Friday, December 16, 2011

அமர்நீதி நாயனார் - 2

வந்தவர் யாரெனத் தெரியாதே
வரவேற்றார் அமர்நீதியார்.

'ஆண்டவனுக்குச் சேவை என்றெண்ணியே,
அடியவர்கட்கு சேவை செய்கிறேன்
அடியேன், இன்றெம் வீட்டில்
அமுதுண்ண வேண்டும்,
அருள் செய்ய வேண்டும்' என்று சொல்லி
அனைத்து ஏற்பாடுகளையும்
அமர்நீதியார் செய்தார்.

'ஆகட்டும்,
நான் காவிரியில் நீராடி
வருகிறேன்,
அதுவரை என் துணியை
மழையில் நனையாது
பாதுகாத்து வரவும், நான்
கேட்டவுடன் திருப்பித் தரவும்’;

'அப்படியேச் செய்கிறேன்' என
அமர்நீதியார் சொல்ல,
அடியார் அங்கிருந்து அகன்றார் காவிரியில் நீராட.

     ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவாறுமக்கே
     ஈங்கு நான்சொல்லவேண்டுவதில்லை நீரிதனை
     வாங்கி நான் வருமளவும் உம்மிடத்திகழாதே
     ஆங்கு வைத்து நீர்தாரும் என்றவர் கையிற் கொடுத்தார்.

பிரம்மச்சரியன் வேடத்தில் வந்த
பரமேஸ்வரன்
பரம ரகசியமாய்த்
தான் தந்த ஆடையை மறையச் செய்தார்;
சிறிது நேரம் கழித்து
குளித்து முடித்துத் திரும்பி வந்தார்;

'என் உடை ஈரமாயிருக்கிறது,
நான் தந்த மாற்று உடை
தருவீரா ?' எனக் கேட்க,
அவர் தந்த உடை வைத்த இடத்தில்
அமர்நீதியார் பார்க்க,
அங்கே மாற்று உடை இல்லாததும்
அதிர்ச்சி அடைந்தார்;

எங்கு தேடியும் இல்லாது,
என்ன செய்வதென்று தெரியாது
திகைத்து நின்றார்.
மாற்று ஏற்பாடாக
புதியத் துணி
வேதியர் அணிய எடுத்து வந்தார்;

'புனிதமானவரே,
தாங்கள் தந்த ஆடை
வைத்த இடத்திலில்லை;
எப்படியோ எங்கோ மறைந்துவிட்டது;
அதிசயமாய் இருக்கிறது,
ஆனால் உண்மை;
தயை செய்து
தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும்;
இந்த மாற்றாடையை உடுத்த வேண்டும்;
தயாராய் உணவிருக்கு, உண்ண வேண்டும்’;

அமர்நீதியார் வேண்டிநின்றார்;
சிவனடியார் ஆத்திரம் கொண்டார்;

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment