Monday, February 3, 2020

கம்பராமாயணம் 26



1727.
மின் ஒத்த சீற்றக் கனல் விட்டு
    விளங்க நின்ற,
பொன் ஒத்த மேனிப் புயல் ஒத்த
     தடக் கையானை,
'என் அத்த! என் நீ இமையோரை
    முனிந்திலாதாய்,
சன்னத்தன் ஆகித் தனு ஏந்துவதற்கு
   ஏது?' என்றான்.

மின்னல் போன்று கோப நெருப்பு பிரகாசிக்க
பொன் நிற மேனியையும்
மேகம் போன்று வாரி வழங்கும்  கையினையும்
உடைய இலக்குவனை நோக்கி
'என் தலைவ,
(நடந்ததெல்லாவற்றுக்கும் காரணமான) தேவர்களை இகழாதே,
யுத்த முனைப்புடன் வில்லேந்தி நிற்கும்படி
இப்போது என்ன ஆயிற்று?'
என்று இராமன் இலக்குவனைக் கேட்டான்.



1734.
'நதியின் பிழை அன்று 
   நறும் புனல் இன்மை; அற்றே 
பதியின் பிழை அன்று;
   பயந்து நமைப் புரந்தாள் 
மதியின் பிழை அன்று;
   மகன் பிழை அன்று; ,மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு 
   என்னை வெகுண்டது?' என்றான்.

ஆற்றில் சில காலம் நீரில்லை எனில் 
அது நதியின் பிழை இல்லை;
அதுபோலவே,
(எனைக் காடு போகச் சொன்னது)
தந்தையின் பிழை இல்லை,
பெற்று நமை வளர்த்த கைகேயி யின் 
அறிவின் பிழை இல்லை;
அவள் மகன் பரதனின் பிழை இல்லை;
விதியால், ஊழ்வினையால் விளைந்த பிழை இது;
இதற்காக இவர்களை நீ கோபிப்பது எதற்கு?
என்றான் இராமன்.


1827.
'பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது 
ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும் 
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு, நின் 
பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?' என்றாள்.

'இரக்கம் இல்லாது, மனதில் ஒரு அன்பு இல்லாது 
எனை விட்டு விலகிச் செல்கின்றாய்;
பிரளய காலத்து சூரியன் சுடுவான் என்பது 
எவ்விடத்துள்ளது ?
இங்கே உனைப் பிரிந்து, தவித்து,
தனிமையில் ஏங்கி, மெத்தை சுட்டு 
இதைவிட சுடுமோ அந்த பெருங்காடு ?' 
எனக் கேட்டாள் சீதை.


1835.
சீரை சுற்றித் திருமகள் பின் செல,
மூரி விற் கை இளையவன் முன் செல,
காரை ஒத்தவன் போம்படி கண்ட, அவ் 
ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ?

மரவுரி அணிந்து சீதை பின்னே செல்ல,
கையில் வலிய வில்லேந்தி இலக்குவன் முன்னே செல்ல,
கார் மேக வண்ணன் இராமன் போவதைப் பார்த்து 
அவ்வூர் மக்கள் அடைந்த துன்பத்தை 
எடுத்துக் கூறவும் இயலுமோ?



( தொடரும் )

Sunday, February 2, 2020

கம்பராமாயணம் 25



நகர் நீங்கு படலம்

1625.
வரி வில் எம்பி இம் மண் அரசு ஆய், அவற்கு
உரிமை மா நிலம் உற்றபின், கொற்றவன்
திருவின் நீங்கித் தவம் செயும் நாள் உடன்
அருமை நோன்புகள் ஆற்றுதி ஆம் அன்றே!

(என்னையும் உன்னோடு அழைத்துச் செல்,
என்று சொன்ன கோசாலையிடம்)

அழகான வில்லுடைய என் தம்பி இம்மண்ணிற்கு அரசனாக,
அவனுக்கு இந்த நிலம் ஆளும் திறம் வந்த பின்பு,
அரசன் தசரதன் அரசபோகத்தை மறந்து
அடவி சென்று தவம் செய்யும் காலத்தில்
அவனோடு சென்று செயற்கரிய காரியங்களை
அப்பொழுது செய்வாய்' என்றான் இராமன்.


