Tuesday, July 9, 2019

பொன்மாலைப் பொழுதில் 58

437. பார்த்து ப்ரமித்தது போதும். பிறவிப் பயன் தேடி பயணப்படுவோமா?
பேசி சிரித்துப் பழகியது போதும்,
அடுத்த கட்டம் நோக்கி நகர்வோமா?
கனவில் வந்தென் உறக்கம் களவாண்டது போதும். நிழலாய் எனை நீ நெருங்கி நில் வா.
கற்பனைகளில் காலம் கடத்தியது போதும், கை கோர்த்து சில பல கவிதை சொல்லிடு வா.
பார்க்கையில் பார்க்காது, பார்க்காத போது பார்த்து ரசித்தது போதும்.
பக்கம் வந்து வெட்கம் நீக்கி பாடம் கொஞ்சம் கற்றுத் தந்திடு வா
எட்டி நின்றே நாசி தொட்டது போதும்
*பூ மாலையே ... தோள் சேரவா*


436. தீயில் இறங்கச் சொன்னாலும் புனிதமானவள் என்று தெரியவர ராமன் மனைவியை ஏற்றுக் கொண்டானே.
எனை இனி தொடாதிரும் என்று சொன்ன பின்னும் இறை இறங்கி பரிந்துரைக்க திருநீலகண்டத்தை ஏற்றுக் கொண்டாரே அவர் திருமதி. 
கோபத்தில் திரு ஆவினன்குடி வந்தமர்ந்த பின், அன்னை சொல்லக் கேட்டு மனம் மாறி இறங்கி வரவில்லையா முருகன்.
இரண்டாய்க் கிழித்து, நரம்புகளை உருவி, இரத்தம் குடித்து ... பாலகன் ப்ரகலாதன் அருகில் வர கோபம் தனிந்ததே நரசிம்மம்.
நீ மட்டும் ஏனடா, இன்னும் ஏறுமுகத்தில்.
கொஞ்சம் விட்டுக் கொடு,
உனக்குப் பிடித்த பருப்புப் பாயசம், மிதக்கும் திராட்சை முந்திரியோடு
உண்டு கோபம் தனி, சரியா,
*கண்ணா ... வருவாயா ?*

435. கனவு கலையும், பொழுது விடியும்.
கைப்பேசி வழி உன் காலை வணக்கம் வரும்.
பறவைகள் படபடவென்று சிறகடித்துப் பறந்துத் திரியும்.
இன்று என்ன கேட்கப் போகிறாயோ என்ற எண்ணம் தோன்றும்.
எசகு பிசகாய் ஏதாவது கேட்பாய், எனக்குக் கோபம் வரும்.
எருமை பன்னி என்றுனை பாராட்டி மகிழ்விக்க நேரிடும்.
கொஞ்ச நேரம் தான், என் மனம் குழையும், பேசத் தூண்டும்.
எதைச்சொன்னால் நீ சிரிப்பாய் என்று யோசிக்கத் தோன்றும்.
உன் பழைய வரிகளைப் படிக்க மனதுளுன் திருதிரு முகம் விரியும்
அதற்குள் மாலை மணி ஏழு ஆக அவ்வமயம்
*ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்*


434. என்ன சோகம் என்று கேட்ட தோழி, சொல்கிறேனடி கேளு நீ.
நீலச் சட்டை, நெற்றியில் பட்டை, நேற்று கோவிலில் பார்த்தோமே, நினைவிருக்கா? அத் திருவுருவம் என் நினைவை விட்டு நீங்கா.
என் நிறத்தை ஒத்தவன், நெஞ்சில் காதல் தீயை வைத்தவன்.
தேவாரம் பாடினான், தேனை என் காதில் ஊற்றினான்;
ஒரு சிறு பார்வை தான், மெல்லச் சிரித்தான், என்னை தன் பக்கம் சரித்துக் கொண்டான்.
என் கரம் பிடித்து கொஞ்சம் அதிகம் சுண்டல் தந்ததாய் நினைவு.
உறக்கத்திலெல்லாம் இனி அவன் வரவு, தினம் கனவு.
நேற்று யாருடைய மண்டகப்படி பாரடி, *என் நெஞ்சைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி?*

433. பொய்யானப் பொன் மானை பிடிக்கப்போய் மெய்யான தன் பெண் மானை ராமன் தொலைத்தான்.
கர்வம் மோகம் வழி நடத்த அதர்மப் பாதையில் பயணித்து ராவணன் தன்னையே தொலைத்தான்.
ஏனென்று கேட்க முடியாது காமம் கண் மறைக்க சாந்தனு கங்கையில் தன் சந்ததியைத்  தொலைத்தான்.
பழி சொல்லுக்கு பயந்து, குந்தி தான் பெற்ற பிள்ளை கர்ணனை ஆற்றில் தொலைத்தாள்.
தன் விதி பற்றித் தெரிந்திருந்தும் தேவகியின் எட்டாவது பிள்ளையை கம்சன் தொலைத்தான்.
ஆலவாயனுக்கு ஆலயம் கட்டும் பணியில் அரசன் தந்த பணத்தை திருவாதவூரார் தொலைத்தார்.
உன் புன்சிரிப்பும் மென்பேச்சும் *என்னவளே என் இதயத்தை தொலைத்து விட்டேன்*



432. கார்த்திகை பௌர்ணமி இன்று.
சிவபிரான் திரிபுரனை எரித்து தேவர்களைக் காத்த நாள் இன்று.
மகாவிஷ்ணு மச்ச அவதாரத்தில் தோன்றிய தினம் இன்று.
நெற்றிக் கனலிலிருந்து கந்தன் அவதரித்தத் திருநாள் இன்று.
ராதையும் கண்ணனும் ராசலீலை புரிந்த தினம் இன்று.
முன்னோர்கட்கு முக்கியத்துவம் நல்கும் நன்னாள் இன்று.
குருஷேத்திர யுத்தம் தொடங்கியது பௌர்ணமி.
அட நீ பிறந்ததே பௌர்ணமி, என் நெஞ்சிலிருந்து என்றும் நீங்காத *நீ ... பௌர்ணமி*


