Saturday, March 7, 2020

கம்பராமாயணம் 57




மராமரப் படலம்


3865.
'ஏகவேண்டும் இந் நெறி' என
   இனிது கொண்டு ஏகி
'மாகம் நீண்டன குறுகிட
   நிமிர்ந்தன மரங்கள்
ஆக ஐந்தினோடு இரண்டின் ஒன்று
   உருவ, நின் அம்பு
போகவே, என்தன் மனத்து இடர்
   போம்' எனப் புகன்றான்.

'இவ்வழியே வருக' என்று இனிய சொற்கள் பேசி
வழிநடத்திச் சென்றான்.
நீண்டதான ஆகாயமும் சின்னதாய்த் தோன்றுமாறு
உயர்ந்து வளர்ந்த மரங்கள் இருக்குமிடம்
அழைத்துச் சென்றான்.
'இந்த ஏழில் ஏதேனும் ஒன்றைத் துளைத்து
அம்பு விட வேணும்,
அப்பொழுதே என் துயர் தீரும்'
என்று சொன்னான் சுக்ரீவன்.



3880.
ஏழு மாமரம் உருவி, கீழ் 
   உலகம் என்று இசைக்கும் 
ஏழும் ஊடு புக்கு உருவி, 
   பின் உடன் அடுத்து இயன்ற 
ஏழ் இலாமையின் மீண்டது 
   அவ் இராகவன் பகழி;
ஏழு கண்டபின் உருவுமால்;
   ஒழிவது அன்று, இன்னும்.

ஏழு மரங்களையும் ஊடுருவி,
கீழ் உலகம் என்று சொல்லப்படும்,
ஏழு உலகங்களையும்^ ஊடுருவி 
அதன்பின் ஏழு என்று வேறேதும் 
இல்லாததால், திரும்பி வந்தது
இராமன் எய்திய அம்பு;
ஏழு என்ற தொகை கொண்ட பொருள் 
எதனையும் கண்டால் துளைத்திடும் இன்றும், 
துளைக்காது விடாது அந்த அம்பு.

^ - அதலம், விதலம், சுதலம், தராதலாம்,
ரசாதலம், மகாதலம், பாதாளம்.




கலன் காண் படலம் 


3903.
'உழையரின் உணர்த்துவது உளது'
   என்று உன்னியோ?
குழை பொரு கண்ணினாள் 
   குறித்தது ஓர்ந்திலம்;
மழை பொரு கண் 
   இணை வாரியோடு தன் 
இழை பொதிந்து இட்டனள்;
   யாங்கள் ஏற்றனம்.

'தூதர்களைப் போல உனக்கு உணர்த்தவேண்டும் 
என்று எண்ணியோ ?' நாங்கள் அறியவில்லை;
காதணி வரை நீண்ட கண்களையுடைய அவள்
மழை போல் கண்ணீர் சிந்தியபடி,
தன் ஆபரணங்களை ஒரு சேரக் கட்டி 
கீழே வீசியெறிந்ததை, 
நாங்கள் கைப்பற்றினோம் 
(என்று இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றபோது 
நடந்ததை சுக்ரீவன் தெரிவித்தான்)



3918.
'என்னுடைச் சிறு குறை 
   முடித்தல் ஈண்டு ஒரீஇப் 
பின்னுடைத்து ஆயினும்   
   ஆக! பேதுறும் 
மின் இடைச் சனகியை 
   மீட்டு மீள்துமால் 
பொன்னுடைச் சிலையினாய்!
   விரைந்து போய்' என்றான்.

'என் சிறு குறையைத் தீர்ப்பதை 
இப்போது தவிர்ப்போம்,
அதைப் பற்றி பின்னர் யோசிப்போம்.
துன்பத்தில் கிடந்துத் துயர் படும் 
மின்னல் கொடி இடையாளை, சானகியை,
மீட்டுக் கொண்டு திரும்புவோம்,
அழகிய வில்லை ஏந்தியவனே,
விரைந்து செல்வோம்'
என்று சுக்ரீவன் சொன்னான்.



