Monday, January 13, 2020

கம்பராமாயணம் 8


282.   ஒரு பகல் உலகு எலாம்
                   உதரத்துள் பொதிந்து,
          அரு மறைக்கு உணர்வு அரும்
                  அவனை, அஞ்சனக்
          கரு முகிற் கொழுந்து எழில்
                   காட்டும் சோதியை,
          திரு உறப் பயந்தனள் -  திறம்
                   கொள் கோசலை.

பிரளயத்தின் போது
உலகை எல்லாம் தன் வயிற்றில் வைத்துக் காத்தவனை,
வேதங்களும் விவரிக்க முடியாத அப் பரம்பொருளை,
கரு மேகத்தின் அழகைக் காட்டும் ஒளி வடிவாய்த் திகழ்பவனை
உலகம் சிறக்க வேண்டி அவதரிப்பவனை
கோசலை பெற்றெடுத்தாள்.


286.  ஆடினர், அரம்பையர்; அமுத ஏழ் இசை
          பாடினர் கின்னரர்; துவைத்த பல் இயம்;
          'வீடினர் அரக்கர்' என்று உவக்கும் விம்மலால்
          ஓடினர், உலாவினர், உம்பா முற்றுமே;

ரம்பை போன்ற தேவ மங்கையர் ஆடிக் கொண்டாடினர்;
அமுதம் போன்ற ஏழு வகை இசை மீட்டிப் பாடினர் ;
பல்வேறு வாத்தியங்கள் முழங்கி ஓசை எழுப்பி மகிழ்ந்தனர்;
'அரக்கர் அழிந்தனர்' என்று ஆடி வான வீதியெங்கும் ஓடித் திரிந்தனர்;


289.  'இறை தவிர்ந்திடுக, பார் யாண்டு ஓர் ஏழ்; நிதி
          நிறைதரு சாலை தாள் நீக்கி, யாவையும்
          முறை கெட, வறியவர் முகந்து கொள்க' எனா
          அறை பறை' என்றனன் - அரசர் கோமகன்.

ஏழாண்டுகள் சிற்றரசர்கள் திறை செலுத்துவதைத் தவிர்க்க;
செல்வம் சேர்த்து வைக்கப்பட்டுள்ள அறையின் தாழ்பாள் அகற்றுக;
வரைமுறை இல்லாது வறியவர் வேண்டிய அளவு அள்ளிக் கொள்க;
இதை உடனே பறை அடித்து தெரியப்படுத்துக; 
   - என்று மன்னர் மன்னன் அறிவித்தான்;


296. கரா மலைய, தளர் கைக் கரி எய்த்தே,
        'அரா-அணையில் துயில்வோய்!' என, அந் நாள்,
        விராவி, அளித்தருள் மெய்ப்பொருளுக்கே,
        'இராமன்' எனப் பெயர் ஈந்தனன் அன்றே.

ஒரு முதலை காலைக் கவ்வி வருத்த,
சோர்வுற்ற யானை கஜேந்திரன்,
பாம்புப் படுக்கையில் படுத்திருந்தவனை அழைக்க
அக்கணமே விரைந்து வந்து அருள் செய்த அந்த மெய்ப்பொருளுக்கு
'இராமன்' என்று பெயர் சூட்டினான்.

308.  வீரனும், இளைஞரும் வெறி பொழில்களின்வாய்
          ஈரமொடு உறைதரு முனிவரரிடை போய்,
          சோர் பொழுது, அணிநகர் துறுகுவர்; எதிர்வார்,
          கார் வர அலர் பயிர் பொருவுவர், களியால்.

மாவீரன் ராமனும் அவர் தம்பியரும்
மணம் வீசும் சோலைகளைக் கண்டு களிப்பர்;
வந்தாரோடு அன்போடு உரையாடும்
முனிவரிகளிடம் பேசி மகிழ்வர்;
மாலையில் அரண்மனை வாயில் வந்தடைவர்;
வரும்போதும், போகும்போதும் நால்வரையும் நோக்கும் நகரத்தார்
'மழை வர மகிழும் பயிர் போல்' ஆனந்தம் கொள்வர்;

( தொடரும் )

Sunday, January 12, 2020

கம்பராமாயணம் 7



207. அருள் தரும் கமலக்கண்ணன்
           அருள்முறை, அலர் உளோனும்
        இருள் தரும் மிடற்றினோனும்,
            அமரரும் இனையர் ஆகி
        மருள் தரும் வனத்தில், மண்ணில்,
             வானரர் ஆகி வந்தார்;
         பொருள்தரும் இருவர் தம்தம்
             உறைவிடம் சென்றுபுக்கார்.