1654.
இன்னே பலவும் பகர்வான் 
    இரங்காதாளை  நோக்கி 
 'சொன்னேன் இன்றே; இவள் என் 
     தாரம் அல்லள்; துறந்தேன்;
மன்னே ஆவான் வரும் அப் 
     பரதன் தனையும் மகன் என்று 
உன்னேன்; முனிவா! அவனும் 
   ஆகான் உரிமைக்கு' என்றான்.

இன்னும் பலவாறு தசரதனும், வசிட்டனும் 
அறிவுரை கூறியும் மனமிலகாத கைகேயியை நோக்கி 
'இதோ இன்று சொல்கிறேன்,
இவள் இனி என் மனைவி இல்லை, இப்பொழுதே 
இவளை என் மனதிலிருந்து அகற்றி விட்டேன்.
மன்னனாகப் போகும் இவள் மகனை  
இனி என் மகன் என்று கருத மாட்டேன்.
எனக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கடன்களுக்கு 
அவன் உரிமையற்றவன்' என்றான் தசரதன்.


1690.
'கண்ணுள் மணிபோல் மகவை 
    இழந்தும் உயிர் காதலியா 
 உண்ண எண்ணி இருந்தால் 
    உலகோர் என் என்று உரையார்?
விண்ணின்தலை சேருதும் யாம் ;
   எம்போல், விடலை பிரிய  
 பண்ணும் பரி மா உடையாய்  
    அடைவாய், படர் வான்' என்னா.

(தசரதன் அன்று பெற்ற சாப வரலாற்றை 
கோசாலைக்கு உரைத்தான்)
கண்ணின் மணி போன்ற மகனை இழந்த பின்னும் 
உயிர் மேல் ஆசை கொண்டு உண்டு கிடந்தால் 
உலகம் என்ன உரைக்கும்?
நாங்களும் இப்போதே இறக்கிறோம்
அழகான குதிரையுடைய மன்னா,
எங்களைப்போல் நீயும், மகன் பிரிய,
வருந்தி வானுலகை வந்து அடைவாயாக'
என்று முன்னம் நிகழ்ந்ததைச் சொன்னான்.

1703.
ஆவும் அழுத, அதன் கன்று  
   அழுத; அன்று அலர்ந்த 
பூவும் அழுத; புனல் புள்
    அழுத; கள் ஒழுகும் 
காவும் அழுத; களிறு அழுத;
    கால் வயப் போர் 
மாவும் அழுத; - அம் 
    மன்னவனை மானவே.

பசுக்கள் அழுதன 
அப் பசுக்களின் கன்றுகள் அழுதன;
அன்று மலர்ந்த பூக்கள் அழுதன;
நீர் வாழ் பறவை இனங்கள் அழுதன;
தேன் சிந்தும் மலர்ச் சோலைகள் அழுதன;
யானைகள் அழுதன;
காற்றை ஒத்த வலிய குதிரைகள் அழுதன;
மகனைப் பிரிந்து அழும் மன்னன் போலவே;



1718.
சிங்கக் குருளைக்கு இடு தீம்
   சுவை ஊனை, நாயின்
வெங் கண் சிறு குட்டனை
   ஊட்ட விரும்பினாளே!
நங்கைக்கு அறிவின் திறம்
   நன்று, இது! நன்று இது!' என்னா
கங்கைக்கு இறைவன்
   கடகக் கை புடைத்து நக்கான்.

சிங்கக் குட்டிக்கு தரப்படும்
சுவையான மாமிச உணவை
கொடிய கண்ணுடைய நாய்
தன் சிறு குட்டிக்குத் தர எண்ணுதோ?
கைகேயி யின் புத்தி திறம் மிக நன்று
எனச்சொல்லி, இலக்குவன்
கடகம் அணிந்தக் கையைத் தட்டிச் சிரித்தான்.


