Sunday, February 4, 2018

மேகா 2




2

காலையில் எப்பொழுதும் போல் ஆறு மணிக்கு எழுந்து காஃபி கலந்து தயாராய் வைத்து விட்டு, யோகா எக்ஸர்சைஸ் என்று என் பணிகளைச் செய்தேன். ஏழு மணிக்கு குட் மார்னிங் சொல்லிக்கொண்டே மேகா தன் அறையிலிருந்து வெளியில் வந்தாள், குளித்திருந்தாள், இன்னும் அழகாய்த் தெரிந்தாள்; கையில் காஃபி தந்து குளிக்கச்சென்றேன். நான் வரும்போது இருவருக்கும் ப்ரட் டோஸ்ட் செய்து தயாராய் வைத்திருந்தாள்.

'உங்களைக் கேட்காம நானே பண்ணிட்டே, உங்களுக்குப் பிடிக்குமா இல்லையான்னு கூட தெரியாது'
'மேகா தேங்க் யூ, அருமையா இருக்கு, நன்றி, ஆபிஸ் கிட்ட எல்லாம் கிடைக்கும், இன் பாஃக்ட்  பணம் இருக்கிறவங்களுக்கு எப்போவுமே எல்லாமே கிடைக்கும்'

சிரித்துக் கொண்டே சொன்னேன், சிரித்தாள் மேகா, எனக்கு மிகவும் பிடித்திருந்தது;

என் காரிலே இருவரும் அலுவலகம் வந்தோம். மேகா யாரைப் பார்க்கவேண்டுமோ அவரிடம் அழைத்துச்சென்று அறிமுகம் செய்துவைத்தேன். மதியஉணவிற்கு ஒரு மணிக்குச் செல்வோம் என்று சொல்லிவிட்டு வந்தேன். என் எண்ணம் சிந்தனை எல்லாவற்றிலும் மேகா நிறைந்திருந்தாள். இதுதான் காதல் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் நான் அதை ஒத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ தயாராயில்லை. என்னவோ என்னைத் தடுக்கிறது, வாழ்க்கையை அடகு வைக்க மனம் மறுக்கிறது. எத்தனை பேர் எத்தனை தலைமுறை கல்யாணம் செய்துகொண்டு வாழவில்லையா என்று பலபேர் என்னைக் கேட்டபொழுதிலும் ... நான் தயாராயில்லை என்பதில் உறுதியாகவே இன்னும் இருந்தேன். இன்னொரு காரணம் நான் மேகா போன்று பல பெண்களோடு பழகியிருக்கிறேன். ஏன் என் வீட்டிற்கு சமைக்கவரும் பெண் கூட, ஏழைதான், ஆனால்  நன்றாய் அழகாய் சிக்கென்று, நான் அவளை அந்தக் கண்ணோட்டத்திலெல்லாம் பார்த்ததில்லை, நம்புங்கள்.

ஒரு ஐந்து நாள் மேகா என் வீட்டில் தங்கினாள். என்னுள் என்னவோ ஒரு ... அது என்னென்று தெரியவில்லை, நன்றாய் இருந்தது, அமைதி .... அதே சமயம் உள்ளே ஒரு சத்தம், கூச்சல் .... காதலில்லை என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேன், பொய் பொய் என்று உள்ளே எழுந்தச் சத்தத்தை புறக்கணித்தேன்.

'இன்னிக்கி வேலை முடிஞ்சிருச்சி, நாளைக்குக் கிளம்பணும்' அலுவலகத்திலிருந்து மாலையில் காரில் வீடு திரும்பும்போது சொன்னாள்.
'இன்னும் ரெண்டு நாள் எக்ஸ்டண்ட் பண்ணவேண்டியதுதானே ?'
'ஆல்ரெடி இன்னிக்கு எக்ஸ்டண்ட் பண்ணித்தான் ஸ்டே பண்ணியிருக்கே'
'எந்த ப்லைட் நாளைக்கு ?'
'இனிமேதான் புக் பண்ணனும்'

மேகாவிற்கு ஒரு ப்லைட் புக் செய்துக் கொடுத்து, இரவில் தூக்கமில்லாது விழித்திருந்து, பேசி சிரித்து, அடுத்த நாள் கொஞ்சம் ஷாப்பிங் சென்று, மேகாவிற்கு சில பரிசுப்பொருட்கள் வாங்கித்தந்து, காதல் இல்லையென்றால் இப்படி மனது துடிக்கத்தேவையில்லையே என்று ஒரு எண்ணம் ... வேண்டாம் மற ... நீ பார்க்காததா ... என்று ஒரு எண்ணம்; எங்கிருந்து அவளை சிலநாட்கள் முன் பிக்கப் செய்தேனோ, எங்கே அவளை முதல்முறை பார்த்தேனே அதே இடத்தில் மேகாவை இறங்கிவிட்டேன்.

