Monday, February 10, 2020

கம்பராமாயணம் 33


திருவடி சூட்டு படலம்

2376.
'எடுத்த மா முடி சூடி, நின்பால் இயைந்து
அடுத்த பேர் அரசு ஆண்டிலை; ஐய! நீ
முடித்த வார் சடைக் கற்றையை, மூசு தூசு
உடுத்து நண்ணுதற்கு உற்றுளது யாது?' என்றான்.

(குகனை அடுத்து பரத்துவாச முனிவனை சந்தித்தான் பரதன்)

உயர்ந்த திருமுடி சூடி,
உன்னிடம் தானே வந்து சேர்ந்த அரசினை ஆட்சிசெய்யாது,
ஐயா, இப்படி சடைமுடி வளர்த்து
மரவுரி அணிந்துகொண்டு
வனத்தின் பக்கம் வந்த காரணம் செப்பும்
எனக் கேட்டான் பரத்துவாச முனிவன்.


2402.
குதித்தனன் பாரிடை; குவடு நீறு எழ
மிதித்தனன்; இராமனை விரைவின் எய்தினான்;
'மிதித்திலன் பரதன், நின்மேல் வந்தான், மதில்
பதிப் பெருஞ் சேனையின் பரப்பினான்' என்றான்.

(சித்திரக்கூட மலை மேலிருந்து படை சூழ பரதன் வருவதைக்
கண்ட இலக்குமன் கோபம் கொண்டான்)

குன்று  பொடியாகும்படி உச்சியிலிருந்து
கீழே குதித்தான்
இராமனை நோக்கி விரைந்து வந்தான்.
'உனை மதிக்காது, மதில் சூழ்ந்த நகரத்துப்
படையோடு வருகிறான் பரதன்' என்றான்.


2419.
'பெருமகன் என்வயின் பிறந்த காதலின் 
வரும் என நினைகையும், மண்ணை என்வயின் 
தரும் என நினைகையும்'  தவிர 'தானையால் 
பொரும்' என நினைகையும் புலமைப்பாலதோ?

( இராமன் இலக்குமனனிடம்)
'பரதன் என்மேல் கொண்ட அன்பினால் காண வரலாம் என நினை;
அரசுரிமையை எனக்குத் தர வரலாம் என நினை';
இதை விடுத்து 
'போருக்கு வருகிறானோ ?' என்று எண்ணுவது 
அறிவுள்ளோர் செய்வதா ?


2427.
'அறம்தனை நினைந்திலை; அருளை நீத்தனை;
துறந்தனை முறைமையை' என்னும் சொல்லினான்,
மறந்தனன், மலரடி வந்து வீழ்ந்தனன் 
இறந்தனன் தாதையை எதிர்கண்டென்னவே,

'அரசு ஏற்றுக்கொள்ளுதல் அறம்தான் என்று நீ 
எண்ணவில்லை;
இரக்கம் அற்றவனாய் இருந்துவிட்டாய்;
முறை எது என்பதையும்  மறந்து துறந்துவிட்டாய்'
என்று கூறியவனாய் 
தன்னை மறந்து இராமன் பாதங்களில் விழுந்தான்.
இறந்துபோன தந்தையை எதிரில் கண்டவனாய் 
இராமனைக் கண்டான் - பரதன்.


2431.
அரியவன் உரைசெய, பரதன், 'ஐய! நின் 
பிரிவு எனும் பிணியினால், என்னைப் பெற்ற அக் 
கரியவள் வரம் எனும் காலனால், தனக்கு 
உரிய மெய்ந் நிறுவிப் போய், உம்பரான்' என்றான்.

அறிதர்கரிய இராமன் தந்தையின் நலம் வினவ,
பரதன், 'ஐயா ! உன் பிரிவு தந்த நோயினால்,
எனைப் பெற்றக் கொடியவள் பெற்ற வரம் எனும் யமனால் 
சத்தியத்தை இவ்வுலகில் நிலைநிறுத்திவிட்டு,
வானுலகம் சென்றுவிட்டான்' - என்றான்.
 

( தொடரும் )


Sunday, February 9, 2020

கம்பராமாயணம் 32



கங்கை காண் படலம்


2308.
அப் படை கங்கையை அடைந்த ஆயிடை,
'துப்புடைக் கடலின் நீர் சுமந்த மேகத்தை
ஒப்புடை அண்ணலோடு உடற்றவே கொலாம்
இப் படை எடுத்தது?' என்று எடுத்த சீற்றத்தான்.