( தொடரும் )


Saturday, February 1, 2020

கம்பராமாயணம் 24




1522.  'கண்ணே வேண்டும்' எண்ணினும்
                 ஈயக் கடவேன்; என்
           உள் நேர் ஆவி வேண்டினும் இன்றே
                 உனது அன்றோ?
           பெண்ணே! வன்மைக் கேகேயன் மானே
                 பெறுவாயேல்
           மண்ணே கொள் நீ; மற்றையது ஒன்றும்
                 மற' என்றான்.

'கண்களைக் கேள் தருகிறேன்,
என் உடலின் உள்ளே உள்ள உயிர் வேண்டுமெனினும் 
இப்பொழுது அதை உன் வசம் ஆக்குவேன்,
பெண்ணே! வள்ளல் கேகேயன் மகளே,
நீ பெற விரும்பும் மண்ணை
இப்பொழுதே எடுத்துக்கொள்.
மற்றொரு வரத்தை மறந்துவிடு' என்றான் தசரதன்.



1538.   'வீய்ந்தாளே இவ் வெய்யவள்' என்னா 
                    மிடல் வேந்தன் 
             'ஈந்தேன்! எந்தேன்!' இவ்வரம்;
                     என் சேய் வனம் ஆள
            மாய்ந்தே நான் போய் வான் உலகு 
                    ஆள்வென்; வசை வெள்ளம் 
            நீந்தாய், நீந்தாய், நின் 
                  மகனோடும் நெடிது!' என்றான்.

'கேட்டது கிடைக்காவிட்டால் உயிர் விடுவேன்' என்றதால் 
வலிமை பொருந்திய தசரதன்,
'தந்தேன் தந்தேன், நீ கேட்ட வரம்;
என் மகன் காடு புக 
நான் வானம் புகுவேன்;
இந்த உலகம் எனும் பழிக்கடலைக்  
கடக்க முடியாது,
நெடுங்காலம் 
 நீ, உன் மகனோடு 
நீந்தி நீந்திக் கிடப்பாய்' என்றான்.



1601.   " 'ஆழி சூழ் உலகம் எல்லாம் 
                   பரதனே ஆள, நீ போய்த் 
             தாழ் இருஞ் சடைகள் தாங்கி 
                   தாங்க அருந் தவம் மேற்கொண்டு 
             பூழி வெங் கானம் நண்ணி 
                   புண்ணியத் துறைகள் ஆடி,
             ஏழ்-இரண்டு ஆண்டின் வா' என்று 
                   இயம்பினன் அரசன்" என்றாள்.

'கடல் சூழ்ந்த இந்த உலகை 
பரதன் அரசனாயிருந்து ஆள,
நீ சடை முடி வளர்த்து 
அருந்தவம் மேற்கொண்டு 
புழுதி நிறைந்த வனத்தில் தங்கி 
புண்ணியத் தலங்களில் நீராடி 
பதினான்கு ஆண்டுகள் கழிந்து வா 
என்று அரசன் சொன்னான்' என்றாள்.


1604.   'மன்னவன் பணி அன்றாகின்,
                 நும் பணி மறுப்பெனோ? என் 
            பின்னவன் பெற்ற செல்வம் 
                 அடியனேன் பெற்றது அன்றோ?
            என் இனி உறுதி அப்பால்?
                  இப் பணி தலைமேல் கொண்டேன்;
            மின் ஒளிர் கானம் இன்றே 
                  போகின்றேன்; விடையும் கொண்டேன்;

'அரசன் கட்டளையோ,
அன்னை தங்கள் கருத்தோ, மறுப்பேனா ?
என் தம்பி பரதன் பெற்றது, நான் பெற்றதன்றோ?
இதை விட நன்மை வேறு எது?
இந்தக் கட்டளையை தலைமேல் கொள்வேன்
மின்னல் போல் ஒளி வீசும் காட்டிற்கு 
இப்பொழுதே போகிறேன்;
விடை பெற்றுக் கொண்டேன்'
என்றான் இராமன்.