( தொடரும் )


Friday, March 6, 2020

கம்பராமாயணம் 56



3787.
மேலவன் திருமகற்கு உரை
   செய்தான், 'விரை செய் தார்
வாலி என்ற அளவு இலா
   வலியினான் உயிர் தெறக்
காலன் வந்தான்; இடர்க்
   கடல் கடந்தனம்' எனா,
ஆலம் உண்டவனின் நின்று
   அரு நடம் புரிகுவான்.

வானில் உலவும் சூரியனின் புத்திரன் சுக்ரீவனுக்கு
இராமன் இலக்குவனரைப் பற்றிச் சொன்னான்.
'வாசனை மிக்க மலர்களை அணிந்த,
அளவிடமுடியா வலிமை உடைய வாலியின்
உயிரை எடுக்க எமன் வந்துவிட்டான்;
துன்பக்கடலிலிருந்து நாம் தப்பித்தோம்' என்றான்.
விடம் உண்ட சிவனின் நாட்டிய முத்திரையில்
நின்றான் அனுமான்.



3796.
'ஆய மால் நாகர் 
   தாழ் ஆழியானே அலால் 
காயமான் ஆயினான் 
   யாவனே? காவலா!
நீ அம் மான் நேர்தியால் 
   நேர் இல் மாரீசன் ஆம் 
மாய மான் ஆயினான் 
   மா யமான் ஆயினான்'.

'தேவர்கள் வணங்கித் தொழ,
திருப்பாற்கடலில் யோக முத்திரை 
செய்தருளும் திருமாலே அல்லாது,
மானிட உருவில் தோன்றிய இந்த இராமன் 
வேறு யார் ?
அரசே! நீ இவர்களோடு நட்பு கொள்,
நிகரில்லா வலிமையுடைய மாரீசன் 
மாய மானாய் வந்தபொழுது, 
மா யமனாய் நின்று அவனை அழித்தவன் 
இந்த இராமன்'
என்று சுக்ரீவனுக்கு எடுத்துரைத்தான் அனுமான்.


3812.
'மற்று இனி உரைப்பது என்னே?
   வானிடை மண்ணில் நின்னைச் 
செற்றவர் என்னைச் செற்றார்;
   தீயரே எனினும் உன்னோடு 
உற்றவர் எனக்கும் உற்றார்; உன் 
   கிளை எனது; என் காதல் 
சுற்றம், உன்சுற்றம்; நீ என் 
   இன் உயிர்த் துணைவன்' என்றான்.


(கவலை வேண்டாம், உன் துயர் துடைப்பேன் 
என்று சொன்ன இராமன் ... )
'வேறு என்ன நான் சொல்ல;
விண்ணுலகிலும் மண்ணுலகில், உனக்குத் 
துன்பம் தந்தவர் எனக்குத் தந்தவர் ஆவார்;
தீயவர்கள் எனினும் உனக்கு நண்பர் என்றால் 
எனக்கும் நண்பர் தான்;
உன் உறவினர் இனி என் உறவினர்; இனி
என் அன்புச் சொந்தங்கள், உனக்கும் சொந்தம்;
நீ என் உயிர் நண்பன் ஆகிவிட்டாய்' 
என்றான் இராமன்.



3826.
'கால்செலாது அவன் முன்னர்;
   கந்த வேள் 
வேல்செலாது அவன் 
   மார்பில்; வென்றியான் 
வால் செலாத வாய் 
   அலது இராவணன் 
கோல் செலாது; அவன் 
   குடை செலாது அரோ'.

'காற்று அவன் வேகத்தை மிஞ்ச முடியாது;
கந்தன் முருகனின் வேல் அவன் நெஞ்சை 
துளைத்துப் புக முடியாது;
வெற்றியையே உடைய 
அவன் வால் படாத இடம் தவிர வேறெங்கும் 
இராவணன் ஆட்சி செல்லாது,
வெற்றி பெறவும் முடியாது'
என்று வாலியைப் பற்றி அனுமான் சொன்னான்.



3855.
'உலகம் ஏழினோடு ஏழும் வந்து 
   அவன் உயிர்க்கு உதவி 
விலகும் என்னினும், வில்லிடை 
   வாளியின் வீட்டி,
தலைமையோடு நின் தாரமும் 
   உனக்கு இன்று தருவென்;
புலமையாய்! அவன் உறைவிடம் 
   காட்டு' என்று புகன்றான்.