பரத சேனை, கங்கைக் கரையை நெருங்கிய பொழுது
'பவளம் உடைய கடலிலிருந்து நீரை முகந்த கரு மேகத்தைப்
போன்ற அண்ணன் இராமனோடு போர் செய்யவோ
இப்படை வந்திருக்கு?' என்று எண்ணி கோபப்பட்டான் - குகன்.


2311.
கட்டிய கரிகையன், கடித்த வாயினன்,
வெட்டிய மொழியினன், விழிக்கும் தீயினன்,
கொட்டிய துடியினன், குறிக்கும் கொம்பினன்,
'கிட்டியது அமர்' எனக் கிளரும் தோளினன்.

குகன் - .இடைக்கச்சில் உடைவாளை சொருகியவன்,
பற்களால் உதட்டை கடித்துக் கொண்டிருப்பவன்;
கடுமையாகப் பேசும் சொற்களை உடையவன்;
விழியிலிருந்து தீப்பொறி பறக்க, பார்ப்பவன்,
உடுக்கையை உடையவன்,
ஒலி எழுப்ப ஊது குழலை வைத்திருப்பவன்;
'அருகில் வந்தது போர்' என்று எண்ணி மகிழ
எழும்பும் தோள்களை உடையவன்.


2332.
'நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்
    அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கிறான்; தவ வேடம்
   தலைநின்றான்;
துன்பம் ஒரு முடிவு இல்லை;
   திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின் பிறந்தார்
   இழைப்பரோ பிழைப்பு?' என்றான்.

'இவன் (பரதன்) என் நாயகன்
இராமனைப் போலவே இருக்கின்றான்,
அவன் அருகில் நிற்பவன் (சத்துருக்கனன்)
இலக்குவனைப் போல் இருக்கின்றான்;
தவ வேடத்தில் வேறு இருக்கின்றான்;
முடிவில்லாத துன்பத்தில் இருக்கின்றான்,
இராமன் சென்ற திசை நோக்கி வணங்குகிறான்.
பெருமான் இராமன் பின் பிறந்த தம்பியர்
தவறு செய்வாரோ ?' என்றெண்ணினான்.


2366.
கற்றத்தார் தேவரோடும் தொழ நின்ற
   கோசலையைத் தொழுது நோக்கி
'கொற்றத் தார்க் குரிசில் இவர் ஆர்?' என்று
   குகன் வினவ, 'கோக்கள் வைகும்
முற்றத்தான் முதல் தேவி; மூன்று
   உலகும் ஈன்றானை முன் ஈன்றானைப்
பெற்றதால் பெறும் செல்வம், யான்
   பிறத்தலால் துறந்த பெரியாள்' என்றான்.

உறவினர்களும் தேவர்களும் வணங்க,
அங்கு நின்றிருந்த கோசலையை நோக்கி
'வெற்றிமாலை சூடிய பரதா, இவர் யார்?' என்று கேட்க,
'அரசர்கெல்லாம் அரசன் தசரதனின் முதல் மனைவி,
மூன்று உலகையும் படைத்த பிரம்மதேவனைப்
படைத்தவனைப் பெற்றெடுத்தவள்;
இவள் பெற்றிருக்க வேண்டிய பெருஞ்செல்வத்தை
நான் பிறந்ததால் இழந்த பெருமையுடையவள்'
(என்று பரதன் கோசாலையை குகனுக்கு அறிமுகம் செய்தான்)


( தொடரும் )

Saturday, February 8, 2020

கம்பராமாயணம் 31



2190.
ஆண்தகை, கோசலை அருகர் எய்தினன்,
மீண்டும், மண் கிழிதர வீழ்ந்து, கேழ் கிளர்
காண் தகு தடக் கையின் கமலச் சீறடி
பூண்டனன்; கிடந்தனன்; புலம்பினான் அரோ!

ஆணழகன் பரதன் கைகேயி யின் இருப்பிடம் விட்டகன்று
கோசலை இருக்குமிடம் வந்தான்.
தரை பிளவுபடும்படி கீழே விழுந்து,
நிறம் மிக்க நீண்ட கைகளால்
கோசலையின் தாமரைப் பாதங்களைப் பற்றினான்.
கீழேயே கிடந்து அழுது புலம்பினான்.