( தொடரும் )

Friday, January 31, 2020

கம்பராமாயணம் 23


1488.   'இரு வரத்தினில், ஒன்றினால்
                 அரசு கொண்டு, இராமன்
             பெரு வனத்திடை ஏழ் - இரு
                  பருவங்கள் பெயர்ந்து
             திரிதரச் செய்தி, ஒன்றினால்;
                   செழு நிலம் எல்லாம்
             ஒருவழிப்படும் உன் மகற்கு
                   உபாயம் ஈது' என்றாள்.

(சம்பராசுரனுடன் நடந்த யுத்தத்தில்
தசரதனுக்கு தேரோட்டி அவனைக் காத்ததால்
இரண்டு வரம் தந்தானல்லவா)
'அந்த இரண்டு வரங்களைக் கேள்,
அவற்றை இப்போது தரச் சொல்,
ஒரு வரத்தால், அரசுரிமை கொள்,
பரதனை சிம்மாசனத்தில் அமர்த்து.
இன்னொரு வரத்தால் இராமனை
ஏழு இரண்டு வருடங்கள் காட்டுக்கு அனுப்பு.
இங்கிருந்து கிள ப்பி  எங்கோ திரியச் செய்.
அதற்குள் இந்த செழிப்பான நிலமெல்லாம்
உன் மகன் வசப்படும்,
இதுவே உபாயம்' என்றாள் கூனி.


கைகேயி சூழ்வினைப் படலம்

1493.   தா இல் மா மணிக் கலன் மற்றும்
                தனித் தனி சிதறி,
            நாவி ஓதியை நானிலம்
                தைவரப் பரப்பி
            காவி உண் கண் அஞ்சனம்
                கான்றிடக் கலுழா
           பூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப்
                புவிமிசைப் புரண்டாள்.

நல்ல தரமான மணிகளால் ஆன அணிகலன்களை
வேறு வேறாக பிய்த்து சிதைத்து எறிந்தாள்.
நல்ல நெய் பூசி அலங்கரிக்கப்பட்ட கூந்தலை
விரித்து தரையில் புரளுமாறு பரப்பிக்கொண்டாள்.
நீலமலர் போன்ற வசீகரிக்கும் கண்களிலிருந்து
மை கரையும்படி சிந்தும்படி அழுதபடிக் கிடந்தாள்.
மலர்களை எல்லாம் இழந்துவிட்ட ஒரு குச்சி போல்
தரையில் விழுந்து புரண்டாள்.


1498.   நின்று தொடர்ந்த நெடுங் கைதம்மை நீக்கி
            மின் துவள்கின்றது போல, மண்ணில் வீழ்ந்தாள்;
            ஒன்றும் இயம்பலள்; நீடு உயிர்க்கலுற்றாள்
            மன்றல் அருந் தொடை மன்னன் ஆவி அன்னாள்.

மணம் கமழும் மலர்மாலை அணிந்த மன்னவனின்
உயிருக்கு உயிரான கைகேயி,
தன் எண்ணத்தில் உறுதியாய் இருந்தாள்.
தொட நெருங்கிய கையைத் தடுத்தாள்.
மின்னற்கொடி துவண்டு வீழ்தல் போல் தரையில் வீழ்ந்தாள்.
வேறெதுவும் சொல்லாது, பெருமூச்சு விடத் தொடங்கினாள்.


1505.   நாகம் எனும் கொடியாள், தன் நாவின் ஈந்த 
            சோக விடம் தொடர, துணுக்கம் எய்தா 
            ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து அராவின் 
            வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான்.

பாம்பு போன்ற கைகேயி நாக்கிலிருந்து வந்த
விடம் போன்ற வரங்கள் தனைப் பற்றிக்கொள்ள 
 உடல் நடுங்கி, வெந்து சோர்ந்து
நஞ்சுடைய நாகம் கடித்த யானை போல 
தரையில் விழுந்தான்.


( தொடரும் )

Thursday, January 30, 2020

கம்பராமாயணம் 22



மந்தரை சூழ்ச்சிப் படலம்


1402.   மன் நெடுங் கழல் வந்து வணங்கிட
            பல் நெடும் பகல் பார் அளிப்பாய்!' என
            நின் நெடும் புதல்வன்தனை, நேமியான்
            தொல் நெடும் முடி சூட்டுகின்றான்' என்றார்.