கருணையே வடிவான
தாமரைக் கண்ணன் திட்டப்படி,
பிரம்மனும், சிவனும், மற்ற தேவர்களும்
சொன்ன முறைப்படி,
இருண்ட வனங்களிலும், நிலத்திலும்
வானரர்களாய் வடிவெடுத்தார்கள்,
பிரம்மனும் சிவனும் தங்கள் தங்கள்
உறைவிடம் போய்ச்சேர்ந்தார்கள்.

208.   ஈது, முன் நிகழ்ந்த வண்ணம், என, முனி இதயத்து எண்ணி,
          'மாதிரம் பொருத திண் தோள் மன்ன ! நீ வருத்தல்; ஏழ் - ஏழ் 
          பூதலம் முழுதும் தாங்கும் புதல்வரை அளிக்கும் வேள்வி 
          தீது அற முயலின், ஐய! சிந்தைநோய் தீரும் என்றான்.

இவ்வாறு முன்னம் மால் சொன்னதை 
இதயத்துள் எண்ணிப்பார்த்தபடியே, வசிட்ட முனி,
'வலிய தோள்களை உடைய வேந்தே, 
நீ வருந்த வேண்டா;
ஈரேழு உலகையும் காக்கும் 
புத்திரரைத் தரவல்ல வேள்வியைச் செய்,
குறையேதுமின்றி செய்,
உன் மனத்துயர் விலகும், இது மெய்' என்றான்.

254.  அடி குரல் முரசு அதிர் அயோத்தி மா நகர்  
         முடியுடை வேந்தன், அம் முனிவனோடும், ஓர் 
         கடிகையின் அடைந்தனன் - கமல வான் முக 
         வடிவுடை மடந்தையர் வாழ்த்து எடுப்பவே,

முரசு ஒலிக்க, தாமரை 
முகத்தையொத்த பெண்கள் வாழ்த்து பாட,
மணிமுடி தரித்த மன்னன் தசரதன்,
கலைக்கோட்டு முனிவனோடு 
ஒரு நாழிகையில் 
மாநகர் அயோத்தி வந்தடைந்தான்.


261. என்றலும், 'அரச! நீ இரங்கல்; இவ் உலகு 
        ஒன்றுமோ? உலகம் ஈர்-ஏழும் ஓம்பிடும்
        வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம்
        இன்று நீ இயற்றுதற்கு எழுக, ஈண்டு!' என்றான்.

தசரதன் தன் கோரிக்கையைச் சொன்னதும்,
'அரசன் வருந்தாதே, 
இவ்வுலகு மட்டுமின்றி ஈரேழு உலகையும் 
பாதுகாத்து ஆளும்  
வல்லமை பொருந்திய மைந்தர்களை 
கொடுத்தருளக்கூடிய வேள்வி ஒன்றை 
இன்றே செய், எழு' என்றுரைத்தான்.

267.   மா முனி அருள் வழி, மன்னர் மன்னவன் 
          தூம மென் கரி குழல் தொண்டைத் தூய வாய்க் 
          காமரு கோசலை கரத்தில், ஓர் பகிர்,
          தாமன் உற அளித்தனன், சங்கம் ஆர்த்து எழ.

மாமுனி கலைக்கோட்டு முனிவன் சொன்னபடி,
(வேள்வியின் பிரசாத அமுதத்தை)
அரசனுக்கரசன் தசரதன் 
சுருண்ட கூந்தல், சிவந்த வாய் உடைய 
அழகிய கோசலையின் கைகளில், 
சங்குகள் முழங்க, 
ஒரு பாகத்தை தந்தருளினான்.

 
( தொடரும் )


Friday, January 10, 2020

கம்பராமாயணம் 6


அரசியற் படலம்

171.  தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்
         சேய் ஒக்கும், முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
         நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும், நுணங்கு கேள்வி
         ஆயப் புகுங்கால், அறிவு ஒக்கும் - எவர்க்கும், அன்னான்.