2218.
தூய வாசகம் சொன்ன தோன்றலை
தீய கானகம் திருவின் நீங்கி முன்
போயினான் வரக் கண்ட பொம்மலாள்
ஆய காதலால், அழுது புல்லினாள்.

தன் மனத் தூய்மையை எடுத்துச் சொன்ன பரதனை,
அரச போகத்தைத் துறந்து
கானகம் நோக்கிப் போன இராமன்
திரும்பி வந்தது போன்று எண்ணி மகிழ்ந்தாள்.
அந்த இராமனிடத்தே வைத்த அன்போடு,
பரதனை அழுது தழுவிக்கொண்டாள்.


2231.
என்னும் வேளையில் எழுந்த வீரனை 
'அன்னை தீமையால் அரசன் நின்னையும் 
துன்னு துன்பத்தால், துறந்து போயினான்,
முன்னரே' என முனிவன் கூறினான்.

ஈமக் கடன் செய்யும் பொருட்டு எழுந்த பரதனை 
'உன் அன்னை செய்த தீமையால்,
துன்பம் மிகுதியால்,
அரசன் உன்னையும் துறந்து,
மகன் இல்லை என்று கூறிவிட்டு இறந்தான்'
என வசிட்டன் சொன்னான்.


ஆறு செல் படலம் 

2255.
'தஞ்சம் இவ் உலகம், நீ தாங்குவாய்' எனச் 
செஞ்செவே முனிவரன் செப்பக் கேட்டலும் 
'நஞ்சினை நுகர்' என நடுங்குவாரினும் 
அஞ்சினன் அயர்ந்தனன் அருவிக் கண்ணினான்.

'இந்த உலகம் உன் அடைக்கலம்,
அரசபாரம் இனி நீ சுமக்கணும்'
 என வசிட்டன் சொன்னதும் 
'விடத்தை அருந்து' எனச் சொல்ல, 
அதைக் கேட்டவரை விட 
அதிகம் நடுங்கினான்,
பயந்து சோர்ந்தான்.
அருவி போல் கண்ணில் நீர் ஒழுக நின்றான் (பரதன்).


2264.
குரிசிலும் தம்பியைக் கூவி 'கொண்டலின் 
முரசு அறைந்து, 'இந் நகர் முறைமை வேந்தனைத் 
தருதும் ஈண்டு' என்பது சாற்றி, தானையை 
'விரைவினில் எழுக!' என விளம்புவாய்' என்றான்.

பரதன், தம்பி சத்ருக்கனனை அழைத்தான்.
மேகம் போன்று இடியென முழங்கும் 
முரசு அடிக்கச் சொன்னான்.
'இந்நகரின் மரபு படி வேந்தனாக வேண்டிய இராமனை 
அழைத்து வரப்போகிறோம்' என அறிவிக்கவும் சொன்னான்.
'சேனைகளை விரைவாகப் புறப்படும்படி சொல்'
என்றும் சொன்னான்.

( தொடரும் )





Friday, February 7, 2020

கம்பராமாயணம் 30



பள்ளிபடைப் படலம்

(இதற்கிடையில் இராமனின் முடிசூட்டு விழா செய்தியோடு
தூதுவர் பரதனை சந்தித்தனர்)

2109.
'எழுக சேனை' என்று ஏவினன்; எய்தினன்
தொழுது; கேகேயர் கோமகன் சொல்லொடும்,
தழுவு தேரிடைத் தம்பியோடு ஏறினான்;
பொழுதும் நாளும் குறித்திலன் போயினான்.

'தன்னுடன் வந்த சேனை யாவும் அயோத்தி கிளம்புக'
என்று கட்டளையிட்டவனாய்,
கேகேய மன்னன் யுதாசித்தை வணங்கி தொழுது
அவர் சொன்ன செய்தியோடு,
குதிரைகள் பூட்டிய தேரில்
நல்ல நாள், நேரம் என்றெதைப் பற்றியும் சிந்திக்காது,
தம்பி சத்ருக்கனனோடு கிளம்பினான், பரதன்.

2120.

ஏர் துறந்த வயல்; இள மைந்தர் தோல்
தார் துறந்தன; தண் தலை நெல்லினும்,
நீர் துறந்தன; தாமரை நீத்தெனப்
பார் துறந்தனள், பங்கயச் செல்வியே.

வயல்களில் கலப்பைகள் இல்லை;
இளைய ஆடவர் தோள்களில்
மலர்மாலைகள் இல்லை;
குளிர்ந்த வயல்களில் நெற்கதிர்கள் இல்லை;
நீர் இல்லாததால் தாமரை இல்லை;
தாமரை இல்லாததால், திருமகள்
கோசல நாட்டை விட்டகன்றாள்.


2145.
ஆனவன் உரைசெய, அழிவு இல் சிந்தையாள்,
'தானவர் வலி தவ நிமிர்ந்த தானை அத்
தேன் அமர் தெரியலான், தேவர் கை தொழ
வானகம் எய்தினான்; வருந்தல் நீ' என்றாள்.

(கோசலநாடு களையிழந்து இருப்பது கண்டு)
பரதன் வினவ,
எதற்கும் கலங்காத திட சித்தம் கொண்ட கைகேயி
'அசுரர்களை அழிக்கும் வல்லமை பொருந்திய சேனை உடைய,
தேன் சொட்டும் மலர்மாலை அணிந்த தசரதன்,
தேவர்கள் கை கூப்பித் தொழ
விண்ணுலகத்தை அடைந்தான்,
நீ இதைக் கேட்டு வருந்த வேண்டாம்' என்றாள்.



2160.
அவ் உரை கேட்டலும், அசனிஏறு என 
வெவ் உரை வல்லவள், மீட்டும் கூறுவாள்;
'தெவ் அடு சிலையினாய்! தேவி தம்பி என்று 
இவ் இருவோரோடும் கானத்தான்' என்றாள்.

(இராமனைக் காண வேண்டும் என்று பரதன் கூற)
பரதன் சொன்னதைக் கேட்டதும் 
பேரிடி போல இருந்ததை உணர்ந்து,
கொடுஞ்சொற்களைக் கூற வல்ல கைகேயி 
தொடர்ந்து  பேசினாள்,
'பகைவரைக் கொல்லும் வில்லுடைய பரதா!
தன்  மனைவி, தம்பி இருவரோடும் 
இராமன் காட்டில் இருக்கிறான்' என்றாள்.



2167.
சூடின மலர்க் கரம் சொல்லின் முன் செவி 
கூடின; புருவங்கள் குனித்துக் கூத்து நின்று 
ஆடின; உயிர்ப்பினோடு அழல் கொழுந்துகள் 
ஓடின; உமிழ்ந்தன, உதிரம் கண்களே!

(கைகேயி தான் பெற்ற வரங்களைக் கூற)
தலை மேல் குவித்து வணங்கிய கைகள் 
காதினைப் பொத்திக்கொண்டன;
புருவங்கள் வளைந்து ஏறி இறங்கி கூத்தாடின;
மூச்சிலிருந்து நெருப்புக் காற்று வெளி வந்தன;
கண்கள் இரத்தத்தைக் கக்கின;

2187.
'ஏன்று, உன் பாவிக் கும்பி வயிற்றினிடை வைகித் 
 தோன்றும் தீராப் பாதகம் அற்று, என் துயர் தீர 
சான்றும்தானே நல் அறம் ஆக, தகை ஞாலம் 
மூன்றும் காண, மா தவம் யானே முயல்கின்றேன்'. 

'உடன்பட்டு, பாவியான உன் வயிற்றில் பிறந்த 
தீராப் பாவம் நீங்க,
என் துயரம் போக்கிக்கொள்ள,
அந்த அறக்கடவுளே சாட்சியாகும்படி 
மூன்று லோகங்களும் காணும்படி 
நான் அருந்தவம் செய்ய இருக்கின்றேன்'
என்றான் பரதன். 

( தொடரும் )




Thursday, February 6, 2020

கம்பராமாயணம் 29




வனம் புகு படலம்

2000. 
வெயில், இள நிலவே போல்
   விரி கதிர் இடை வீச,
பயில் மரம் நிழல் ஈன
   பனி புரை துளி மேகப்
புயல் தர, இள மென் கால்
   பூ அளவியது எய்த,
மயிலினம் தடம் ஆடும்
    வழி இனியன போனார்.