'பதினான்கு உலகிலுள்ளோரும் திரண்டு நின்று 
அவன் உயிரைக் காக்க உதவிபுரிந்து 
எனைத் தடுக்க முயன்றிடினும் 
என் அம்பினை எய்து அவனை அழிப்பேன்;
உன்னை வானரர்கட்கு அரசனாக்குவேன்;
உன் மனைவியை உன்னிடம் சேர்ப்பேன்;
அறிவில் சிறந்தவனே, 
அவன் எங்கிருக்கிறான், எனக்குக் காட்டு' 
என்று இராமன் சுக்ரீவனிடம் சொன்னான்.

( தொடரும் )

Thursday, March 5, 2020

கம்பராமாயணம் 55



கிட்கிந்தா காண்டம் 

அனுமப் படலம்

3751.
எய்தினார், சவரி நெடிது ஏய
   மால் வரை எளிதின்;
நொய்தின் ஏறினர், அதனின்; நோன்மை
   சால் கவி அரசு,
செய்வது ஓர்கிலன்; அனையர் தெய்வர்
   ஆம் என வெருவி
'உய்தும் நாம்' என விரைவின்
   ஓடினான், மலை முழையின்.

காடும் மலையும் கடந்து சென்றனர்;
சவரி சிந்தித்துச் சொன்ன வழிகளில் நடந்தனர்;
ருசியமுகம் மலைமீது எளிதாக ஏறினர்;
அம்மலையில் வாழ்ந்த,
வலிமை வாய்ந்த குரங்குகளின் அரசன் சுக்ரீவன்
இவர்கள் வருவதைக் கண்டான்;
வருகின்றவர் பகைவரே என்று எண்ணினான்;
என்ன செய்வது என்று தெரியாது அஞ்சினான்;
'இப்போதைக்கு தப்பித்துக்கொள்வோம்' என்று சொல்லி
அம்மலையிலிருந்த குகை ஒன்றினுள்
விரைந்து ஓடி மறைந்துக் கொண்டான்.



3754.
அஞ்சனைக்கு ஒரு சிறுவன் 
   அஞ்சனக் கிரி அனைய 
மஞ்சனைக் குறுகி ஒரு 
   மாணவப் படிவமொடு 
'வெஞ் சமத் தொழிலர், தவ மெய்யர்,
   கைச் சிலையர்' என 
நெஞ்சு அயிர்த்து அயல் மறைய 
   நின்று, கற்பினின் நினையும்;

அஞ்சனாதேவியின் மகன்,
நீலமலை போன்ற மைந்தனாம் 
இராமனை நெருங்கினான்.
மறைந்து நின்று கொண்டான்.
ஒரு மாணாக்கன் போன்று 
தன் உருவத்தை மாற்றிக்கொண்டான்.
'போர் செய்வதில் வல்லவர், 
தவக் கோலத்தில் உள்ளனர்,
கையில் வில்லை வைத்துள்ளனர்'
என்று தன் கல்வி அறிவால் அவர்களை 
பற்றி யூகித்து மனதில் குறித்துக்கொண்டான்,



3759.
என்பன பலவும் எண்ணி 
   இருவரை எய்த நோக்கி 
அன்பினால் உருகுகின்ற 
   உள்ளத்தான், ஆர்வத்தோரை 
முன்பிரிந்து அனையர்தம்மை முன்னினான் 
   என்ன நின்றான் 
தன் பெருங்குணத்தால் தன்னைத் 
   தான்அலது ஒப்பு இலாதான்.

இருவரையும் கண்டு பலவாறு எண்ணினான்,
அன்போடு உற்றுப் பார்த்து உருகினான்,
முன்னம் பழகி, பிரிந்து 
பின் மீண்டும் கண்டது போல் நின்றான்.
பெருங்குணம் கொண்ட, 
தனக்கு ஒப்பான ஒருவன் இல்லாத அனுமன்.



3765.
'மஞ்சு எனத் திரண்ட கோல 
   மேனிய! மகளிர்க்கு எல்லாம் 
நஞ்சு எனது தகைய ஆகி, நளிர் 
   இரும் பனிக்குத் தேம்பாக் 
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய 
   கண்ண! யான் காற்றின் வேந்தற்கு 
அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் 
   அனுமன் என்பேன்'.