மன்னர்க்கெல்லாம் மன்னனான தசரதன்
   - அன்பு செலுத்துவதில் அன்னை போன்றவன்
   - நன்மை செய்வதையே தன் தவப்பயன் என்று  கருதுபவன்
   - இறுதிச் சடங்குகளை முன்னின்று செய்வதால் மகன் போன்றவன்
   - நோய் வந்தால், அதைப் போக்கும் மருந்தாவான்
   - நுணுக்கமாய் ஆராய்ந்து பொருள் காணும் அறிவைக் கொண்டவன்

திரு அவதாரப் படலம்

180.  ஆயவன், ஒரு பகல், அயனையே நிகர் 
         தூய மா முனிவனைத் தொழுது, தொல் குலத் 
         தாயாரும் தந்தையும் தவமும் அன்பினால் 
         மேய வான் கடவுளும் பிறவும் வேறும் நீ.


தசரதன் ஒருநாள், பிரம்மனுக்கு நிகரான 
தூய முனிவன் வசிட்டனை வணங்கி, எம் குலத்தின் 
தாய் தந்தை தவப்பயன் 
கருணை பொழியும் கடவுள் 
எனக்கெல்லாமே தாங்கள் தான் என்றியம்பினான்.


182.   அறுபதினாயிரம் ஆண்டும் மாண்டு உற,
          உறு பகை ஒடுக்கி, இவ் உலகை ஓம்பினேன்;
          பிறிது ஒரு குறை இலை; என் பின் வையகம் 
          மறுகுவது என்பது ஓர் மறுக்கம் உண்டுஅரோ.

வசிட்ட, 
அறுபதினாயிரம் ஆண்டுகள் ஆண்டேன்,
பகைவர்களை ஒடுக்கிப் பணி புரிந்தேன்,
குறை ஏதும் இல்லாது நாட்டு மக்களைக் காத்தேன்,
என் ஆட்சிக்குப் பின், ஏதும் குழப்பம் நேரும் 
என்று மட்டும் கலக்கம் கொண்டேன்;


200.   மசரதம் அனையவர் வரமும் வாழ்வும் ஓர் 
          நிசரத கணைகளால் நீறுசெய்ய, யாம்,
          கச ரத துரக மாக் கடல்கொள் காவலன் 
          தசரதன், மதலையாய் வருதும் தாரணி.

கானல் நீர் போன்றவர்களாகிய அரக்கர்கள் வாழ்வை 
எம் குறி தவறா அம்பினால் அழிப்பதற்கென்று 
யாமே, யானை குதிரை தேர், கடல் போன்ற படைகளுக்கு 
தலைவனான தசரதனின் தனயனாய் அவதரிப்போம் 
(என்று முன்னம் திருமால் இயம்பியது 
வசிட்டருக்கு நினைவுக்கு வந்தது)


( தொடரும் )

Thursday, January 9, 2020

கம்பராமாயணம் 5



நகரப் படலம் 

93.   செவ்விய மதுரம் சேர்ந்த நல் பொருளின்
             சீரிய கூரிய தீம் சொல்
        வவ்விய கவிஞர் அனைவரும், வடநூல்
             முனிவரும், புகழ்ந்தது; வரம்பு இல்
        எவ் உலகத்தோர் யாவரும், தவம் செய்து
             ஏறுவான் ஆதரிக்கின்ற
        அவ் உலகத்தோர், இழிவதற்கு அருத்தி
             புரிகின்றது - அயோத்தி மா நகரம்.


அழகான இனிமையான
சிறந்த நுட்பமான
சொற்களைளைக் கொண்டு
பல கவிஞர்களும், வால்மீகியும்
பாடிப் புகழ்ந்துரைத்த நகரம்,
வேறு பல உலகத்தில்,
வேறு ஊரில், நாட்டில் வசிப்போர்
தவம் செய்து, வாழ விரும்பும் நகரம்,
விண்ணுலகத்தாரும்
மண்ணில் இறங்கி வந்து வசிக்க ஏற்ற நகரம்,
எனக்கும் மிகவும் பிரியமான நகரம்
-  இந்த அயோத்தி மாநகரம்.

97.  'புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்'
            என்னும் ஈது அரு மறைப் பொருளே;
       மண்ணிடை யாவர் இராகவன் அன்றி
             மா தவம் அறத்தோடும் வளர்த்தார்?
       எண் அருங் குணத்தின் அவன், இனிது இருந்து, இல்
             ஏழ் உலகு ஆள் இடம் என்றால்,
       ஒண்ணுமோ, இதனின் வேறு ஒரு போகம்
            உறைவு இடம் உண்டு என உரைத்தல்?