'எல்லா அரசர்களும்,
வீரக் கழல் அணிந்த உன் பாதம் பணிந்திட,
பல காலம் இந்த மண்ணுலகை ஆள்வாய்'
என வாழ்த்தி, தசரதன், உன் மகன் இராமனுக்கு,
பழமை வாய்ந்த திருமுடியை,
அணிவிக்கப்போவதாகக் கூறினார்
(என்று மங்கையர் ஓடிவந்து கோசாலையிடம் தெரிவித்தனர்)


1411.   ஒல்கல் இல் தவத்து உத்தமன், ஓது நூல் 
            மல்கு கேள்விய வள்ளலை நோக்கினான்;
            'புல்கு காதல் புரவலன், போர் வலாய்!
            நல்கும் நானிலம் நாளை நினக்கு' என்றான்.

தளர்ச்சி இல்லாது, தவ நெறி நிறைந்த நல்லவன் வசிட்டன்,
கற்க வேண்டியவற்றைக் கற்று, நிறைய  
கேள்வி ஞானம் நிறைந்த வள்ளல் இராமனைப் பார்த்து 
'போரில் வல்லவனே, 
உன் மேல் நிறைய அன்பு வைத்திருக்கும் தசரதன்,
உனக்கு அரசாட்சியை நாளை தருவான்' 
என்று தெரிவித்தான்.


1445.   அந் நகர் அணிவுறும் அமலை, வானவர்
            பொன்னகர் இயல்பு எனப் பொலியும் எல்லையில்
            இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல்
            துன்ன அருங் கொடு மனக் கூனி தோன்றினாள்.


அயோத்தி நகரம்
அழகு படுத்தப்படும் ஆரவாரத்தால்,
தேவர்களின் அமராவதியோ என்று
எண்ணப்படும் தருணத்தில்,
துன்பம் தரும் இராவணன் புரிந்து தீமை
உருவம் கொண்டு வந்தது போல்,
கொடிய மனம் கொண்ட கூனி
வெளியில் வந்து நகரைப் பார்த்தாள்.



1459.   தெழித்தனள்; உரப்பினள்; சிறு கண் தீ உக
            விழித்தனள்; வைதனள்; வெய்து உயிர்த்தனள்;
            அழித்தனள்; அழுதனள்; அம் பொன் மாலையால்
            குழித்தனள் நிலத்தை - அக் கொடிய கூனியே.

கத்தினாள், அதட்டினாள்,
கண்ணில் பொறி பறக்க முறைத்தாள்;
திட்டினாள்; வெப்ப மூச்சு விட்டாள்;
தன் கோலத்தை அலங்கோலமாக்கிக்கொண்டாள்;
அழுதாள்; சேதி சொன்னதும், மகிழ்ந்து 
கைகேயி பரிசாய்த் தந்த பொன்மாலையை
நிலத்தில் குழி விழும் படி வீசினாள் -
கொடிய நெஞ்சை உடையக் கூனி.


1483.   தீய மந்தரை இவ் உரை செப்பலும், தேவி 
            தூய சிந்தையும் திரிந்தது - சூழ்ச்சியின் இமையோர் 
            மாயையும், அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும் 
            ஆய அந்தணர் இயற்றிய அருந் தவத்தாலும்.

கொடுமை நிறைந்த சொற்களை கூனி கூறவும் 
தேவி கைகேயி யின் நற்சிந்தனை மாறியது.
(மாறியதற்கு இன்னொரு காரணம்) 
தேவர்களின் சூழ்ச்சி மாயையும்,
அவர்கள் ஏற்கனவே வரம் பெற்றிருந்ததாலும் 
தூயவர்கள் செய்த கடும் தவத்தாலும்,
கைகேயி யின் மனம் மாறியது.


( தொடரும் )

Wednesday, January 29, 2020

கம்பராமாயணம் 21


1343.   ஆதலால் இராமனுக்கு அரசை நல்கி இப்
            பேதமைத்தாய் வரும் பிறப்பை நீக்குறு
            மா தவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன்
            யாது நும் கருத்து?' என இனைய கூறினான்.

(தசரதன் அரசவையில் தன் எண்ணங்களைச் சொல்லி)
ஆதலால், இராமனை அரசனாக்கிவிட்டு
அறியாமையை தரும் இப் பிறப்பு நோய் விட்டகல
அரிய தவம் கானகத்தில் செய்யப்போகிறேன்
அவையோரே, என்ன உங்கள் கருத்து என்று கேட்டான்.


1361.   அலங்கல் மன்னனை அடிதொழுது 
                    அவன் மனம் அனையான் 
            விலங்கல் மாளிகை வீதியில் 
                    விரைவொடு சென்றான் 
            தலங்கள் யாவையும் பெற்றனன் 
                    தான் எனத் தளிர்ப்பான் 
            பொலன் கொள் தேரோடும்  
                    இராகவன் திருமனை புக்கான்.

மாலை அணிந்த மன்னவனை வணங்கி 
அவன் மனதை ஒத்த சுமந்திரன் 
உலகம் யாவும் தனக்கே கிட்டியது போல் மகிழ்ந்து 
மலை போன்ற மாளிகைகள் நிறைந்த அரச வீதியில் விரைந்து
பொன்மயமான தேரினில் இராமன் இல்லம் அடைந்தான்.


1382.   தாதை அப் பரிசு உரைசெய 
                 தாமரைக் கண்ணன் 
            காதல் உற்றிலன்; இகழ்ந்திலன்;
                 'கடன் இது' என்று உணர்ந்தும் 
            'யாது கொற்றவன் ஏவியது 
                   அது செயல் அன்றோ 
            நீதி ஏற்கு?' என நினைந்தும் 
                    அப் பணி தலைநின்றான்.

தந்தை தன் எண்ணத்தை உரைத்தும் 
தாமரைக் கண்ணனோ, அதுவரை 
அரசாட்சியை விரும்பியதுமில்லை, 
வெறுத்து ஒதுங்கியதுமில்லை. 
இது தன் கடமை என்றே கருதினான்.
அரச ஆணை எதுவோ 
அதை நிறைவேற்றுவதே நியாயம் என்று எண்ணி 
பதவி ஏற்க சம்மதித்தான்.



1394.   ஊருணி நிறையவும், உதவும் மாடு உயர் 
             பார் கெழு பயன்மரம் பழுத்தற்று ஆகவும் 
             கார் மழை பொழியவும் கழனி பாய் நதி 
             வார் புனல் பெருகவும், மறுக்கின்றார்கள் யார்?

ஊர் மக்கள் குடிக்க பயன்படுத்தும் நீர்நிலை நிறைய 
பலருக்கும் உதவும் வகையில் மரம் வளர்ந்து பழுத்திருக்க 
கார்காலத்தில் மழை பொழியவும் 
வயல்களில் பாய்கிற ஆறு நீர் நிறைந்திருக்கவும் 
யாராவது வேண்டாமென்பார்களா ?
(அதுபோல் இராமன் அரசனாக மறுப்பார்களா?)

 
( தொடரும் )




Tuesday, January 28, 2020

கம்பராமாயணம் 20


1253.   கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம்
            தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கா
            ஆய தன் அன்னை அடித் துணை சூடி
            தூய சுமித்திரை தாள் தொழலோடும்.

கேகயன் மகளான கைகேயி யின்
ஒளிமிகுந்த பாதங்களை
தாய் கோசலை யிடம் கொண்டுள்ள அன்பைக் காட்டிலும்
அன்போடு தாழ்ந்து வணங்கி,
அன்னை கோசலையின் அடிகளை தலையில் சூடி,
உள்ளத்தில் ,தூயவளான சுமித்திரையை வணங்கினர்
இராமனும் சீதையும்.


1259.    வள்ளல் தனக்கு இளையோர்கள் தமக்கும்
             எள்ளல் இல் கொற்றவன் 'எம்பி அளித்த
             அள்ளல் மலர்த் திரு அன்னவர் தம்மைக்
             கொள்ளும்' எனத் தமரோடு குறித்தான்.

