Tuesday, January 24, 2017

கண்ணோட்டம்




அழுக்காக்கிய ஆடையை,
நீரில் நனைத்துத் துவைத்துக்
காய வைத்தேன்.
காய வைத்த ஆடையிலிருந்து
தனியே பிரிந்திருந்தது
ஒரு நூல்.
தனியே பிரிந்திருந்த நூலிலிருந்து
பனித்துளி போல் நீர்
சொட்டு சொட்டாய்க் கொட்டியது.
சொட்டும் நீரைப் ரசித்து
'கவிதை… கவிதை’ என்றேன்.

'துணியைக்
காயப்போடும்முன்
ஈரம் போக பிழியனும் னு கூடத் தெரியாது ?
எருமை எருமை' என்றாள்.

Monday, January 16, 2017

ஓம்



மாவு அரைக்கும் ஓசை
வெளியே பட்டாசு சத்தம்
இன்னும் உறங்காத பறவையின் ஒலி
மனதின் ஒரு மூலையில்
கொஞ்ச நேரத்திற்கு முன்
பார்த்துக் கேட்டு ரசித்த
'எனக்கொரு ஸ்நேகிதி ஸ்நேகிதி தென்றலமாதிரி'
பாடல் வரிகள்
அப்பாட்டிற்கு முன் கேட்ட
'தொடு தொடு வெனவே' பாடல்
மூளையில்,
மனதின் இன்னொரு மூலையில்,
இத்தனைக்கும் இடையில்
'ஓம்' என்ற மெல்லிய ஓசையினிடையில்
'ஓம்' என்று உச்சரித்துக்கொண்டு
தியானத்தில் நான்.

Friday, December 30, 2016

வாழ்க புறா !






காத்திருக்கும்
திரைச்சீலை விலகும் ஓசை கேட்டிருக்கும்

இறக்கை விரித்து
இங்கும் அங்கும் பார்த்துக்கிடக்கும்
குக் .. குக் ... குக் ... என்று கூவிக்கிடக்கும் 


ஒன்றோடொன்று இறக்கையால் அடித்துக்கொள்ளும்
ஒன்றை ஒன்று கொத்தி சண்டையிட்டுக்கொள்ளும்



தீனி தூவும்முன் கைமேல் மோதி பயமுறுத்தும்
கொஞ்சம் நாம் கையுயர்த்தி ஒலியெழுப்பினால்
எல்லாம் ஒருசேரப் பறந்து விலகிடும்.



பின் மீண்டும் வந்து ஒவ்வொன்றாய் கொத்தித் தின்னும்.
கூட்டத்தில் ஒன்று எப்பொழுதும் மற்ற எல்லாவற்றையும்
கொத்தி விரட்டி அராஜகம் செய்யும்





இறைந்த உணவு காலியானபின் எல்லாம் பறக்க
ஒன்று மட்டும் தனித்து நிற்கும்



கூச்ச சுபாவமோ ?
இன்னும் கொஞ்சம் தீனி இரைத்தால் சத்தமின்றி தின்று பின் மறையும்.


 வாழ்க புறா !

Wednesday, December 14, 2016

நாய்



எங்கிருந்ததோ இத்தனை நாள்
எனக்குத்தெரியாது.
ஒருநாள் என்வீட்டு வாசலிலமர்ந்து
புல்லாங்குழல் ஊதிக்கொண்டிருந்தேன்.

சங்கீதம் வராது சத்தம் மட்டும் வந்தது அப்பொழுது.
(இப்பொழுதும் அப்படித்தான் என்கிறது என்சுற்றம்).

விரும்பிக்கேட்டவர்கள் யாருமில்லை.
விலகியோடியவர்கள் நிறைய உண்டு.

ஒருநாள்
எங்கிருந்தோ ஒரு குட்டி நாய் ஓடிவந்தது,
என் காலினருகே அமர்ந்துகொண்டது.

இரண்டு பிஸ்கட்ஸ் லஞ்சம் கொடுத்தேன்,
உண்டு விட்டு வாலாட்டியது.

தொட்டுக் கொடுத்தேன்.
நாவால் என் காலை வருடியது.

மெல்ல புல்லாங்குழல் எடுத்து ஊதினேன்.
கோபத்தில் கடித்துவிட்டால் என்னபண்ணுவதென்ற
பயம் தான்.


தன் தலை தூக்கி எனை ப் பார்த்தது.
'நானாடா இன்றுனக்கு?' எனக் கேட்பதுபோல் இருந்தது.
வாசிப்பதை (ஊதுவதை) நிப்பாட்டினேன்.

லொள் என்று ஒரு சத்தம்.

வாசிக்கவா இல்லை ஓடவா என்றெனக்குப் புரியவில்லை.
சும்மா இருந்தேன்.
அதன் முதுகில் தடவிக்கொடுத்தப்படியே
'வாசிக்கட்டா?' என்று கேட்டேன்.

மீண்டும் ஒரு லொள்.

'சரி' என்கிறதா இல்லை
'நோ' என்கிறதா என்றெனக்குப் புரியவில்லை.

மீண்டும் ஊதினேன்.
மீண்டும் லொள்.

நிப்பாட்டினால், இரண்டு முறை 'லொள் லொள்'.

மீண்டும் ஊதினேன்.
மீண்டும் லொள்.

இவ்வாறாய் எங்கள் சிநேகம்
தினம் வளர்ந்தது.

மாலை நேரம் ஆனதும்,
புல்லாங்குழலும் பிஸ்கட்டுமாய்
நான் படியில் அமர
அந்த நாய் என்னருகில் அமர

ஒரே கச் சேரி தான்.

எனக்கு க் கிடைத்த ஒரு பார்வையாளன் (ர்)

நான் வாசிக்க வாசிக்க
நாய் என் காலினுள் நுழைந்து நுழைந்து
ஓடி ஆட,
அதன் ஆட்டம் என்னை வாசிக்க உற்சாகப்படுத்த
என் வாசிப்பு நாய்க்கு உற்சாகமூட்ட
தினம் அங்கே நடந்தேறியது
குழ லாட்டக் கச்சேரி.
...
...
...
இதோ
மூன்று நாட்கள் ஆகிவிட்டது.
என் நாயைக் காணவில்லை.
புல்லாங்குழல் இசையும் எழவில்லை.

எங்கு போனதோ தெரியவில்லை.

எங்காவது நீங்கள்
என் நாயினைப் பார்த்தால்
சின்னதாய் இருக்கும், வெள்ளை நிறம்,
இரண்டு கறுப்புப் புள்ளிகள் மட்டும் உடலில்.
ப்ளீஸ்
இரண்டு பிஸ்கட்டுகள் வாங்கித்தரவும்.
வண்டி ஓட்டும்போது கவனமாய் இருக்கவும்.

உங்கள் சக்கரத்தில்
என் நாயுடனான நட்பு இறப்பதை
நீங்கள் விரும்பமாட்டீர்கள்
என்பது
எனக்குத்தெரியும்.