ஏனிந்தச் சோகமெனக் கேட்ட என் சகியே,
கேளடி என்னெஞ்சக் குமுறலை,
எனைச் சோகத்திலாழ்த்தும் நிகழ்வுகளை,
வேதனையிலெனை வேக வைக்கும் விடயங்களை;
அன்பே என்றெனை அழைத்தவன்,
அழகு வார்த்தை பலவற்றாலெனை ஆராதித்தவன்,
ஆரவாரம் ஏதுமின்றி என்பின்னே வந்து
ஆசையில் அணைத்தெனை முத்தமிட்டவன்,
அறிவிப்பு ஏதும்செய்யாது
அனாதையாயெனை தவிக்கவிட்டு சென்றானடி;
நாயகன் இன்று வருவான்
நாளை என்முன் தோன்றுவானென்று
நானும் அனுதினமும் ஆவலாய்க் காத்திருக்கேனடி;
நான் நட்டு, பூத்திருந்தச் செடி
காய்த்துக் கனிந்துவிட்டதடி, என்
காதலனை மட்டும் காணாது, நான்
கலங்கி நிற்கிறேனடி;
காலை மாலை ஏதும் புரியாது
கவலையில் தனித்து நிற்கிறேனடி;
தோழி நம்மோடாடித்திருந்தோர் பலரும்,
தமக்கென்றோர் இல் அமைத்து
தனித்து சுகித்து முயங்கி மயங்கி
இன்பம் கண்டே திரிகின்றனரடி,
ஏனோ எனைக் கொண்டவன் மட்டும்
ஏறுமுகம் காட்டி எனை விடுத்து சென்றானடி;
தவறேதும் செய்தேனில்லை நான்,
தலைவன் முகம்கோணும் முறையில்
குறையேதும் வைத்தேனில்லை நான்,
கொஞ்சிக் கொஞ்சி அவன் பேசுகையில்
குறுக்கே நிறுத்தி குற்றமேதும் சொன்னதில்லை
நான்;
அன்பை அள்ளித்தந்தேன்,
அழைக்கையிலெல்லாம் அவன்மடியில் கிடந்தேன்,
ஆராரோ பாடி அவனைத் துயிலவைத்தேன் - என்
அலங்காரம் அனைத்துமவன்களைக்க
அதனைக் கண்டு ரசித்தேன்.
நர்தங்காய் இங்கே வந்துட்கார்,
நாற்பதுக்குப் பின்னே
நாய் குணமாம், இள
நங்கையரைக் கண்டால்
நகைக்குமாம்,
நன்றாய்ப் படித்தவர் சொன்னார்.
நாளையே நான் இறந்துவிட்டால், என்
நாயகன் ஒருகால் எனைத் தேடி வந்தால்,
‘அன்பை உன்மேல் வார்த்தவள்,
நீயே தன்னுயிராய் வாழ்ந்தவள்,
இறக்கும் தருவாயிலும்
உனை எண்ணியே ஏங்கிக் கிடந்தவள்
இனி நீ காணமுடியாதவாறு
காற்றில் கலந்து விட்டாள்’ என்றுச் சொல்லிவிடு;
'அடுத்த ஜென்மத்தில்
அவனே நாயகனாக வரவும்,
அவ்வாறவன் வந்தால்
அணுவளவும் பிரியாது வாழவும் ஆசைப்பட்டாள்
‘
என்று இதையும் சொல்லிவிடு;
No comments:
Post a Comment