'தேங்க்ஸ், சுந்தரை மறக்கவேமுடியாது'
என்னடி செய்தாய் என்னை .... மனதுள் தோன்றியக் கவிதையை மடக்கி உள்ளேயே அழுத்தி வைத்தேன்.
'ஐ மிஸ் யூ மேகா' மெல்ல கட்டிப்பிடித்துக்கொண்டேன்.
'ஐ டூ மிஸ் யூ சுந்தர்'
'மறுபடியும் வரணும், என் வீடு உனக்காகத் திறந்தே இருக்கும்'
'கண்டிப்பா வரேன்'

கை குலுக்கி விட்டு உள்ளே சென்றாள். காத்திருந்தேன். அவள் ப்லைட் ஏறும் வரை காத்திருந்தேன், 'ப்லைட் கிளம்பிடுச்சி' என்று மெசேஜ் செய்தாள், ஹாப்பி ஜெர்னி பதில் அனுப்பிவிட்டு திரும்பிப் போக மனதின்றி அந்த இடத்திலேயே ஒரு அரைமணிநேரம் காத்திருந்தேன்.

வீட்டிற்கு திரும்பி வந்து மேகாவின் அறையிலேயே, அவள் படுத்திருந்த கட்டிலில் படுத்துக்கொண்டேன், சாப்பாடு பசி எதையும் பொருட்படுத்தாது என்னவோ இழந்த மாதிரி படுத்துக்கிடந்தேன். 'மின்னலே நீ வந்ததேனடி ?' பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. சென்னை போய் சேர்ந்தவுடன் மேகா மெசேஜ் அனுப்பியிருந்தாள். காத்திருந்தேனே ... இதற்காகத்தானே … மனது கதறினாலும் ஹாப்பி என்று மட்டும் பதில் அனுப்பிவிட்டுத் தூங்கிவிட்டேன்.

அடுத்த நாள், எப்பொழுதும்போல் எழுந்துவிட்டாலும் மனது என்னவோ சுறுசுறுப்பாகவேயில்லை. காஃபி குடித்து, பிரட் டோஸ்ட்  செய்தேன். ஆனால் அவள் செய்வதுபோல் சாஃப்டாய் இல்லை. டோஸ்ட் செய்கையில் இன்னும் என்னவோ செய்கிறாள், அடுத்தமுறை கேட்கவேண்டும் என்று எண்ணுகையிலேயே ... 'அடுத்தமுறையா ? அப்போ மறுபடியும் வருவாளா ? ' என்றெண்ணுள் கேள்வி, 'வருவாள்' என்று சொல்லிக்கொண்டேன். அதே சமயம் 'அவள் வருவாளா' என்று என் ஆடியோ பிளேயர் பாடிக் கேட்டது. கவிதைக்கனல் மனதுள் தோன்றியது. அலுவலகம் செல்லும் வழியில் அந்தக் கனலை ஊதிஊதி காதல் தீ ஆக்கினேன்.

இப்பொழுதெல்லாம் எண்ணம் எதுவாயினும்
அது பறந்து வந்துப் படுத்துக் கொள்கிறது அவளிடம்.
எப்படியோ என் உறக்கத்தினுள் புகுந்து
கனவுகளுக்கும் வர்ணமடித்து விடுகிறாள்.
அவள் பெயரைச் சொன்னாலும் கேட்டாலும்
ஒரு பரவசம் பிறக்கிறது என்னுள்.
*
காத்திருக்கையில்
கருமேகத்தைக் காண்கையில்
மழையில் நனைகையில்
எல்லா சமயத்திலும் கவிதை சுரக்கிறது.
*
மென்மையான பாடல்களையே மனம் விரும்புகிறது.
புவியீர்ப்பு விசையில் புரியாதது அவள் விழியீர்ப்பு விசையில் புரிகிறது.
காளையென் கர்வத்தை ஆற்றினாளே தன் வாஞ்சையில்
காதலின் தீபமொன்றை ஏற்றினாளே என் நெஞ்சினில்
*