அள்ளித் தரும் வள்ளல் இராமனின் தம்பியர்க்கு 
தவறேயிழைக்காத ஜனகன்
'என் தம்பியரின், செந்தாமரை மலரொத்த மங்கையரை 
மணம் செய்துகொள்ளும்' என்று
தசரதன் முதலிய உறவினர்களோடு நிச்சயித்தான்.


பரசுராமப் படலம் 

1266.   முன்னே நெடு முடி மன்னவன் 
                முறையில் செல, மிதிலை
            நன் மா நகர் உறைவார் மனம்
                நனி பின் செல, நடுவே
            தன் ஏர் புரை தரு தம்பியர்
                தழுவிச் சேலை மழைவாய்
            மின்னே புரை இடையாளொடும்
                இனிது ஏகினன் வீரன்.

முறைப்படி மகுடம் சூடிய தசரதன் முன்னே செல்ல,
மிதிலை நகர் மக்கள் மனம் பின்னே தொடர,
நடுவில், தன் அலகையொத்த தம்பியர் அருகில் தொடர
மின்னலிடையாள் ஜானகியோடு
மாவீரன் இராமன் அயோத்தி நோக்கி புறப்பட்டான்.


 1280.  'இற்று ஒடிய சிலையின் திறம் 
                  அறிவென்; இனி யான் உன் 
             பொன் தோள் வலி நிலை சோதனை 
                   புரிவான் நசை உடையேன்;
              செற்று ஓடிய திரள் தோள் உறு 
                    தினவும் சிறிது உடையேன்;
             மற்று ஓர் பொருள் இலை; இங்கு இது 
                  என் வரவு' என்றனன் உரவோன்.

ஏற்கனவே உடைந்த பழைய வில் அது என்பதை அறிவேன்;
உன் தோள் வலிமையை சோதிக்க விரும்புகிறேன்;
பல அரசர்களை வென்று கொன்ற திமிர் உடையவன்;
வேறு வேலை ஏதுமில்லை, இங்கு வந்ததற்கு இதுவே நோக்கம்,
என்றுரைத்தான் வலிமை நிறைந்த பரசுராமன்.


1297.   என்றனன் என்ன, நின்ற 
                   இராமனும் முறுவல் எய்தி 
             நன்று ஒளிர் முகத்தன் ஆகி     
                  'நாரணன் வலியின் ஆண்ட 
             வென்றி வில் தருக!' என்ன 
                 கொடுத்தனன்; வீரன் கொண்டு, அத் 
            துன்று இருஞ் சடையான் அஞ்ச 
                  தோளுர வாங்கி, சொல்லும்:

பரசுராமன் போருக்கு சூளுரைக்க  
அத்தனையும் கேட்டு, 
இராமன் ஒரு புன்னகை பூக்க  
முகம் பொலிவு பெற,
'நாராயணன் தன் வலிமையினால் பயின்றந்த 
வில்லைத் தருக' எனக் கேட்க,
பரசுராமனும் தர,
அதனை வாங்கிக்கொண்டு 
சடைமுடி அணிந்த பரசுராமன் அஞ்சுமாறு 
தோள் வரை இழுத்து, வளைத்து 
இலக்கு கேட்டான்.


1307.   பூ மழை பொழிந்தனர் புகுந்த தேவருள் 
            வாம வேல் வருணனை, 'மான வெஞ் சிலை 
            சேமி' என்று உதவி, தன் சேனை ஆர்த்து எழ 
            நாம நீர் அயோத்தி மா நகரம் நண்ணினான்.

(பரசுராமன் அங்கிருந்து அகன்றதும்)
பூ மழை பொழிந்தனர் அங்கு வந்த தேவர்கள் அனைவரும்.
அழகிய வேற்படையுடைய வருண தேவனை நோக்கி 
'பெருமையுடைய இந்த வில்லை பாதுகாத்திடு' என்று இராமன் கூறி,
சேனைகளின் ஆரவாரத்திற்கிடையில் 
தூய நீர் வளம் நிறைந்த அயோத்தி மாநகரம் வந்து சேர்ந்தான்.


பாலகாண்டம் நிறைவுற்றது 

( தொடரும் )