஹரி சிவன் மைந்தனே,
          பம்பையில் பிறந்தவனே,
          பந்தளத்து ராஜனே,
          குருகுலத்தில் வளர்ந்து,
          குருவின் துயர் துடைத்தவனே,
          அரக்கர்களை அழித்தவனே,
          புலியின் பால் கொணர்ந்தவனே,
          தாயின் துயர் தீர்த்தவனே,
          சபரிமலை சாஸ்தாவே,
          சரணம் ஐயப்பா
          சரணம் உன் பாதம்.


                                                                        ( முற்றும் )

Sunday, October 2, 2011

அருள் தரும் அய்யப்பன் - 8

                                    புலிப்பால்

மகிஷியைக் கொன்ற
மணிகண்டனை வாழ்த்தி பூ
மாறிப் பொழிந்தனர் தேவர்கள்;
மகேஸ்வரன் தன்
மகன் முன் தோன்றி வாழ்த்தினான்;

ஆண் புலியாக இந்திரன் உருமாறி வர,
பெண் புலியாக மற்ற தேவர்கள் தொடர்ந்து வர,
ஆண் புலி மீது
அமர்ந்து
அரண்மனை வந்தடைந்தான் மணிகண்டன்;
அரசிளங்குமரன்
ஆண் புலி மீது
அமர்ந்து வருவதைப் பார்த்த
அவ்வூர் மக்கள் பயந்து வியந்து
அங்கும்,இங்கும் ஓடினர்;


புலி மீது அமர்ந்து தன்
புதல்வன் வருவதைப்
பார்த்த மன்னன்
புரிந்து கொண்டான், தன்
புதல்வன் அந்த சிவனின் அருள்
பெற்றவன் என்று அறிந்துகொண்டான்;

'சூது செய்தவர்களை
உணர்ந்து கொண்டேன்;
அய்யன் என்னை மன்னிக்கவும்;
புலிகளைத் திருப்பி அனுப்பிவிடவும்' என்றே
பணிந்தான்
புரவலன்;


                                                                        ( அருள் தொடரும் )

Saturday, October 1, 2011

அருள் தரும் அய்யப்பன் - 7

                                    புலிப்பால்

திவானின்
திட்டப்படி அரசி
தனக்குத்
தீராத
தலைவலி இருப்பதாய்த்
தெரிவித்தாள்;



அரசு வைத்தியரும்
அந்த திவானின்
அடிமை ஆனதால்
'அரசே, அரசியாரின்
அடாத வலி தீர
அடவியிலிருந்து புலிப்பால்
அவசியம்
ஆரேனும் கொண்டுவரவேண்டும்' என்றே
அரற்றினார்;

புலிப்பால் கொண்டுவந்தால்
பாதி ராஜ்யமே
பரிசாய்க் கிடைக்குமென்று
பறைசாற்றப்பட்டது; ஆனாலும்
பயம் காரணமாய்
புலிப்பால் கொணர ஒருவராலும் முடியாது
போயிற்று;


கவலை கொண்டான்
காவலன்;
கவலை எதற்கு, தான்
கண்முன் இருக்கையில் என்றான்
கடவுளருளால் கிடைத்த புத்திரன்;

தான் சென்றுத்
தாய்க்கு புலிப்பால் கொணர்ந்து
தருவதாய்ச் சொல்லி அத்
தருணமே கிளம்பினான் மணிகண்டன்;
தனக்கும் வேறு வழி இல்லாததால்
அரை மனதோடு
அதற்கு சம்மதித்தான்
அரசன்;

                                    மகிஷி மரணம்

புலிப்பாலுக்காக மணிகண்டன் கானகம்
புக, பரமசிவனின் கட்டளைப்
படி, மணிகண்டனைக் காக்க வேண்டி
பஞ்ச பூதங்கள் அவன் பின் கானகம்
புக,
அந்நேரம்
அமுதம் உண்ட தேவர்கள் மேல்
ஆத்திரம் கொண்ட மகிஷி
அவர்களை துன்புறுத்த
அவ்விடம் நோக்கி வர, மணிகண்டனை
ஆர் என்று அறியாது
அவனோடு சண்டையிட எத்தனிக்க,
அக்கணமே அவளைக் கொன்று தான்
அவதாரம் எடுத்த பணி முடித்து,
புலிப் பால் தேடிப்
பயணம் தொடர்ந்தான்;

                                                                        ( அருள் தொடரும் )