அலுவலகத்தில் சோம்பலாய் அமர்ந்திருந்தேன். மேகா அலுவலகம் வந்து சேர்ந்ததும் சேட் செய்து நலம் விசாரித்தேன். கமிட்மென்ட் எடுத்துக்கொள்ளும் தைரியம் இல்லாதப்பொழுது மேலும் மேலும் நெருங்கிப் பழகுவது எதற்கு என்று நினைத்து ஒதுங்கியே இருந்தேன். அவளுக்குள்ளும் ஒரு எண்ணம் விதைத்துவிட்டு அது செடியாய் மரமாய் வளரவிட்டு பின்னொரு சமயம் புறம்தள்ளுவதில் என்ன ப்ரயோஜனம் என்று எண்ணினேன். கொஞ்சம் கொஞ்சமாய் மேகா என்னும் ஒரு மாயப்புகையிலிருந்து மீண்டு வரத் துவங்கினேன், மேகா தொலைபேசியில் என்னை அழைக்கும் வரையில்; சரியாய் ஒரு மாதம் இருக்கும்.

[ மேகா ... இன்னும் வருவாள்  ]

Thursday, February 1, 2018

மேகா 1





1

ஒரு கவிதையோடு கதையை ஆரம்பிக்கக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை. அப்படி இருந்தால்தான் என்ன, சட்டங்களை மாற்றுவோமே.

கனவு கலையும்
பொழுது விடியும்
பறவைகள் படபடவென்று சிறகடித்துப்
பறந்துத் திரியும்
அலுவலகம் வந்தபின்
'இன்றென்ன எழுத?' என்றெண்ணம் உதிக்கும்
எதைச்சொன்னால் நீ ரசித்துச் சிரிப்பாய்
என்று யோசிக்கத் தோன்றும்
கண்மூட, மேகம் நீர்வீழ்ச்சி மலர்ச்சோலை
இவையெல்லாம் வந்து போகும்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
அவ்வமயம்
மனக்கண்ணுள் உன் முகம் தெரியும்

யாரவளோ, அந்த முகத்திற்காகக் காத்திருக்கும் நான், சுந்தர், 35 வயது ஆடவன். சிலபல காரணங்களுக்காக திருமணம் செய்துகொள்ளவில்லை. மும்பையில், சொந்த வீடு, நல்ல வேலை, சம்பளம், கார் என்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. திருமணம் என்னைத் தேடியபோது நான் விலகி விலகிச் சென்றேன். இப்பொழுது திருமணம் செய்து கொள்ளாததற்காக நான் ஒன்றும் வருத்தப்படவில்லை, ஏங்கவில்லை. கல்யாணம் செய்துகொண்டு கஷ்டப்படணும் என்பதொன்றும் கட்டாயமில்லையே. அப்போ கல்யாணம் செய்துகொண்டவர்களெல்லாம் கஷ்டப்படறாங்களா என்று கேட்கக்கூடாது. நான் செய்துகொள்ளவில்லை, ஓடும்வரை ஓடட்டும் என்று விட்டுவிட்டேன்; வாழ்க்கை அழைத்துச்செல்லும் வழியில் செல்கிறேன், எந்த எதிர்பார்ப்பும் இன்றி.

ஒரு சனிக்கிழமை, இரண்டு நாளாய் என் வீட்டில் தங்கியிருந்த நண்பனை விமானநிலையத்தில் இறக்கிவிட்டுக் கிளம்ப எத்தனிக்கையில் தூரத்தில் ஒரு இளம்பெண் நின்றுகொண்டிருந்தாள். அவளை நான் கவனிக்க இரண்டு காரணம்; ஒன்று திடீரென்று தலையில் தட்டிக் கொண்டாள், மொபைலில் எதையோ பார்த்து, வெறுத்து ' சே ' என்று சொல்லியிருக்கவேண்டும். இப்போ என்ன செய்வது என்று தெரியாது ஒரு குழப்பத்தில் அவள் இருப்பது எனக்குப் புரிந்தது. யாரிடமோ போனில் பேசத் தொடர்புகொண்டாள், அழைப்பு துண்டிக்கப்பட்டிருக்கவேண்டும், கோபத்தில் தரையை உதைத்தாள். இரண்டாவது காரணம், அவள் நான் வேலை செய்யும் அதே கம்பெனியின் ஜெர்கின் அணிந்திருந்தாள்.