சூரியன் தன் கதிர்களை
நில ஒளி போல இடையிடையே வீச,
நெருங்கி வளர்ந்த மரங்கள் நிழல் தர,
மேகம் பனி போன்று குளிர்ந்த
மழைத்துளியைத் தர
பூக்களின் வாசத்தைச் சுமந்து
மெல்லியத் தென்றல் வீச,
மயில் கூட்டங்கள் நடனமாடும் வழியில்,
மூவரும் பயணப்பட்டனர்.


2018.
அருத்தியின் அகம் விம்மும் 
   அன்பினன், 'நெடு நாளில் 
திருத்திய வினை முற்றிற்று 
    இன்று' எனல் தெரிகின்றான்.
பரத்துவன் எனும் நாமப் 
   பர  முனி, பவ நோயின் 
மருத்துவன் அனையானை 
   வரவு எதிர்கொள வந்தான்.


மகிழ்ச்சியில் மனம் பூரிக்கின்ற 
அன்புடையவன்,
நீண்ட நாள் தவம் இன்று பூர்த்தியானது 
என்று புரிந்துகொண்டவன்,
பரத்வாஜன் என்ற திருநாமம் கொண்ட 
பெரிய முனிவன்,
பிறவிப் பிணி போக்கவல்ல இராமனை 
எதிர்கொண்டழைக்க வந்தான்.


2031.
'ஆவது உள்ளதே; ஐய! ;கேள்;
   ஐ-இரண்டு அமைந்த 
காவதப் பொழிற்கு அப் புறம் 
   கழிந்தபின், காண்டி;
மேவு காதலின் வைகுதிர்  
   விண்ணினும் இனிதால்;
தேவர் கைதொழும் சித்திர 
   கூடம் என்று உளதே'.

'சரி நீ சொல்லியபடி, ஐயனே கேள்;
பத்து காத தூரம் 
இச்சோலைக்கு அந்தப் பக்கம்,
தேவலோகத்தை விட இனிய இடம்,
நீங்கள் தங்க உகந்த இடம்;
தேவர்களும் வணங்கத் தகுந்த 
சித்திரக்கூட மலை ஆகும்'
என்று முனிவர் இராமனுக்கு 
வழி காட்டினார்.
 
சித்திரகூடப் படலம் 

2088.
மாலை வந்து அகன்றபின், மருங்கு இலாளொடும் 
வேலை வந்து உறைவிடம் மேயது ஆம் என,
கோலை வந்து உமிழ் சிலைத் தம்பி கோலிய 
சாலை வந்து எய்தினான், தவத்தின் எய்தினான்.

மாலை வேளை முடிந்த பின்,
இடை இல்லாத சீதையோடு,
கடல் தன் இடத்தை வந்தடைவது போல், 
அம்பு உமிழும் வில்லை உடைய தம்பி 
அமைத்த தவச்சாலையில், தங்கினான், 
தவம் செய்ய வனம் வந்த இராமன்.


( தொடரும் )





Wednesday, February 5, 2020

கம்பராமாயணம் 28


குகப் படலம்

1953.
ஆய காலையின், ஆயிரம் அம்பிக்கு
நாயகன், போர்க் குகன் எனும் நாமத்தான்,
தூய கங்கைத் துறை விடும் தொன்மையான்
காயும் வில்லினன், கல் திரள் தோளினான்.

( இராமன் முனிவர்களோடு அமர்ந்திருக்கையில் )
அந்த நேரத்தில்,
ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவன்
போர் புரிவதில் வல்லவன்,
குகன் என்ற பெயருடையவன்,
தூய்மையான கங்கையில்
வெகுகாலமாய் படகு செலுத்தும் வேலை செய்பவன்
பகைவர்களை அழிக்கும் வில்லை ஏந்தியவன்;
கல் போன்ற திரண்ட தோள் உடையவன்
( அவன் இராமனைக் காண வந்தான்)


1963.
கூவாமுன்னம் இளையோன் குறுகி, 'நீ
ஆவான் யார்?' என, அன்பின் இறைஞ்சினான்;
'தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்;
நாவாய் வேட்டுவன், நாய் அடியேன்' என்றான்.

அழைக்கும் முன்னே, குகன் வந்துகொண்டிருக்கும்போதே
இலக்குவன் அவனிடம் 'நீ யார்?' என்று வினவினான்.
குகன் அன்போடு வணங்கினான்.
'தெய்வமே ! உன் திருவடிகளை வணங்க வந்தேன்,
கங்கையைக் கடக்க, ஓடம் செலுத்துபவன்,
வேட்டுவச் சாதியினன்,
நாய் போன்று,   நான் உம் அடிமை' என்றான்.


1964.
'நிற்றி ஈண்டு' என்று,  புக்கு 
     நெடியவன் - தொழுது, தம்பி 
'கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன்,
      நிமிர்ந்த கூட்டச் 
சுற்றமும், தானும்; உள்ளம் தூயவன்;
    தாயின் நல்லான்;
எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை; குகன் 
     ஒருவன்' என்றான்.

'இங்கேயே இரு' என்று குகனிடம் சொல்லிவிட்டு,
இலக்குவன் உள்ளே சென்றான்.
இராமனை வணங்கினான்.
அரசே, உன்னைக் காண ஒருவன் வந்திருக்கிறான்,
நிறைய சொந்த பந்தம் சூழ நிற்கிறான்,
உள்ளத்தால் தூயவன்;
தாயை விட நல்லவன்; 
கரைபுரண்டோடும் கங்கையைக் கடக்க உதவும் 
மரக்கலங்களுக்குத் தலைவன் 
குகன் என்ற பெயருடையவன்'
என்று சொன்னான்.


1967.
'அரிய, தாம் உவப்ப, உள்ளத்து 
   அன்பினால் அமைந்த காதல் 
தெரிதரக் கொணர்ந்த என்றால்,
   அமிழ்தினும் சீர்த்த அன்றே?
பரிவினின் தழீஇய எண்ணின் 
   பவித்திரம்; எம்மனோர்க்கும் 
உரியன; இனிதின் நாமும் 
   உண்டனெம் அன்றோ?' என்றான்.

அருமையானபொருட்கள்,
மகிழ்ச்சி பொங்க,
உள்ளத்து அன்பை உணர்த்துமாறு 
கொண்டுவந்துத் தருகிறாய் எனில்,
அவை அமிர்தத்தையும் விட சிறந்தவையன்றோ?
அன்பினால் தரப்படும் எதுவும் புனிதமானதே.
எம்போன்ற தவநெறி மேற்கொண்டவர்க்கும் ஏற்புடையதே;
நாமும் இதை ஏற்றுக்கொண்டு உண்டோமே, இல்லையா?
என்றான்.


1985.
'துன்பு உளதுஎனின் அன்றோ 
   சுகம் உளது? அது அன்றிப் 
பின்பு உளது; 'இடை மன்னும் 
   பிரிவு உளது' என, உன்னேல்;
முன்பு உளெம், ஒரு நால்வேம்;
   முடிவு உள்ளது என உன்னா 
அன்பு உள, இனி, நாம் ஓர் 
   ஐவர்கள் உளர் ஆனோம்;


'துன்பம் இருப்பதனால் தானே 
அதைத் தொடர்ந்து இன்பம் இருக்கிறது.
அதனால், இப் பிரிவிற்குப் பின்னர் 
இன்பம் இருக்கு;
இப்பிரிவையே மனதில் எண்ணியிருக்காதே;
முன்னர் இருந்தோம் நாங்கள் நால்வர்;
அன்பு இன்னும் தொடர்ந்திட, உன்னையும் சேர்த்து  
இன்றோடு ஐவர் ஆனோம்'
என்றான் இராமன். 



( தொடரும் )



Tuesday, February 4, 2020

கம்பராமாயணம் 27




தைலம் ஆட்டு படலம்

1857.
'பூண்ட பேர் அன்பினாரைப்
     போக்குவது அரிது; போக்காது
ஈண்டுநின்று ஏகல் பொல்லாது;
     எந்தை! நீ இரதம் இன்னே
தூண்டினை மீள்வது ஆக்கின், சுவட்டை
     ஓர்ந்து என்னை, "அங்கே
மீண்டனன்" என்ன மீள்வர்; இது
     நின்னை வேண்டிற்று' என்றான்.

(தமைப் பின்தொடர்ந்து வந்த நகர மக்கள் இரவில் உறங்குகையில்)
'நம்மீது மிகுந்த அன்பு கொண்ட இவர்களை
திரும்பப் போகச் சொல்வது கடினம்,
இவர்கள் இன்னும் தொடர்ந்து வனத்தினுள் வர,
ஏதேனும் நேரும் துயரம்;
என் தந்தை போன்ற சுமந்திரனே,
நீ இப்பொழுதே தேரைத் திருப்பவேணும்.
தேர் சக்கரம் திரும்பின தடம் பார்த்து
நாம் நாட்டிற்குத் திரும்பிவிட்டோம் 
என்றிவர்கள் எண்ணக்கூடும்.
அதனால் இவர்களும் நாடு திரும்பக்கூடும்;
இந்த உதவியை நீங்கள் செய்யவேணும்'
என்றான் இராமன்.



1898.
நாயகன் பின்னும் தன் தேர்ப் 
   பாகனை நோக்கி, 'நம்பி
சேயனோ? அணியனோ?' என்று
   உரைத்தலும், தேர் வலானும்,
'வேய் உயர்  கானம், தானும்,
   தம்பியும், மிதிலைப் பொன்னும்,
போயினன் என்றான்; என்ற
   போழ்தத்தே ஆவி போனான்.

தசரதன் தன் சாரதி சுமந்திரனைப் பார்த்தான்.
'இராமன் தூரத்தில் வருகிறானா, இல்லை அருகில்
வந்துவிட்டானா?' என்று கேட்டான்.
'மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்துள்ள காட்டுக்குள்
தம்பியோடு, மைதிலையோடு சென்று விட்டான்'
என்று சுமந்திரன் சொன்னான்.
அந்நிமிடமே மன்னன் உயிர் நீத்தான்.


1914.
'செய்யக் கடவ செயற்கு உரிய   
    சிறுவர், ஈண்டையார் அல்லர்;
எய்தக் கடவ பொருள் எய்தாது 
    இகவா' என்ன, இயல்பு எண்ணா 
'மையற் கொடியாள் மகன் ஈண்டு 
    வந்தால் முடித்தும் மற்று, என்னத்
தையற் கடல்நின்று எடுத்து அவனைத் 
    தயிலக் கடலின்தலை உய்த்தான்.

(தசரதன் இறந்தபின்)
செய்தற்குரிய கடமைகளைச் செய்வதற்கு 
உரிமை உள்ள குமாரர்கள் இங்கு இல்லை;
வர வேண்டியது வராது போகாது என்ற 
இயல்பைக் கருத்தில் கொண்டு,
மன மயக்கம் கொண்ட 
கொடியவள் கைகேயி யின் மகன் வந்தபின் 
செய்யவேண்டியவைகளை செய்து முடிப்போம்
என்று எண்ணி, அதுவரை 
பெண்கள் கடலில் கிடந்த தசரதனை 
தயிலக்கடலில் இட்டு பத்திரப்படுத்தினான் வசிஷ்டன்.


கங்கைப் படலம் 

1937.
எதிர்கொடு ஏத்தினர்; இன் இசை பாடினர்;
வெதிர் கொள் கோலினர், ஆடினர்; வீரனை 
கதிர் கொள் தாமரைக் கண்ணனை கண்ணினால்
மதுர வாரி அமுது என மாந்துவார்.

(காட்டினுள் வரும் சீதை, இராமன், இலக்குமணனை)
மூங்கிலால் ஆன தண்டத்தையுடைய முனிவர்கள்
எதிர்கொண்டு வரவேற்றனர்,
துதித்து, இனிய இசை பாடி ஆடினர்;
வீரன் இராமனை, 
ஒளி படைத்த தாமரைக் கண்களை உடையவனை,
பாற்கடல் தந்த அமுதத்தை 
தம் கண்களால் பருகினர்.


1945.
வஞ்சி நாண இடைக்கு, மட நடைக்கு 
அஞ்சி அன்னம் ஒதுங்க, அடி அன்ன 
கஞ்சம் நீரில் ஒளிப்ப, கயல் உக
பஞ்சி மெல் அடிப் பாவையும் ஆடினாள்.

அவள் சிற்றிடைக்கு முன் தோற்று 
வஞ்சிக்கொடி நாணி ஒதுங்க,
அழகிய அவள் நடைக்கு அன்னப்பறவை 
தோற்று பயந்து பின்னடைய 
பாதம் போன்ற தாமரை தண்ணீரில் ஒளிந்துகொள்ள 
கயல் மீன்கள் மறைய 
பஞ்சு போன்ற மென்மையான பாதங்களையுடைய 
சீதை கங்கையில் நீராடினாள்.

( தொடரும் )