431. மறந்தததேயில்லை எனினும் ஏதாவதோர் வழியில் உன் ஞாபகம்.
நாளை கார்த்திகை, ஒரு பொரி உருண்டையை இருவரும் கொஞ்ச- ம் கொஞ்சமாய்த் தின்ற ஞாபகம்.
இன்று ஐஸ்கிரீம் விளம்பரம் எங்கு பார்த்தாலும் அன்று பேரடைஸில் நாம் அடித்தக் கூத்து ஞாபகம்.
பிறந்த நாள் யாருக்கு வந்தாலும், உனைக் கேட்காது பரிசு தந்து ஸ்கேலில் அடி வாங்கிய ஞாபகம்.
இன்று எந்தப் பந்தியில் சாப்பிட அமர்ந்தாலும் எக்ஸ்ட்ரா பாயசம் கேட்கும் உந்தன் ஞாபகம்.
'96 படத்தில் ராமின் வாயிலிருந்து ரொட்டி கவ்வுமே மான், பார்த்ததும் எனக்கு ... ஞாபகம்.
ஒருநாள் மதியம் மீன் குழம்பு கொண்ர்ந்து உண்ண வற்புறுத்தி, அன்றிலிருந்து கடிகாரம்
*ஒரு மணி அடித்தால், கண்ணே உன் ஞாபகம்*

Sunday, June 23, 2019

பொன்மாலைப் பொழுதில் 57

430. புயல் வருதாமே, பொறம்போக்கு இது எங்கே போச்சோ, தெரிலியே.
குட்டி போட்ட பூனையாட்டம் என்னையே சுத்தி சுத்தி வருவான்,
ரண்டு நாளா ஆளக் காணோம்.
எனக்கு அவன் நெனப்பாவே ...
கையில குடை இருக்கு, எங்கேனு போய் தேடுவேன், எருமை எருமை.
பக்கத்தில் இருந்தா ஏதாச்சும் தொணதொணன்னு  பேசுவான்.
கைய வச்சிக்கிட்டு சும்மாயிருக்க மாட்டான், கடங்கார கம்னாட்டி.
மழை ஆரம்பிச்சிடுச்சி, காய வச்ச துணியெல்லா ஈரமாகுது,
எனக்கோ அவன் நெனப்பா ... 
கோழி நனையுது, ஊற வச்ச சோளம் நனையுது, பாவிப்பய என் நெஞ்சில் அவ நெனப்பு எப்போதும்,
இரவோ பகலோ
மழையோ வெயிலோ
வேர்வையிலும் குளிரிலும்
சாமத்தில் சாய்த்த பின்னும்
*சாரக்காத்து வீசும் போதும்*

429. தீவை எறித்த பின், கட்டுண்டு நிற்பவனைப் பார்த்து ராவணன் கேட்டது 'யாரிந்த வானரம்?'
சகுந்தலை பிள்ளையோடு படியேற துர்வாச சாபத்தால் உறவு மறந்த துஷ்யந்தன் கேட்டது 'யார் நீ?'
திருமணத்திற்குத் தடை சொல்லும் கிழவனை பார்த்து சினத்தோடு சுந்தரன் கேட்டது 'யாரிந்த பித்தன்?'.
கையில் சிலம்பு, கண்ணில் கோபம், கண்ணகி நெடுஞ்செழியனைப் பார்த்துக் கேட்டது 'யார் கள்வன்?'.
சோ ராமசாமி எழுதி இயக்கி நடித்த புகழ் பெற்ற மேடை நாடகம் 'யார் ப்ராமணன்?'
இன்னும் ஒருவர் மட்டும் வரணும் என முரளி சொல்ல சுபா கேட்டது 'யார், ஜானுவா?'.
அன்பே சிவம் என்பதை அறிந்த நல்ல சிவம் இறைவன் பெயரில் ஏமாற்றுவாரைப் பார்த்துக் கேட்டது *யார் ... யார் ... சிவம்?*

428. தினம் தினம் மன அழுத்த வேலை
காலநேரமின்றி ஆட்டணும் வாலை
மாட்டிக்கிட்டோம், வேறு வழி இலை
தப்பித்து ஓட தைரியமுமில்லை
சகதியில் குதித்த வராக நிலை
பணம் பதவி பாசம் எல்லாம் வலை
தீரும் தொல்லை? மாறுமா கவலை?
இதற்கில்லையா ஒரு எல்லை ?
என்று இதிலிருந்து விடுதலை?
உலக வாழ்க்கையோ கடல் அலை
அல்லல்களே நம் லீலையின் விலை
காத்திருக்க, வரும் அவன் ஓலை
அது தரும் வேண்டிய ஆறுதலை
சரி போகட்டும், இப்பொழுது மாலை
கேட்கவும் இன்றைய பாடலை
காயட்டும் கண்களின் திவலை
இது *கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை*

427. புராணங்களின் படி நான்கு வர்ணங்களுக்கு வண்ணம் உண்டு.
வேதம் சொல்வோர்க்கு வெள்ளை.
போர் புரியும் அரச குலத்தோர்க்கு சிகப்பு, வணிகர்க்கோ மஞ்சள்.
உடல் உழைத்து வேலை செய்வோர்- க்கு கருப்பு என்று குறிப்பு இருக்கு.
இது ஒருபுறமிருக்கட்டும்.
அதியமான் அவ்வைக்கு தந்த நெல்லிக்கனி பச்சை; நாரதர் கலகம் செய்த மாம்பழம் மஞ்சள்.
இது இப்படியிருக்க,
புல்வெளி பச்சை, குருதி சிகப்பு.
வானம் நீல வண்ணம்; விடிகாலை பொன்நிறம்; இரவு கருப்பு;
கோபத்தில் கண் சிவப்பாகும்.
நாணம் பயம் மகிழ்ச்சி  இவற்றுக்கு வேறு வேறு வண்ணம்  ... சரி சரி
*தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ ?*

426. இராமன் கேட்கவில்லையே,
விஸ்வாமித்ரர் தேடிச் சென்று கலை பல சொல்லித் தந்து ....
துரியோதனன் தேடவில்லை,
கர்ணன் வர, அர்ச்சுனனை வீழ்த்த அவனை தன் பக்கம் சேர்த்து ...
யசோதா கேட்டாளா என்ன?
கண்ணன் இரவோடு இரவாக தேடிச் சென்று ...
சுந்தரரோ கல்யாண கனவில்,
சிவன் அவனைத் தேடிச் சென்று, பித்தா என்றழைத்த போதும்...
பெரியாழ்வார் வேண்டவில்லை,
ரெங்கமன்னாரே தேடி வந்து ஆண்டாளை பெண் கேட்க...
ஜானுவோ ராமோ அறியவில்லை,
கேளாமலே ஒருவரை ஒருவர் பார்த்துப் பேச 22 வருடம் ....
ஆம் நடக்க வேண்டிய நேரத்தில் எல்லாம் தானே ... எனக்கும் கூட
*கேளாமல் கையிலே வந்தாயே காதலே*


424. எல்லாரிடமும் நீ இப்படித்தான் ... பார்த்தால் அப்படித் தெரியவில்லை.
எனைச் சுற்றி சுற்றி வந்து, சிரித்து சிரித்துப் பேசி சிரிக்க வைத்தாய்.
கவிதை பல சொன்னாய். பதில் நான் சொல்ல கை தட்டி ரசித்தாய்.
உள்ளே எதையோ அசைத்து உனை பற்றி எண்ண வைத்து விட்டாய்.
நீ அருகிலில்லாத தருணத்தை நான் வெறுக்கும் அளவிற்கு ...
இப்படி நான் மாற அப்படி என்ன மாயம் செய்தாயடா, சிநேகிதா !
காணுமெல்லாவற்றிலும் உனைத் தொடர்புப் படுத்திப் பார்க்கிறேன்.
செல்லுமிடமெங்கும் உனை பற்றி பேசி பரவசித்து எனை மறக்கிறேன்
உன் விரல் பிடித்து ... ம்ம்ம்
முடிவெடுத்து விட்டேன், இனி பின்வாங்க மாட்டேன்.
உன் நிழலாய்த் தொடர்வேன்
*எங்கெங்கு நீ சென்ற போதும் ...*

423. இராவணன் தன் தவறை திருத்திக் கொள்ளாததால் தம்பி விபீஷணன் இடம் மாறினான்.
அரக்கு மாளிகை துரியோதனன் சூழ்ச்சியால் தீ வைக்கப்பட பாண்டவர் இடம் மாறினர்.
ஜராசந்தனோடு மல்போர் புரிந்து இரண்டாய்க் கிழித்து தலை கால் இடம் மாற்றி எறிந்தான் வீமன்.
வந்த காரியம் மறந்து சனாவின் கனவில்  கவிதை படித்தான் கவனம் இடம் மாறிய சிட்டி.
உடம்பு சரியில்லாது சில நாட்கள் கழித்து பள்ளி வந்த ஜானு, ராமைப் பார்த்துப் புன்னகைக்க
*இதயம் இடம் மாறியதே*

Wednesday, June 12, 2019

பொன்மாலைப் பொழுதில் 56

421. மகிழ்ச்சியாக இருக்கிறது.
நெஞ்சினுள் ஒரு புத்துணர்ச்சி புதிதாய்ப் புகுந்திருப்பது புரிகிறது.
காணும் அனைத்திலும் ஒரு ஈர்ப்பு.
கவிதை சுரக்கிறது; பார்த்தாலே பரவசம், பாராதிருந்தால் நானில்லை என் வசம்.
அகத்தில் ஆயிரம் மாற்றங்கள்
செய்யும் அனைத்திலும் புதுமைகள்
மனதிலுன்னோடு மல்லாடுகிறேன்.
என்னுள் நான்  அலவாடுகிறேன்.
அடிக்கடி உன் அருகாமையை அவதானிக்கிறேன்.
எல்லாவற்றுக்கும் நீ தான் காரணம் என்று சொல்ல வேண்டுமா என்ன?
உன்னாலே ஒரு புது மனிதனாய் உருவாகியிருக்கிறேன்.
*நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்*


420. கணவனுக்கு கண் தெரியாததால் தன்  கண்ணையும் துணி கொண்டு மூடிக் கொண்டாள் காந்தாரி.
தவ வேடத்திலிருந்த வியாசரின் கோர உருவம் காண முடியாது கண் மூடிக் கொண்டாள் அம்பிகை.
ஹஸ்தினாபுரத்து இளவரசர்கள் துரோணரிடம் பணிவாய் குனிந்து வாய் மூடிப் பாடம் கற்றனர்.
'மண் தின்றாயா?' என்று அன்னை வினவ 'திங்கலை' என்று வாய் மூடி பொய் சொன்னான் கண்ணன்.
பீஷ்மரின் நல்லறிவுரை ஏதும் கேட்கக்கூடாதென காதை இறுக்க மூடிக் கொண்டான் துரியோதனன்.
எந்த பாரபட்சமும் பாராது தீர்ப்பு சொல்வதற்காக நீதி தேவியின் கண்கள் எப்போதும் மூடியிருக்கும்.
தீயது பார்க்க கேட்க பேசக் கூடாதென காந்தியின் குரங்குகள் கண் காது வாய் மூடிக் கொண்டன.
இதெல்லாம் சரி, போதும் நிப்பாட்டு.
நீ மறைந்தே நிற்க கவிதை சுரக்கும் வேகம் மட்டுப்படுதே, எனவே
*முகத்தை எப்போதும் மூடி வைக்காதே*

419. ஒரு நாள் என்றால் பகல், இரவு என்று இரண்டு பாதி உண்டு;
மரம் எனில் வெளியே தெரியும் கிளை உள்ளே இருக்கும் வேர்.
இயற்கையிலேயே இப்படி இணைந்து அமைந்திருக்கும்.
சில விடயங்கள் சில சமயம் மாறிவிடும்.
எவ்வளவு பெரிய சிவபக்தன், மாறி இழிவான செயல் செய்தானே.
ஒன்றாய் இருந்தவர்கள் இரண்டு அணியாய் மாறி எதிரியானரே.
இன்று இப்படி, நாளை எப்படியோ; எது என்னாகும் என்று யாரரிவர்.
நமக்குள் கூடத்தான், தாமரை இலை மேல் தண்ணீர் போலத்தான்.
சண்டை எல்லாம் ஒன்றுமில்லை.
புகைவண்டி ஒன்று தான், சேர முடியாத தண்டவாளம் இரண்டு.
அட, '96 கதையும் இது தானே.
நானாக நான், இங்கு தனியே என் வழியில் ஒரு மூலையில்
நீயாக *நீ, உன் வானம், உனக்கென ஒர் நிலவு*



418. ஒரு வழியாக தீபாவளி முடிந்தது.
எத்தனை வேலை எத்துனைப் பணி எல்லாம் சரிவர செய்து விட்டாய்.
முருக்கு வடை லட்டு அதிரசம் பால் பாயசம் அப்பப்பா எத்தனை வகை தின்பண்டம் செய்ய நீ தெரிந்து வைத்திருக்கிறாய்.
மிகவும் களைத்திருப்பாய், சரி ஓய்வெடுத்துக் கொள்.
இங்கு வந்து உட்கார், கால் பிடித்து விடுகிறேன்.
தலை, தோள் மெல்ல அமுக்கி, பாதம் மத்தியில் கொஞ்சம் அழுத்தம்
பின்னங்கழுத்தில் பிடித்து விட உடல் வலி பறந்தோடும்.
சித்த நேரம் உறங்குகிறாயா?
*மாமரத்துப் பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா?*

417. சாபம் பெற்ற தசரதன் சிரித்தான், ராமன் பிறந்தான்.
ஜானகி காதலால் நாணத்தோடு சிரித்தாள், சிவதனுசு முறிந்தது.
துரியோதனன் தடுமாற பாஞ்சாலி சிரித்தாள், பாரதப் போர் மூண்டது.
இறக்குமுன் ஈந்து சிரித்தான் கர்ணன், முக்தி தந்தான் கண்ணன்.
'முத்தைத்தரு' முதலடி தந்த முருகன் சிரிக்க, திருப்புகழ் கிடைத்தது.
தூக்குமேடையில் பகத்சிங் சிரிக்க இந்தியாவிற்கு சுதந்திரம் கிட்டியது.
இங்கு ஒரே கோலாகலம், காரணம்
*நான் சிரித்தால் ... தீபாவளி*.

416. சிவதனுஷை நாணேற்ற மிதிலை நகரே பார்த்து வியந்தது போல
இலங்கை நகரின் அழகைப் பார்த்து அனுமன் வியந்தது போல
வேலோடு நிற்கும் பால முருகனைப் பார்த்து சூரன் வியந்தது போல
அட எனை விடு, நான் உன்னோடு கொஞ்சம் பழகியிருக்க;
உன் நடை உடை பாவனை எல்லாம் ஓரளவு அறிந்திருக்க ...
கருங்கூந்தல், பூ, காட்டன் புடவை, கையில் வளையல், காலில் கொலுசு ... ம்ம்ம்
கோவில் சிலையோ, தரையில் மிதக்கும் தேவதையோ என்றெல்லாம்
*ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா?*

415. தினம் தினம் எனைப் பார்த்ததும் ஓடி வந்து ஒட்டிக் கொள்கிறாய்.
கனவில் நான் செய்த குறும்புகளை கரம் மசாலா சேர்த்து கதைக்கிறாய்.
மறைத்து என் கைக்குள் எதையோ திணித்து தின்னச் சொல்கிறாய்.
'நேத்து வாங்கிய நைல் பாலிஷ்'
கண்ணருகே விரல் நீட்டுகிறாய்.
'அது?' என்று கேட்டால் 'எது?' என்று முதலில் முழித்து, பின் 'எருமை லூசு' என்று திட்டுகிறாய்.
இடுப்பில் கிள்ளி 'ஆம்' என்று காதினுள் பேசி முத்தம் தருகிறாய்.
வேண்டாம் என்று சொன்னாலும் காதில் போட்டுக் கொள்ளாது,
என்னை அரைகுறை ஆடையோடு நிற்க வைத்து விட்டு ... ம்ம்ம்
*இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் ... அன்பே*

Wednesday, June 5, 2019

பொன்மாலைப் பொழுதில் 55

414. வெயில் மழை காடு மேடு பாராது இராமன் நாடு கடந்து போரிடக் காரணம் சீதை மேலிருந்தக் காதல்.
பீஷ்மர் துரோணர் கர்ணனை பாண்டவர் அழிக்கக் காரணம் பாஞ்சாலி மேலிருந்தக் காதலே.
ஏழை சுதாமா நண்பனை தேடிச் சென்றதற்கு காரணம் மனைவி பிள்ளையர் மேலிருந்தக் காதலே.
பாலகன் மணிகண்டன் காட்டிற்கு சென்று புலிப்பால் கொண்டுவரக் காரணம் தாய் மேலிருந்தக் காதலே.
வேடனாய் வந்து  கிழவனாய் மாறி யானை காட்டி மிரட்டி ... காரணம் வள்ளியின் மேலிருந்தக் காதலே.
தீக்ஷிதர்களிடம் வாதிட்டு திருமறை ஏடுகளை ராஜராஜன் கைபற்றக் காரணம் தமிழ் மீதிருந்தக் காதலே.
அப்பூதியடிகள் தன் சேவைகளுக்கு அப்பரடிகளின் பெயரிடக் காரணம் அவர் மேலிருந்தக் காதலே.
நான் தொடர்ந்து எழுதுவதற்கும் எழுதாத அன்று 'என்னாச்சி ?' என்று நீ கேட்பதற்கும் காரணம் *காதலே ... காதலே*

413. என் உயிர்த்தோழி உறங்குகிறாள்.
சாகசங்கள் பல புரிய வல்ல என் சகி சயனித்திருக்கிறாள்.
தன் தினக் கவலைகளை தூர வைத்து விட்டுத் துயில்கிறாள்.
நெஞ்சை அழுத்தும் சோகங்களை மறந்து நித்திரையிலிருக்கிறாள்.
யசோதையின் மடியில் கண்ணன் போல் கோதை என் மடியில் நிம்மதியாய்க் கண்ணயர்கிறாள்.
முல்லை நீ தொல்லை தராது தூர நின்று நாசி தீண்டு.
பால் நிலவே நீ மேகத்தின் பின் நின்று வெளிச்சம் குறைத்து ஒளிர்.
இடி மின்னல் இரண்டும் இந்தப் பக்கம் வராதிருக்க உத்தரவு.
இன்றைய பொன்மாலைப் பொழுது கேட்டபடியே தொடர்ந்து உறங்கு.
*தென்றலே ... தென்றலே ...*
*மெல்ல நீ வீசு*

412. லக்குமணுக்கு இராவணனின் சேதி 'நல்லதை உடனேயும், கெட்டதை காலம் தாழ்த்தியும் செய்யணும்'.
கிருஷ்ணன் மந்திரி உத்தவருக்கு சொன்ன சேதி உத்தவ கீதையாம்.
அரிமர்த பாண்டியன் வாதவூரார்க்கு குதிரைகளோடு விரைந்து வரணும் என்று சேதி அனுப்பினான்.
சிவன் பார்வதிக்கு சொன்னதில் முதலான சேதி உண்மை சத்தியம் காக்கப்பட வேண்டும் என்பதே.
பீஷ்மர் தருமருக்கு சொன்ன சேதி 'நல்லதும் கெட்டதும் அவரவர் சிந்தையில் இருந்து தோன்றுவதே'.
ஆதிசங்கரின் சேதி 'பரம்பொருளே மெய், பணம் பொருள் எல்லாம் பொய், மூடனே' என்பதாம்.
இத்தனை நெருங்கி நாம் பழகி, நீ மட்டும் ஏனடி ... சொல்லடி
*சுந்தரி, கண்ணால் ஒரு சேதி...*

411. சீதையைத் தேடுவதற்கு கார்காலம் முடியக் காத்திருந்தான் காகுந்தன்.
வாலி மாயாவி சண்டை முடியும் வரை காத்திருந்தான் சுக்ரீவன்.
'இன்னும் ஒரு திங்கள் மட்டும் வரை காத்திருப்பேன்' என்று சீதை சேதி சொல்லியனுப்பினாள் அனுமனிடம்
8 வது பிள்ளை அவதரிக்கும் காலம் வர காத்திருந்தான் கண்ணன்.
வீரபாகு தூது சென்று விவரமறியும் வரை காத்திருந்தான் வடிவேலன்.
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு.
2 நாளோ 5 நாளோ சம்மதம் கிட்டும் வரை காத்திருந்தான் அமுதன்.
இதோ இங்கே *காதலெனும் தேர்வெழுதி காத்திருக்கும் மாணவன் நான்*


410. சீதையை சந்தித்த பின், தீவை நாசம் செய்த அனுமனை கட்டியது இந்திரஜித்தின் ப்ரம்மாஸ்திரம்.
ஹிரண்யனைக் கொன்ற நரசிம்மம் கோபம் அடங்கி கட்டுப்பட்டது் ப்ரகலாதன் அன்பில்.
பாகிரதன் வேண்ட, கங்கையின் காட்டு வெள்ளத்தை கட்டுக்குள் வைத்தது சிவனின் ஜடா முடி.
தன் இன்னொரு கண்ணையும் பிடுங்க முயன்றவனை தடுத்தது 'கண்ணப்ப நில்' எனும் ஒலி.
புயலெனப் புறப்பட்ட ப்ரசன்னாவை போக விடாது தடுத்தது பைரவி கட்டிய சிறு கயிறு^.
நானெங்கும் நகர முடியாது நீ எனைக் கட்டி இழுத்து வைத்திருப்பது,
*கண்களிரண்டால் உன் கண்களிரண்டால்*

^ அபூர்வ ராகங்கள்

409. அரியாசன் என்றார்கள், அமைதி காத்தேன், ஆடவில்லை.
அன்றிரவே ஆரண்யம் என்றார்கள், அலட்டிக்கவில்லை.
அப்படியா சரி என்று சொல்லி விட்டு கிளம்பி வந்து விட்டேனன்றோ.
அடக்கடவுளே, இப்படியாகிவிட்டதே என் செய்வேன்?
என் பெண்மான் ஒரு பொன் மான் கேட்டாள், அது ஒரு பிழையா?
மாயமான் பின் ஓடியது தவறோ?
இப்போது என் மட^மானை இழந்துத் தவிக்கிறேனே, தகுமா?
எங்கு சென்றாள்?யார் வேலை இது?
விதியோ இல்லை சதியோ?
நடந்தது என்ன?அறிந்தவர் உண்டா?
அடி சீதே, என் உயிரே,
*காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே?*


408. மூன்றாவது முறையாய் இன்று சந்தித்தேன், பார்க்கையிலேயே புரிகிறது, அவள் தேன் தேன்.
மெல்லிய தேகம், மல்லிப்பூ வாசம், ஒரு சில அடி தூரம் வரை வீசும்.
பார்வையில் கனிவு, பேச்சில் நடையில் பணிவு;
தள்ளி நின்று யானையை பார்க்கும் துணிவு, கிட்ட நின்று சிலையை ரசிக்கும் அழகு;
ஒரு சிலையே சிலையை ரசிக்குதே!
எனக்குப் பிடித்திருக்கிறது, பழக மனம் விரும்புது.
எங்கிருக்கிறாள், யார் ஏதும் தெரியாது, காதல் என்ன காலம் நேரம் எல்லாம் பார்த்தா வருது.
ஒரு மின்னல் போல்... சடாரென்று என்னுள் புகுந்து, தன்னை நோக்கி என்னை இழுத்து....
இப்பொழுதெல்லாம் எப்பொழுதும் அவள் ஞாபகம்.
எங்கு நோக்கினும் அவள் திருமுகம்
அயராதே கண் முன் சொப்பனம்
தள்ளிப் போய் விட்டது தூக்கம்
*விழிகளின் அருகினில் வானம்*

Tuesday, May 21, 2019

பொன்மாலைப் பொழுதில் 54

407. காலை மாலை எல்லா நேரமும் உன் ஞாபகம் வருது
நெஞ்சில் கவிதை வரிகள் அருவி போல் சுழலுது
உனை என்று காண முடியுமென்று மனம் தவிக்குது
உன்னிடம் என்னென்ன பேசலாம் என்ற யோசனை உதிக்குது
உன் நடை உடை பாவனை மீண்டும் பார்த்து ரசிக்க ஆவல் எழுது
நல்ல சகுனம் பல நெஞ்சில் மின்னலாய்த் தோன்றுது
'சுபம் சுபம் சுபம்' என்ற சத்தம் எங்கிருந்தோ கேட்குது
உள்ளத்தில் உற்சாகம் பொங்குது.
இதோ இதோ *இளங்காத்து வீசுது*


406. மிதிலையில், அண்ணலும் நோக்க அவளும் நோக்க, காதல் பூத்தது.
தந்தை கதை சொல்ல கண்ணன் மேல் ஆண்டாளுக்கு காதல் பூத்தது.
அன்னப் பறவையின் தூதில் நளன் தமயந்தி இடையே காதல் பூத்தது.
இடும்பனை வீழ்த்த தங்கை இடும்- பிக்கு பீமன் மேல் காதல் பூத்தது.
அகலிகையின் அழகை நாரதர் கூற கௌதமர் மனதுள் காதல் பூத்தது.
உன் அன்புப் பார்வையா, பேசும் பழகும்  விதமா, அக்கறையா,
எதுவோ ஆனால் என்னுள் இதோ ...
காதல் *அழகாய்ப் பூக்குதே*


405. கைகேயி வரம் கேட்க தசரதனுக்கு வந்தது துக்க மயக்கம்.
இந்திரஜித்தின் அஸ்திரத்தால் லக்குமனுக்கு மாய மயக்கம்.
சத்யபாமா போரிட நரகாசுரன் முன் கண்ணன் கொண்டது பொய் மயக்கம்.
யக்ஷனின் குரலை நிராகரித்த பாண்டவர்க்கு கர்வ மயக்கம்.
பெரிய யானை அருகில் வந்துப் பிளிர வள்ளிக்கு பய மயக்கம்.
ஜானு ராம் நெஞ்சில் கை வைத்துப் பார்த்த போது எந்த மயக்கமோ,
உன்னைப் பார்க்கையிலெல்லாம் என்னுள் *காதல் மயக்கம்*

404. வேர்வை வழிவதெல்லாம்
   தென்றல் வீசும் வரை தான்
பசி மயக்கம்
   உணவு கிட்டும் வரை தான்
கனவு வருவதெல்லாம்
   உறக்கம் கலையும் வரை தான்
கற்பனை என்பதெல்லாம்
  காட்சி தெரியும் வரை தான்
துன்பம் துயரம் எல்லாம்
   துணைக்கு ஆளில்லா வரை தான்
நிலவின் ஒளி மிளிர்வதெல்லாம்
   *புத்தம் புது காலை* வரை தான்