புண்ணியம் செய்தார் சொர்கம் அடைவார்
இது வேதம் உரைக்கும் கருத்தாம்.
இராமபிரான் அன்றி வேறார்
அறத்துடன் புண்ணியம் செய்தார் ?
இவ்வாறு எல்லா நற்குணங்களும் கொண்ட
இந்த இராமபிரான் இருந்து
ஏழுலகத்தையும் ஆள ஏற்ற இடம் அயோத்தி என்றால்,
இதனின் நல்ல இடம்
இன்னொன்று உண்டென்று உரைக்க முடியுமா என்ன?

131.   பொன் திணி மண்டபம் அல்ல; பூத்தொடர் 
          மன்றுகள்; அல்லன மாட மாளிகை;
          குன்றுகள் அல்லன மணி செய் குட்டிமம்;
          முன்றில்கள் அல்லன முத்தின் பந்தரே.

நகரம் எங்கும் 
பொன்னால் கட்டிய மண்டபம், 
அப்படியல்லாதவை 
மலர்களால் அலங்கரிக்கப்பட்டவையாம் 
பலர் கூடி  வாழும் பொது மன்றங்கள் 
அப்படியல்லாதவை 
மேல் மாடியோடு அமையப்பெற்ற மாளிகைகள் 
இரத்தினங்கள் கொண்டமைக்கப்பட்ட முற்றங்கள் 
அப்படியல்லாதவை 
முத்துப்பந்தல்கள்.

( தொடரும் )


Wednesday, January 8, 2020

கம்பராமாயணம் 4


77. காரொடு நிகர்வன, கடி பொழில்; கழனிப்
      போரொடு நிகர்வன, புணர்மலை; அணை சூழ்
      நீரோடு நிகர்வன, நிறை கடல்; நிதி சால்
      ஊரோடு நிகர்வன, இமையவர் உலகம்.

கோசல நாட்டில் -
பூஞ்சோலைகள் மேகங்களுக்கு ஒப்பாகும்
நெற்போர் கழனிகள் மலைகளுக்கு ஒப்பாகும்
அணை சூழ்ந்த நீர்நிலைகள் கடலுக்கு ஒப்பாகும்
செல்வ வளம் நிறைந்த ஊர்கள் தேவலோகத்துக்கு ஒப்பாகும்.


84.  வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
       திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
       உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
       வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்;

கோசல நாட்டில் - 
வறுமையே இல்லாததால், தானம் தர, பெற வழியில்லை 
போர் புரிய எதிரிகள் இல்லாததால், உடலுறுதியை நிரூபிக்க வாய்ப்பில்லை;
யாரும் பொய் உரைப்பதில்லை என்பதால் உண்மை என்று தனியே ஏதும் இல்லை;
அறியாமை இல்லவே இல்லை, கேள்வி எழுப்பி எல்லாரும் அறிவை பெருக்கிக்கொள்வதால்;


87.  கூறு பாடலும், குழலின் பாடலும்,
       வேறு வேறு நின்று இசைக்கும் வீதிவாய்,
       'ஆறும் ஆறும் வந்து எதிர்த்த ஆம்' என,
       சாறும் வேள்வியும் தலைமயங்குமே.

இரு வேறு திசையிலிருந்து வரும் ஆறுகள் 
ஒன்றோடொன்று  கலந்திடுவது போல்,
இசை வல்லுனரின் பாடலும்,
புல்லாங்குழலின் பாடலும்,
வேறு வேறு விழாவில் ஒலிக்க 
மக்கள் கூட்டம் ஒன்றுகூடி மகிழ்ந்தனவே.

( தொடரும் )

Tuesday, January 7, 2020

கம்பராமாயணம் 3



35.   தண்டலை மயில்கள் ஆட
           தாமரை விளக்கம் தாங்க
        கொண்டல்கள் முழவின் ஏங்க,
           குவளை கண் விழித்து நோக்க,
        தெண் திரை எழினி காட்ட, தேம்
           பிழி மகர யாழின்
        வண்டுகள் இனிது பாட
           மருதம் வீற்றிருக்கும் மாதோ.


மயில்கள் ஆடுது 
தாமரை விளக்கு ஏந்தி நிற்குது 
மேகங்கள் மத்தள சத்தம் எழுப்புது 
குவளை மலர்கள் கண் விழித்துப் பார்க்குது 
நீரில் அலைகள் திரைச்சீலையாய்த் தெரியுது 
மகர யாழிலிருந்து தேனிசை ஒலிக்குது 
வண்டுகள் இனிமையாய்ப் பாடுது 
இவை எல்லாவற்றுமிடையில் 
மருத நாயகி வீற்றிருப்பதாய்த் தோன்றுது 

37.    நீரிடை உறங்கும் சங்கம்; 
            நிழலிடை உறங்கும் மேதி; 
        தாரிடை உறங்கும் வண்டு; 
           தாமரை உறங்கும் செய்யாள்;
        தூரிடை உறங்கும் ஆமை;
           துறையிடை உறங்கும் இப்பி;
        போரிடை உறங்கும் அன்னம்;
           பொழிலிடை உறங்கும் தோகை.