('யார் நீ ?' என்று இராமன் கேட்டதும்)
மேகம் போன்ற நீலநிறமுடைய 
அழகிய மேனியை உடையவனே,
பெண்களுக்கு நஞ்சு போன்றவனே^,
குளிர்ந்த பனிக்கும் வாடாத 
தாமரை மலர் போன்ற 
சிவந்த, மலர்ந்த கண்களை உடையவனே,
நான் வாயு புத்திரன், 
அஞ்சனை வயிற்றில் வந்தவன்,
அனுமன் என்ற அழைக்கப்படுபவன்.

^- ஒழுக்கமானவனே ?

3770.
'எவ் வழி இருந்தான், சொன்ன 
   கவிக் குலத்து அரசன்? யாங்கள் 
அவ் வழி அவனைக் காணும் 
   அருத்தியால் அணுக வந்தேம்;
இவ்வழி நின்னை உற்ற எமக்கு 
   நீ இன்று சொன்ன 
செவ் வழி உள்ளத்தோனைக் 
   காட்டுதி, தெரிய' என்றான்.

'எங்கு இருக்கிறான், நீ சொன்ன 
குரங்குக் கூட்டத்து அரசன்?
நாங்கள் அவனிருக்கும் இடத்தில் 
அவனைக் காணவே வந்திருக்கிறோம்;
இவ்விடத்தில் உன்னைக் கண்ட நாங்கள்,
நல்ல உள்ளம் கொண்ட உன் மன்னனை 
எவ்விடத்தில் காணலாம், அவ்விடத்தை 
எங்கட்கு காட்டு' என்றான் இராமன்.

( தொடரும் )



Wednesday, March 4, 2020

கம்பராமாயணம் 54


சவரி பிறப்பு நீங்கு படலம்


3700.
அன்னது ஆம் இருக்கை நண்ணி
   ஆண்டுநின்று அளவு இல் காலம்
தன்னையே நினைந்து நோற்கும் சவரியைத்
   தலைப்பட்டு அன்னாட்கு
இன்னுரை அருளி, 'தீது இன்று
   இருந்தனைபோலும்' என்றான்
முன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது
   ஓர் மூலம் இல்லான்.

இராம இலக்குமனர்,
அழகுற அமைக்கப்பட்ட மதங்கரின் ஆசிரமத்தை
அடைந்தனர்.
நெடுங்காலம் அங்கேயே தங்கி,
இராமனையே எண்ணி,
தவம் செய்யும் சவரியை சந்தித்தனர்.
இனிய சொற்களைப் பேசி மகிழ்வித்தனர்.
'இத்தனை காலம் துன்பம் ஏதுமின்றி இருந்தாயா?'
என்று கேட்டான்,
எல்லாவற்றுக்கும் மூலப்பொருளான இராமன்.



3701.
ஆண்டு அவள் அன்பின் 
   ஏத்தி அழுது இழி அருவிக்கண்ணள் 
'மாண்டது என் மாயப் பாசம்; 
   வந்தது வரம்பு இல் காலம் 
பூண்ட மா தவத்தின் செல்வம்;
   போயது பிறவி' என்பாள்;
வேண்டிய கொணாந்து நல்க 
   விருந்துசெய்து இருந்த வேலை,

அவ்வேளையில் சவரி இராமனை 
அன்பினால் புகழ்ந்து, அழுது, 
அருவியாய்க் கண்ணில் நீர் வழிய நின்றாள். 
'பொய்யான இவ் உலகப் பற்று போனது,
இதுவரை நான் செய்து வந்த தவத்தின்  
அருந்தவப் பயன் 
எனக்குக் கிட்டும் காலம் வந்தது.
பிறப்பு ஒழிந்தது' என்று பேசினாள்.
ஏராளமான கனி வகைகளைக் கொண்டுவந்து 
விருந்து தந்தாள்.
இராம இலக்குவனர் அதை ஏற்றுக்கொண்டனர்.



3704.
அனகனும் இளைய கோவும் அன்று 
   அவண் உறைந்தபின்றை 
வினை அறு நோன்பினாளும் மெய்ம்மையின் 
   நோக்கி, வெய்ய 
துனை பரித் தேரோன் மைந்தன் இருந்த 
   அத் துளக்கு இல் குன்றம் 
நினைவு அரிது ஆயற்கு ஒத்த 
   நெறி எலாம் நினைந்து சொன்னாள்.


குற்றமிலாத இராமனும், இலக்குவனும் 
அன்று மதங்காசிரமத்திலேயே தங்கினர்.
பொல்லா வினைகளை நீக்க தவம் செய்த சபரி, 
மெய்யான அன்போடு நோக்கி,
வெப்பம் கொண்டு, 
விரைந்து செல்லும் குதிரையை உடைய 
சூரியனின் மைந்தன் சுக்ரீவன் வாழும் 
அழிதல் இல்லாத ருசியமுகம் மலைக்கு  
செல்லும் வழியை, ஆராய்ந்து தெளிந்து 
தான் அறிந்ததை எண்ணிப் பார்த்து 
விவரமாய்ச் சொன்னாள்.



3706.
பின் அவள் உழந்து பெட்ரா 
   யோகத்தின் பெற்றியாலே 
தன் உடல் துறந்து, தான் அத் 
   தனிமையின் இனிது சார்ந்தாள்;
அன்னது கண்ட வீரர் அதிசயம் 
   அளவின்று எய்தி 
பொன் அடிக்க கழல்கள் ஆர்ப்ப 
   புகன்ற மா நெறியில் போனார்.

அதன்பின்,
அறிய முயற்சியால் வருந்திப் பெற்ற 
யோக  நெறியின் சிறப்பால் 
தன் உடலை விட்டு உயிரைப் பிரிந்தாள்;
பெறுதற்கரிய அந்த பெரு நிலையைப் 
போய்ச் சேர்ந்தாள். 
அந்த அதிசயக் காட்சியைக் கண்டு 
இராம இலக்குமனர் ஆனந்தம் அடைந்தனர்.
காலில் கட்டிய கழல்கள் ஓசை எழுப்ப 
சபரி சொன்ன வழியில் செல்லத் தொடங்கினர்.


ஆரணிய காண்டம் முற்றிற்று 
( தொடரும் )

Tuesday, March 3, 2020

கம்பராமாயணம் 53


கவந்தன் படலம்


3643.
ஐ-ஐந்து அடுத்த யோசனையின்
   இரட்டி, அடவி புடையுடுத்த
வையம் திரிந்தார்; கதிரவனும் வானின்
   நாப்பண் வந்துற்றான்;
எய்யும் சிலைக் கை இருவரும் சென்று
   இருந்தே நீட்டி எவ் உயிரும்
கையின் வளைத்து வயிற்றின் அடக்கும்
   கவந்தன் வனத்தைக் கண்ணுற்றார்.

(ஐ-ஐந்து - 25, இரட்டி - 50)
ஐம்பது யோசனை தூரம்#,
காடு காடு சார்ந்த நிலம் என்று அலைந்து
சூரியன் வானின் மையப் பகுதி
வந்து .நின்ற வேளையில்
அம்பை எய்தும் வில்லை கையில் ஏந்திய
இராம இலக்குவனன் இருவரும்,
இருந்த இடத்தில் இருந்தபடியே கையை நீட்டி,
அகப்படும் உயிர்கள் அனைத்தையும்
வாயில் இட்டுக்கொள்ளும் கவந்தன்
வாழும் கானகத்தைக் கண்டார்கள்.


* 615 KMs

3653.
வெயில் சுடர் இரண்டினை
   மேரு மால் வரை
குயிற்றியதாம் எனக்
   கொதிக்கும் கண்ணினன்;
எயிற்று இடைக்கு இடை
   இரு காதம்; ஈண்டிய
வயிற்றடை வாய் எனும்
   மகர வேலையான்.

கவந்தன் -
வெப்பம் மிக்க இரண்டு சூரியனை
பெரிய மலை மேல் பதித்தது போல்
கொதிக்கும் கண்களை உடையவன்.
இரண்டு பற்களுக்கு இடையில்
இரண்டு காத தூரம் இடைவெளி உள்ளவன்.
மீன்கள் வாழும் கடல் போன்ற வாயை,
வயிற்றிலே கொண்டவன்.





3678.
'அழிந்துளார் அலர்; இகழ்ந்தனர் என்னை'
   என்று அழன்றான்;
பொழிந்த கோபத்தன்; புதுப்பொறி
   மயிர்ப்புறம் பொடிப்ப
'விழுங்குவேன்' என வீங்கலும்
   விண் உற வீரர்
எழுந்த தோள்களை வாள்களால்
   அரிந்தனர், இட்டார்.

'எனைக் கண்டு அஞ்சவில்லை இவர்கள்,
அஞ்சாது என் எதிரே தைரியமாக நின்று
என்னை அவமதித்து விட்டனர்'
என்று எண்ணி சினம் கொண்டான் கவந்தன்.
கோபம் மயிர்க்கால்கள் வரை பரவ கொதித்தான்.
'உங்களை விழுங்கிடுவேன்' என்று கத்தியபடி
எழுந்தான்.
ஆகாயம் வரை எழுந்த அவன் தோள்களை
தம் வாளால் வெட்டி வீழ்த்தினர், வீரர்கள்.


3682.
'ஈன்றவனோ எப் பொருளும்? எல்லை 
   தீர் நல் அறத்தின் 
சான்றவனோ? தேவர் தவத்தின் 
   தனிப் பயனோ?
மூன்று கவடு ஆய் முளைத்து 
   எழுந்த மூலமோ?
தோன்றி, அரு வினையேன் சாபத் 
   துயர் துடைத்தாய்!

'பொருட்கள் எல்லாவற்றையும் படைத்தவன் 
நீதானோ?
எல்லை இல்லாத நற்செயல்களுக்கு 
சாட்சியாய் இருப்பவன் நீதானோ?
தேவர்கள் செய்யும் தவத்தின் பயன் 
நீதானோ?
மூன்று தேவர்களுக்கும் மூலப் பொருள் 
நீதானோ?
நான் இருக்கும் இடத்திற்கே வந்து 
தீராத என் பாவத்தை தீர்த்தவனே,
சாபத்தை அழித்தவனே !'
என்று கூறி வணங்கி நின்றான் கவந்தன்.



3697.
'கதிரவன் சிறுவன் ஆன கனக 
   வாள் நிறத்தினானை 
எதிர் எதிர் தழுவி நட்பின் இனிது அமர்ந்து 
   அவனின் ஈண்ட 
வெதிர் பொரும் தோளினாளை நாடுதல் 
   விழுமிது' என்றான் 
அதிர் கழல் வீரர்தாமும் அன்னதே 
   அமைவது ஆனார்.

(அன்னை போன்ற சபரியை சந்தித்தபின்)
'சூரியனின் மகன், பொன்னிற சுக்கிரீவனை
சந்தித்து நட்பு கொண்டு,
அவன் உதவியோடு, விரைவாக 
மூங்கில் போன்ற தோளை உடைய சீதையை 
தேடுதல் நலம் பயக்கும்'
என்றான் கவந்தன்.
வீரக்கழல் அணிந்த இராமனும் இலக்குவனும் 
அவன் சொன்னதற்கு இசைத்தனர்.

( தொடரும் )

Monday, March 2, 2020

கம்பராமாயணம் 52



3592.
பேசினன்; அங்கு அவள்
   பேசுற நாணாள்;
ஊசல் உழன்று அழி
   சிந்தையளும்தான்;
'நேசம் இல்
   அன்பினளாயினும் நின்பால்
ஆசையின் வந்த
   அயோமுகி' என்றாள்.

'யார் நீ?' என்றவளை இலக்குவன் கேட்டான்.
ஆசையில் அகப்பட்டு உழன்று அழியும்
மனத்தைக் கொண்ட அவள்,
தன் இச்சையை நாணாது சொன்னாள்,
'நேசம் வைக்க ஆருமில்லாதவள்,
நெஞ்சில் நிறைய அன்புடையவள்,
உன்மேல் ஆசை கொண்டு வந்தவள்,
பெயர் அயோமுகி' என்றாள்.



3599.
மோகனை என்பது
   முந்தி முயன்றாள்;
மாக நெடுங் கிரி 
   போலியை வவ்வா
ஏகினள், உம்பரின்
   இந்துவோடு ஏகும்
மேகம் எனும்படி
   நொய்தினின் வெய்யாள்.


மயக்கத்தை உண்டாக்கும் மாயம் செய்தாள்.
மலை போன்ற இலக்குவனனை
தூக்கிக்கொண்டாள்.
வானத்தில், நிலவுடன் உலவும் மேகம் போன்று
விரைவாகப் பறக்கத் தொடங்கினாள்,
அந்தக் கொடியவள்.



3608.
தள்ளா வினையேன் தனி 
   ஆர் உயிர் ஆய் 
உள்ளாய்! ஒரு 
   நீயும் ஒளித்தனையோ ?
பிள்ளாய்! பெரியாய்!
   பிழை செய்தனையால்
கொள்ளாது உலகு உன்னை 
   இதோ கொடிதே!

(இலக்குவன் திரும்பி வர தாமதமாக)
'மாற்ற முடியாத கொடிய வினைகளைச் 
செய்தவன் நான்.
ஒப்பில்லாத, என் உயிருக்கு உயிரான நீயும்  
எங்கோ ஒளிந்துவிட்டாயே, ஏன்?
என் பிள்ளையே, அறிவில் பெரியவனே,
தனியே என்னை இங்கு தவிக்க விட்டு 
தவறு செய்துவிட்டாய்,
இக் கொடிய செயலை, உலகம் மன்னிக்காது
இதை உணர்ந்துகொள்வாய்'
என்று இராமன் எண்ணினான்.



3618.
பேர்ந்தான், நெடு 
   மாயையினில் பிரியா;
ஈர்ந்தான், அவள் நாசி 
   பிடித்து, இளையோன்;
சோர்ந்தாள் இடு பூசல் 
   செவித் துளையில் 
சேர்ந்து ஆர்தலுமே 
   திருமால் தெருளா,

இலக்குவன் மயக்கத்திலிருந்து தெளிந்தான்,
தெளிந்து, அயோமுகியின் மூக்கை அறுத்தான்.
மூக்கு அறுபட, வேகம் தளர்ந்து போனாள்,
இடியோசை போன்ற ஒலி எழுப்பினாள்.
அவ்வோசை கேட்டதும், இராமனும் 
கலக்கம் நீங்கி அமைதியடைந்தான்.





3631.
'துளைபடு மூக்கொடு செவி
   துமித்து உக,
வளை எயிறு இதழோடு
   அரிந்து, மாற்றிய
அளவையில் பூசலிட்டு
   அரற்றினாள்' என
இளையவன் விளம்பிநின்று
   இரு கை கூப்பினான்.

('அரக்கியைக் கொல்லலை?'
என்று இராமன் கேட்க)
மூக்கை அறுத்தேன்,
காதுகளையும், வளைந்த பற்களையும்,
இதழ்களையும்
துண்டுபட்டு விழும்படி அறுத்தேன்.
இதற்கே வலி தாங்காது அவள் கதற
பிழைத்துப் போகட்டும் என்று விட்டுவிட்டேன்'
என்று விளக்கி,
இருகை கூப்பி நின்றான் இலக்குவன்.

( தொடரும் )

Sunday, March 1, 2020

கம்பராமாயணம் 51


3494.
மடல் உள் நாட்டிய தார்
   இளையோன் சொலை மதியா
மிடலுண் நாட்டங்கள் தீ உக
   நோக்கினன் விரைவான்
உடலுள் நாட்டிய குருதி அம்
    பரவையின் உம்பர்
கடலுள் நாட்டிய மலை அன்ன
   தாதையைக் கண்டான்.


பூவிதழ்கள் உள்ளே வைத்துக் கட்டப்பட்ட
மலர்மாலை அணிந்த இலக்குவன்
சொன்ன கருத்துக்களை ஏற்று,
கொஞ்ச தூரத்தில் எதையோ கண்டு,
அவ்விடம் விரைவாகச் சென்று,
வலிமை மிக்க விழிகளிலிருந்து
கோபத்தீ கக்கியபடி,
கடலிலிருந்து வெளிப்பட்ட மந்தரமலை போன்று
இரத்தக் குருதியின் இடையே கிடந்த
தந்தை  போன்ற சடாயுவைக் கண்டான்.