403. அமிர்தாஞ்சன் கழுத்துப் பக்கம் தடவுகையில் உறுமி மிரட்டுவது அழகு.
நான் பார்ப்பதைப் பார்த்து இங்கு அங்கு இழுத்து விட்டுக் கொள்வது அழகு.
என் தட்டிலிருந்து எடுத்துத் தின்று பின் ஒன்றும் தெரியாதது போல் முழிப்பது அழகு.
யாரும் நமை பார்க்காப்பொழுது உதட்டை ஈரமாக்கிக் கண்ணடிப்பது, அழகு.
நேற்று அந்த காங்ரா சோளி முடிச்சி போட்டு விடும் போது தான் பார்த் ... ஐயோ நீ செம்ம செம்ம அழகு.
மொத்தத்தில் நீ செய்யும் எதுவும், உனைச் சார்ந்ததெல்லாம் *அழகே ... அழகு*


402. அடேய் ... லூசுப்பயலே !
என்ன கேட்கலாம் எதைக் கேட்கக் கூடாதுன்னு வரைமுறை இல்லை,
'அவளோடது வாடாமல்லி கலர்,
உன்னோடது?' இது ஒரு கேள்வியா?
அவள் தாண்டியா ஆடுறா, உனக்கு தெரியாதான்னு கேட்டா ... எருமை.
எனக்கு பரதநாட்டியம் தெரியும், அவளுக்கு ? சொல்லு பக்கி
இந்த வயசுல ரட்டை சடை யாரும் போடமாட்டாங்கடா, ஏன்னு கேட்டா என்ன சொல்றது பொறம்போக்கு.
காஞ்சிபுரத்தில இருந்தா பட்டு தான் கட்டணுமா? மதுரை ல இருக்கச்ச சுங்குடி வாங்கலேன்னா தப்பா ?
கேக்குறா பாரு எசகு பிசகா பேக்கு.
நீ வாயத் தொரந்தாலே எதாச்சும் விவகாரமாத்தான் கேட்பேன்னு மட்டும் நல்லாத் தெரிஞ்சி போச்சி.
தயாராத்தான் இருக்கேன், இன்னும் ஒரு கேள்வி.... மவனே மீடூ ல உன் பேர சேர்த்து விடுறேன்,
கேளுடா ... கேளு நீ கேன ...
*கேள்வியின் நாயகனே*


401. அதர்மம் தலைதூக்கும் போதெலாம் தர்மம் அதை அழித்து ஜெயிக்கும்.
பின் நன்றி தெரிவிக்கும்.
*
விபீஷணனுக்கு ரங்க விமானத்தை அளித்து நன்றி் சொன்னான் ராமன்
கர்ணனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டி நன்றியுரைத்தான் கண்ணன்
பரவையாரிடம் சுந்தரருக்காக தூது சென்று நன்றி காட்டினான் சிவன்.
சபரிமலையில் கோவில் கட்டி தன் நன்றி சொன்னான் பந்தள ராஜன்.
கம்பன் 1000 பாடலுக்கொருமுறை சடகோபருக்கு நன்றி பாடினான்.
சேவை எதுவோ, தாஜ்மஹால் கட்டி நன்றி தெரிவித்தான் ஷாஜஹான்.
*
நான் எப்படி யாரைச் சொல்ல; பொதுவாய் எல்லாருக்கும்,
முக்கியமாய் ... அன்பே ரகசியமாய்
*நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி*


400. தினமும் காலையில் கௌசல்யா சுப்ரஜா ... விஸ்வாமித்ரர் பாடியது.
கண்ணனின் எல்லாமே மதுரம் என வல்லபர் பாடியதே மதுராஷ்டகம்.
தேவராய ஸ்வாமிகளின் கந்த சஷ்டி கவசம் உங்கட்குத் தெரிந்திருக்கும்.
ஜெயதேவரின் கீத கோவிந்தம், ராதை, கண்ணனின் காதலை கொஞ்சம் பச்சையாய்ப் பேசும்.
அதுவே இன்று எழுதியிருந்தால், தடை செய்யப்பட்டிருக்கும்.
பஜ கோவிந்தம் - ஆதி சங்கரர்; சௌந்தர்ய லஹரியும் அவரே.
பார்வதி தேவி நதியில் அலைகள் இடையில் நீராடும் அழகை ....
என்ன, லஹரி தெரியாதா ? இதோ
*அவித்யானாம் அந்தஸ் திமிர மிஹிர தீப நஹரி*

Sunday, April 21, 2019

பொன்மாலைப் பொழுதில் 53


399. சீதையைத் தேடும் பணி துவங்கியது மழைக் காலம் முடிந்த பின் தான்.
கண்ணனைச் சுமந்து வசுதேவர் கோகுலம் வர வழியெங்கும் நல்ல மழை.
கோவர்த்தன மலை தூக்கி கோவிந்தன் மக்களைக் காக்கக் காரணம் பெரும் புயல் மழை.
சிவனடியார் புசிக்க முன்தினம் தான் நட்ட நெல்மணிகளை சேகரிக்க இளையான்குடி நாயனார் விரைந்தோடினார் மழையில்.
பஞ்சம் போக்க ஸ்ரீராகவேந்திரர் யாகம் செய்ய தஞ்சையில் பொழிந்தது மழை.
புராணத்தில் சரி, நிகழ்காலத்தில் உனைப் பற்றி எண்ணையில்
*நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை*

398. வசந்த காலம் - குளிருக்கும் வெயிலுக்கும் இடைப்பட்ட காலம்.
ராமன் பிறந்தது வசந்த காலம்.
பஞ்சவடியில்* சீதையுடன் மகிழ்ந்து வாழ்ந்து வந்தது வசந்த காலம்.
அவளைப் பிரிந்து கிஷ்கிந்தையில் துயரத்தில் துடித்தது வசந்த காலம்.
காலங்களில், தான் வசந்த காலம் எனச் சொல்கிறான் கிருஷ்ணன்.
சிவன் மீது மன்மதன் பானம் எய்து பின் சாம்பலானது வசந்த காலம்.
சாபம் பற்றித் தெரிந்தும் பாண்டு மாத்ரி இணைந்தது வசந்த காலம்.
மோகினி அவதாரம் பார்த்து சிவம் மோகம் கொண்டது வசந்த காலம்.
ஆம்...இதோ இந்த வசந்த காலம் ...
என்ன தான் நாம் இருவரும் விலகி விலகி நின்றேப் பழகினாலும்,
ஒருவரை ஒருவர் வெறுக்காது ஒதுங்கியே நின்றிருந்தாலும்
நாட்கள் தானே நகருது,
காலம் வீணே ஓடுது,
*வசந்த காலங்கள் கசந்து போகுது*

397. கோதா கூந்தல் சுகந்த மாலையை ரங்கமன்னார் கேட்டதும் பெரியாழ்- -வாரை சந்தோஷ மின்னல் ஒரு கோடி தாக்கியது.
'இனி எமை தொடாதீர், இது சிவம் மீது ஆணை' என்று மனைவி
சொல்ல திருநீலகண்டர் மனதில் மின்னல் கோடி தாக்கியிருக்கும்.
வழி மறித்த காவல் தெய்வம் லங்கிணி மார்பில் அனுமன் விட்ட குத்து மின்னல் ஒரு கோடி தாக்கியதற்கு சமமானது.
கூடப்படித்த துருபத அரசன் 'யார் நீ?' எனக் கேட்டதும் உதவி கேட்க வந்த ஏழை துரோணருக்கு மின்னல் ஒரு கோடி தாக்கியதாய் இருந்தது.
தேவகியின் எட்டாவது பிள்ளை சிறை தப்பிய செய்தி கேட்டதும் கம்சனுக்கு மின்னல் ஒரு கோடி தாக்கியது போல் இருந்திருக்கும்.
பாம்புகள் தீண்டியும் தீ சுட்டெரித்தும் மலையுச்சியிலிருந்து வீசப்பட்டும் ப்ரகலாதன் இறக்கவில்லை என்ற செய்தி ஹிரண்யகசுபுவிற்கு மின்னல் ஒரு கோடி தாக்கியது போல் இருந்தது.
உன் ஒரு ... ஒரே ஒரு முத்தம் தான் தந்தாய், என்னைத் தாக்கியதோ
*மின்னல் ஒரு கோடி*.


396. பரந்தாமனின் பரிந்துரைபடி பரமசிவனைப் ப்ரார்த்தித்து பசுபதஸ்திரம் வேண்டினான் பார்த்தன்.

'பெருமாளே உம் பவளவாய் பார்த்தபடி இருத்தல் போதும், இந்திரப் பதவி வேண்டா' என்று வேண்டினார் பெரியாழ்வார்.

காலம் தவறாத மழையும், வயல் நன்கு  விளையவும், கொட்டிலில் மாடு கன்று நிறையவும் வேண்டியது ஆண்டாள்.

'பிறவாமை வேண்டும், பிறந்தாலோ இறைவ, உமை மறவாமை வேணும்' என்று வேண்டியது ஔவையார்.

'பால் தேன் வெல்ல பாகு நானுக்குத் தர சங்கத் தமிழ் நீ எனக்குத் தா' என்ற வேண்டலும் ஔவையாரே.

'உன் புகழ் நான் பாடுகிறேன், என் குடி நீ காத்திடு' வேண்டியது பாரதி.

'கல்லானால் தணிகை மலையில், மரமானால் பழமுதிர் சோலையில்' என வேண்டியது சௌந்தர்ராஜன்.

உன்னோடு உன் அருகில் அமர்ந்து 96 பார்க்கணும். இது போதும். எனக்கு *வேறென்ன வேறென்ன வேண்டும்*


395. இலங்கை நோக்கிக் கிளம்பு முன், அனுமனிடம், சீதையும் தானும் மட்டும் அறிந்து சில சேதிகளை ராமன்  எடுத்துரைத்தான்.

கர்ணனைக் கொன்ற காண்டிபன் கதற, அவனை ஏற்கனவே பல பேர் கொன்ற சேதிகளை கண்ணன் விவரித்தான்.

பல மாறு வேடங்களணிந்து வள்ளியை மணந்த பின், அவள் பூர்வ ஜென்ம சேதிகளை முருகன் உரைத்தான்.

தன் வம்சத்தை அழிப்பதேன் என்று கேள்வி  கேட்ட போது சந்தனுவிடம் அஷ்டவசுக்கள் பற்றிய சேதியை கங்கை சொன்னாள்.

நரகம் கிட்டும் என்று தெரிந்தும் கோவில் கோபுரமேறி நாராயண மந்திர சேதிகளை ராமானுஜன் சொன்னான்.

ஆக இவ்வளவு பேருக்கு சொல்ல ஏதோயிருக்க, எனக்குள்ளும் இருக்கே; *மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு*


394. முன்பெலாம் மனமுழுதும் விசனம்
எதைப் பார்த்தாலும் உதாசீனம்
வாய் திறந்தாலே வெளிபடும் சினம்
அழகை ஆராதிக்காத முட்டாள்தனம்
உன் மேல் படிந்தது என் கவனம்
வாழ்வில் கிட்டியது ஒரு பிடிமானம்
பிடித்திருக்கு உன் பிள்ளைத்தனம்
அதிராது ஓரிரு வார்த்தை வசனம்
கொஞ்சும் சிரிப்பே உன் மூலதனம்
இதுவே தினம் தினம் என் தியானம்
சலனமில்லா வதனம் தந்த ஞானம்
கை கோர்த்து கனவுகளூடே சயனம்
பேசிப் பழகி ஒன்றியது இரு மனம்
நீயுன் நெஞ்சில் தந்தாய் ஆசனம்
என் தவத்திற்கிட்டிய வெகுமானம்
உன் யவ்வனம் கவிதைக்கு தீவனம்
இதோ மழை, வானம் தரும் தானம்
கேட்குதா, பறவைகளின் கானம் ?
புறப்படுவோமா, இது நல்ல சகுனம்
நிறைய வரும் ஏளனம் விமர்சனம்
நல்லது என்று பேசும் நம் ஜனம் ?
அவர் தம் வாய் மூடுவது கடினம்
துறந்து வா, நாம் போகுமிடம் ...
*பனி விழும் மலர் வனம்*

Tuesday, April 16, 2019

பொன்மாலைப் பொழுதில் 52


393. வாலி அனுப்பிய ஆட்களோ என்று ரிஷிமுக் மலையிலிருந்த அனுமன் எண்ணினான் ராம லக்குமனை முதல் முறை பார்த்த போது.
'பித்தன் இவன்' என்று பழித்தான் கிழ வேடத்தில் இருந்தச் சிவனை முதல் முறை பார்த்த சுந்தரன்.
தன் பெண்ணை திருமணம் செய்து தர திட்டமிட்டான், அர்ச்சுனனின் வீரத்தை முதல் முறை பார்த்து ரசித்த பாஞ்சாலன்.
முகத்தில் பல தையல்களிருக்க நல்லாவை தீவிரவாதியோ என்று யுகித்தான் முதல் முறை அன்பரசு.
ராம் பதறி மயங்கி விழுந்தது ஜானகி அவன் நெஞ்சில் முதல் முறை கை வைத்துப் பார்த்த போது.
நீ என் கவிதை படித்துப் பாராட்டியது பெரு மகிழ்ச்சி; வாழ்க்கையில் இன்று தான் என்னையே நான்
*முதல் முறை கிள்ளிப் பார்த்தேன்*