நீரில் மிதந்தபடி உறங்கும் சங்கு
மர நிழலில் உறங்கும் எருமை
மலர் மாலைகளில் உறங்கும் வண்டு 
தாமரை மேல் உறங்கும் திருமகள் 
சேற்றில் உறங்கும் ஆமை 
நீர் நிலைகளில் உறங்கும் சிப்பி 
நெற்போர்களில் உறங்கும் அன்னப்பறவை;
சோலைகளில் உறங்கும் மயில்;

(எந்தத் தொந்தரவுமின்றி 
எல்லாம் உறங்க,
ஏதுவான கோசலநாடு)

69.    கலம் சுரக்கும், நிதியம்; கணக்கு இலா
         நிலம் சுரக்கும், நிறை வளம்; நல் மணி
         பிலம் சுரக்கும்; பெறுவதற்கு அரிய தம்
         குலம் சுரக்கும், ஒழுக்கம் - குடிக்கு எலாம்.

கோசல நாட்டு மக்கட்கு 
கப்பல் வாணிபம் காசு ஈட்டித் தரும்,
கணக்கில்லா செல்வம் நிலம் தரும்,
நல்ல வகை ரத்தினம் சுரங்கம் தரும்,
பெறுதற்கு அரிய ஒழுக்கம் குலம் தரும்;

( தொடரும் )


Monday, January 6, 2020

கம்பராமாயணம் 2


பால காண்டம்

ஆற்றுப் படலம்


18.
     மணியும், பொன்னும், மயில் தழைப் பீலியும்,
     அணியும் ஆனை வெண்கோடும், அகிலும், தன்
     இணை இல் ஆரமும், இன்ன கொண்டு ஏகலான்,
     வணிக மாக்களை ஒத்தது - அவ் வாரியே.

முத்து, மணி, மயிலிறகு, யானைத் தந்தங்கள்,
தனக்கு நிகரில்லா சந்தன மரம்
இவையனைத்தையும் வாரிக்கொண்டு வருது சரயு நதியின் வெள்ளம் ஆகவே இது வணிகர்க்கு ஒப்பாகும்.

20.
     மலை எடுத்து, மரங்கள் பறித்து, மாடு
     இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான்,
     அலை கடல்-தலை அன்று அணை வேண்டிய
     நிலையுடைக் கவி நீத்தம் - அந் நீத்தமே.

மலைகளைப் பெயர்த்துக்கொண்டும்,
மரம் செடி கொடி களை இழுத்துக்கொண்டும்
வரும் சரயு நதியின் வெள்ளம்
அலை நிறைந்த கடலிடையே
அணை கட்டத் துணிந்த
வானரக் கூட்டத்திற்கு ஒப்பும்.

நாட்டுப் படலம்

33.
     வரம்பு எலாம் முத்தம்; தத்தும்
        மடை எலாம் பணிலம்; மா  நீர்க்
     குரம்பு எலாம் செம் பொன்; மேதிக்
        குழி எலாம் கழுநீர்க் கொள்ளை;
     பரம்பு எலாம் பவளம்; சாலிப்
        பரப்பு எலாம் அன்னம்; பாங்கர்க்
     கரம்பு எலாம் செந் தேன்; சந்தக்
        கா எலாம் களி வந்து வண்டு ஈட்டம்.

வயல் வரப்புகளில் முத்துக்கள்
தண்ணீர் பாயும் மடைகளில் மிதக்கும் சங்குகள்;
நீர்ப்பெருக்கின் இடையில் கிடக்கும் செம்பொன்;
மலர்கள், பவளங்கள் நிறைந்து கிடைக்கும் இடங்கள்
நெற்பயிர்ப் பரப்புகளில் அன்னங்கள்;
அருகில் பயிர் செய்யப்படாத பரப்புகளில் செந்தேன்;
சோலைகளில் மது உண்டு மயக்கத்தில் திரியும் வண்டினங்கள்;
(இத்தகையது கோசல நாடு)

(தொடரும்)