3515.
'வடுக் கண் வார் கூந்தலாளை
   இராவணன் மண்ணினோடும்
எடுத்தனன் ஏகுவானை எதிர்ந்து
   எனது ஆற்றல்கொண்டு
தடுத்தனென், ஆவது எல்லாம்; தவத்து
   அரன் தந்த வாளால்
படுத்தனன்; இங்கு வீழ்ந்தேன்; இது
   இன்று பட்டது' என்றான்.

மாவடு பிளந்தது போன்ற கண்களையும்,
நீண்ட கூந்தலையும் உடைய சீதையை,
இராவணன் நிலத்தோடு பெயர்த்துக்கொண்டு
பறக்கப் பார்த்தான்.
என்னால் முடிந்தவரை தடுத்து நிறுத்தினேன்,
எதிர்த்துப் போரிட்டேன்;
இறுதியில் அவன்,
தவம் செய்து, சிவம் தந்த சந்திரகாச வாளால்
என் இறகை வெட்டி வீழ்த்தினான்.
இவ்விடத்தில் விழுந்து கிடக்கிறேன்.
இது இன்று நடந்தது'
என்று சடாயு இராம இலக்குமணர்களிடம்
எடுத்துரைத்தான்.




3535.
அவ் வழி இளவல் கூற அறிவனும் 
   அயர்வு நீங்கி 
'இவ் வழி இனைய எண்ணின் 
   ஏழைமைப்பாலது' என்னா 
வெவ் வழி பொழியும் கண்ணீர் 
   விலக்கினன், 'விளித்த தாதை 
செவ் வழி உரிமை யாவும் திருத்துவம்;
   சிறுவ!' என்றான்.

(சடாயு உயிர் நீங்க)
இலக்குவன் எடுத்துக்கூற, இராமனும் 
அதைக்கேட்டு சோகம் நீங்க
'இவ்விடத்தில் இத்தகைய எண்ணங்களை 
எண்ணியிருப்பது அறியாமை போன்றது'
என்று முடிவெடுத்து
கண்ணீரைத்  துடைத்துக்கொண்டு 
'இறந்த தந்தைக்கு நல்லமுறையில் 
இறுதிக்கடனை செய்துமுடிப்போம், தம்பி'
என்று சொன்னான்.



அயோமுகிப் படலம் 


3556.
நின்று பல் உயிர் காத்தற்கு 
   நேர்ந்த யான் 
என் துணைக் குல மங்கை 
   ஓர் ஏந்திழை 
தன் துயர்க்குத் தகவு 
   இலென் ஆயினேன்;
 நன்று நன்று என் 
   வலி!' என நாணுமால்.

அரக்கர்களை எதிர்த்து, அழித்து
மற்ற உயிர்களைக் காப்பதற்கு 
உடன்பட்ட நான்,
என் மனைவியை, குலப்பெண்ணை
அணிகலன்கள் அணிந்தவளை 
காக்க முடியாது போனேன், 
அவள் துன்பத்தை 
நீக்க முடியாதவன் ஆனேன்,  
என்னே என் வலிமை' 
என்றெண்ணி நாணினான் இராமன்.



3579.
எங்கணும் நாடினன்; நீர் இடை காணான்;
சிங்கம் எனத் தமியன் திரிவானை
அங்கு, அவ் வனத்துள் அயோமுகி என்னும் 
வெங் கண் அரக்கி விரும்பினள் கண்டாள்.


(இராமன் தண்ணீர் கேட்க)
எல்லா இடத்திலும் தேடினான்,
தண்ணீர் எங்கும் கிடைக்காது தவித்தான்,
சிங்கம் போல இங்குமங்கும் ஓடித் திரிந்தான்.
அங்கு, அந்தக் காட்டில் வசிப்பவள்,
கொடிய கண்களை உடையவள், 
அயோமுகி என்னும் பெயர் கொண்டவள் 
அரக்கி, அவன் மேல் காதல் கொண்டாள்
ஆசையாய்ப் பார்த்தாள்.

( தொடரும் )