Wednesday, December 14, 2016

நாய்



எங்கிருந்ததோ இத்தனை நாள்
எனக்குத்தெரியாது.
ஒருநாள் என்வீட்டு வாசலிலமர்ந்து
புல்லாங்குழல் ஊதிக்கொண்டிருந்தேன்.

சங்கீதம் வராது சத்தம் மட்டும் வந்தது அப்பொழுது.
(இப்பொழுதும் அப்படித்தான் என்கிறது என்சுற்றம்).

விரும்பிக்கேட்டவர்கள் யாருமில்லை.
விலகியோடியவர்கள் நிறைய உண்டு.

ஒருநாள்
எங்கிருந்தோ ஒரு குட்டி நாய் ஓடிவந்தது,
என் காலினருகே அமர்ந்துகொண்டது.

இரண்டு பிஸ்கட்ஸ் லஞ்சம் கொடுத்தேன்,
உண்டு விட்டு வாலாட்டியது.

தொட்டுக் கொடுத்தேன்.
நாவால் என் காலை வருடியது.

மெல்ல புல்லாங்குழல் எடுத்து ஊதினேன்.
கோபத்தில் கடித்துவிட்டால் என்னபண்ணுவதென்ற
பயம் தான்.


தன் தலை தூக்கி எனை ப் பார்த்தது.
'நானாடா இன்றுனக்கு?' எனக் கேட்பதுபோல் இருந்தது.
வாசிப்பதை (ஊதுவதை) நிப்பாட்டினேன்.

லொள் என்று ஒரு சத்தம்.

வாசிக்கவா இல்லை ஓடவா என்றெனக்குப் புரியவில்லை.
சும்மா இருந்தேன்.
அதன் முதுகில் தடவிக்கொடுத்தப்படியே
'வாசிக்கட்டா?' என்று கேட்டேன்.

மீண்டும் ஒரு லொள்.

'சரி' என்கிறதா இல்லை
'நோ' என்கிறதா என்றெனக்குப் புரியவில்லை.

மீண்டும் ஊதினேன்.
மீண்டும் லொள்.

நிப்பாட்டினால், இரண்டு முறை 'லொள் லொள்'.

மீண்டும் ஊதினேன்.
மீண்டும் லொள்.

இவ்வாறாய் எங்கள் சிநேகம்
தினம் வளர்ந்தது.

மாலை நேரம் ஆனதும்,
புல்லாங்குழலும் பிஸ்கட்டுமாய்
நான் படியில் அமர
அந்த நாய் என்னருகில் அமர

ஒரே கச் சேரி தான்.

எனக்கு க் கிடைத்த ஒரு பார்வையாளன் (ர்)

நான் வாசிக்க வாசிக்க
நாய் என் காலினுள் நுழைந்து நுழைந்து
ஓடி ஆட,
அதன் ஆட்டம் என்னை வாசிக்க உற்சாகப்படுத்த
என் வாசிப்பு நாய்க்கு உற்சாகமூட்ட
தினம் அங்கே நடந்தேறியது
குழ லாட்டக் கச்சேரி.
...
...
...
இதோ
மூன்று நாட்கள் ஆகிவிட்டது.
என் நாயைக் காணவில்லை.
புல்லாங்குழல் இசையும் எழவில்லை.

எங்கு போனதோ தெரியவில்லை.

எங்காவது நீங்கள்
என் நாயினைப் பார்த்தால்
சின்னதாய் இருக்கும், வெள்ளை நிறம்,
இரண்டு கறுப்புப் புள்ளிகள் மட்டும் உடலில்.
ப்ளீஸ்
இரண்டு பிஸ்கட்டுகள் வாங்கித்தரவும்.
வண்டி ஓட்டும்போது கவனமாய் இருக்கவும்.

உங்கள் சக்கரத்தில்
என் நாயுடனான நட்பு இறப்பதை
நீங்கள் விரும்பமாட்டீர்கள்
என்பது
எனக்குத்தெரியும்.

No comments:

Post a Comment