392. மனம் மகிழ்ந்து கிடக்கிறது.
உனைக் கண்டதிலிருந்து உற்சாகம் பீறிட்டெழுகிறது.
உன்னருகில் அமர்ந்து பேசிச் சிரித்து, உண்டு, பகிர்ந்து ...
ஒருசில கேள்விகள் நறுக்கென்று ... உனைப் பார்த்ததும் மறந்துவிட்டது.
அற்புதமான இச்சூழலுக்காக இத்தனை வருடம் காத்திருந்தது தகும் என்று இன்று தோன்றுகிறது.
நீ, உன் அன்பு இன்னும் கொஞ்சம் கூட மாறாதது பார்க்க, புரிய நெஞ்சம் பூரிக்கிறது.
இரவு முழுதும் இருவரும் உறங்காது சுற்றித் திரிந்தது, நீ தந்த பல புது அனுபவங்களில் முதன்மையானது.
இன்னும் ... கொஞ்சம் நேரத்தில் நான் கிளம்பணும் ... புரிகிறது.
மீண்டும் உனை எங்கு எப்போது பார்ப்பேன் என்று தெரியாது பதற,
விடியாதே இன்று இருந்துவிடக் கூடாதா என்று நெஞ்சு ஏங்க
*இரவிங்கு தீவாய் நமைச் சூழுதே*

391. பரத்வாஜ் முனிவர் சொல்படி சீதா, ராம், லக்குமன் சித்ரகூடம் வந்தது யமுனையைக் கடந்து.
கண்ணனை தலையில் சுமந்துபடி மழையில் நந்தகோபர் நடந்தது
யமுனை ஆற்றின் மத்தியில்.
சத்தியின் மறைவுக்குப் பின் சிவம் தன் கோபம் தனிய குளித்தது
யமுனை ஆற்றில்.
இறக்கும் முன் அர்ச்சுனன் பேரன் பரீக்ஷித் தவம் செய்ய அமர்ந்தது
யமுனை ஆற்றங்கரை.
கண்ணனின் காளிங்க நடனம், ராசலீலை அரங்கேறியதெல்லாம்
யமுனை ஆறு, கரை.
பாவியரின் பாவங்களைப் போக்கப் பாடுபட்டு இன்று பாழாகிக் கிடக்கு யமுனை ஆறு.
அந்த  *யமுனை ஆற்றிலே ... ஈரக் காற்றிலே*

390. பேசணும் என்ற அவசியமில்லை.
பார்த்தாகணும் என்றெல்லாம் கட்டாயமில்லை.
விலகி நின்றாலும், புரியும் பதறாது.
தனியே தவித்தாலும், வெறுக்காது.
மின்னல் போலொரு தாக்கம்,
எப்பொழுதாவது ஏற்பட்டிருக்கும்.
அது ஒன்றே போதும். எண்ண எண்ண நெஞ்சு குழையும்.
உள்ளே ஏங்கும், அழும்; கூடவே நம் நலம் நாடும் ஒரு ஜீவன் எங்கோ இருக்கு என்றுணர்ந்து மகிழும்.
உங்களுக்குத் தெரியும் தானே, இல்லை இதுதான் அது என்று  புரியுமுன் காலம் மாறிடிச்சா ?
வெற்றியோ தோல்வியோ, காதல் ஒன்றும் பந்தயம் இல்லையே.
அது ஒரு அனுபவம்; உணரணும்.
வலிக்கும், கொதிக்கும், ஆர்பரித்து அடங்கும்; அதுவரை அமைதியாய் காத்திருப்போம் ... அன்போடு.
ஏனெனில் ... *பேரன்பே காதல்*.

389. காகுந்தன் காடு நோக்கி நகர, அவன் பின்னே அயோத்தி நகரமே போனது, சோகமாய் ஊர்வலமாக.
அங்கதேசத்தையும் அளித்து கர்ணனை கௌரவர் தம் தோளில் தூக்கி வந்தனர், ஊர்வலமாய்.
திருமணம் முடித்து, கம்சன், தேவகி நந்தகோபரை போஜ நாட்டுக்குள் அழைத்து வந்தான், ஊர்வலமாய்.
கண்ணனை தரிசித்த சுதாமாவை பூரணகும்பம் தந்து வரவேற்க ஊரே ஒன்றுகூடி நின்றது ஊர்வலமாய்.
இதோபார்... நானுன் சொல் பேச்சு கேட்டு நடக்க, நீ என் தேவைகளை பூர்த்தி செய்ய, சம்மதமெனில்
*போவோமா ஊர்கோலம்?*


388. அசுரர்கள் அழிக்கப்பட அதற்கு நன்றி கூறும் விதமாக என்றாவது இவ்வாறு தேவர்கள் சொல்லியிருப்பார்களா தெரியாது;
தன் குலம் வளர உதவியதற்கு தாய் சத்யவதி வியாசரிடம் இதைக் கூறியிருப்பாளா தெரியாது;
சுக்ரீவன் இல்லை விபீஷணன் ... ஒருவராவது ... தெரியாது;
அள்ளித் தந்தவனிடம் கண்ணீர் மல்க சுதாமா சொன்னானா தெரியாது;
கர்ணன் பலமுறை சொல்லியும், தன் செயலிலும் காட்டியதுண்டு.
ஆண்டாள் சொன்னாள், அதற்குப் பிறகு நான் தானோ சொல்கிறேன்...
தெரியவில்லை, அதனாலென்ன
*உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே*

387. கண் விழித்ததும் கைப்பேசியில் காலை வணக்கம் அனுப்புகிறேன்.
நீ பதிலனுப்பும் வரை படுக்கை விட்டெழாது காத்திருக்கிறேன்.
சாப்டியா குளிச்சியா என்றெல்லாம் கேட்டு மகிழ்கிறேன்
நீ திருப்பி எனை கேட்கணுமென்று எதிர்பார்க்கிறேன்.
உன் மொக்கை பேச்சையெல்லாம் வெட்கிச் சிரித்து ரசிக்கிறேன்.
உன் ஆடை நிறத்திற்கொத்த நிறத்தில் நானும் அணிகிறேன்.
தயக்கமே இல்லாது பேசி உளரி உன்னோடே ஊர் சுற்றுகிறேன்.
நீ இல்லாது என்னால் தனியே வாழ முடியும் என்றெண்ணக் கூட முடியாது ... சுருங்கச் சொன்னால் ...
நீரின்றி நாடா?
*நீயின்றி நானா ?*