அழகாய்த்தான் இருந்தாள், சிற்றிடை, சுடிதார், சின்ன ட்ராலி; கூடவேயொரு ஹாண்ட் பேக். பூ சூடி இருந்தாள், தமிழ்ப்பெண்ணோ ? சென்னை விமானத்திற்குத் தான் என் நண்பனை இறக்கிவிடவந்தேன். சென்னையிலிருந்து வந்த  அந்த விமானத்திலிருந்து இறங்கியிருப்பாளோ ?

அவளைத் தாண்டி வண்டியை நிறுத்தி இறங்கி அவளை நோக்கி நடந்தேன். மறக்காமல் கம்பெனி பெயர் பதிந்த ஜெர்கினை அணிந்துகொண்டேன், காரிலிருந்த ஐடி கார்டை கழுத்தில் மாட்டிக்கொண்டேன்.

'ஹலோவ், தமிழா நீங்க ?' நெற்றியில் பொட்டு இருந்ததையும் பார்த்துத் தமிழிலேயே கேட்டேன்.
பேசத் தயங்கினாள்.
கம்பெனி ஐடி கார்டையும் ஜாக்கெட்டையும் காட்டினேன், மெல்லச் சிரித்தாள்.

'சுந்தர்' கை நீட்டினேன்.
'மேகா' மெல்ல கை குலுக்கினாள்.
'சென்னை ஆபிஸ்ல ஒர்க் பண்றீங்களா ? யாரையோ தேடுற மாதிரி இருக்கு ?'
'இங்கே ஒரு சின்ன அசைன்மெண்ட், ப்ரெண்டு ரூம்ல தங்கிக்கலாம்னு வந்துட்டே, அவ போனை எடுக்கமாட்டேங்குறா, அட்ரஸ் தெரியாது'
இன்னும் கொஞ்சம் பேசினால் அழுதுவிடுவாள் போலிருந்தது.  என் காருக்கு அழைத்துச்சென்றேன்.

'நீங்க தங்கறதுக்கு பாதுகாப்பான இடம் வேண்டும், அவ்ளோதானே ?'
'யெஸ் பட் ' பேசிக்கொண்டே மீண்டும் தோழிக்கு போன் அடித்தாள், போன் எடுக்கப்படவில்லை. நல்லவேளை என்று மனதுள் நினைத்துக்கொண்டேன்.
'உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா, என்னோட நீங்க தங்கலாம்'
'இல்லே, அது வந்து' புதியவர்களுக்கே உள்ள அதே தயக்கத்துடன் பேசினாள்.
கம்பெனியின் விசிட்டிங் கார்ட் 3 எடுத்து அவளிடம் கொடுத்தேன்.
'இதுல போட்டோ, காண்டாக்ட் நம்பர், ஈமெயில் எல்லாம் இருக்கு, பயப்பட வேண்டாம், தைரியமா வாங்க, இன்னிக்கு ஸ்டே பண்ணுங்க, நாளை பாத்தி நாளை பார்த்துப்போம், என்ன சொல்றீங்க .... மேகா' ஸ்வீட் நேம் என்று வாய்வரை வந்த வார்த்தையை விழுங்கிக்கொண்டேன்.

மேகா என் கார்டை தன் பையில் வைத்துக்கொண்டாள். அதையே நான் சம்மதத்திற்கு அறிகுறியென எடுத்துக்கொண்டு வண்டியைக் கிளப்ப, 'எனக்கெனவே ஏற்கனவே … பிறந்தவள் இவளோ' பாடல் காரில் ஒலிக்க எனக்கது நல்ல சகுனமாகவேத் தோன்றியபோதிலும், அவசரஅவசரமாய் அடுத்தப்பாடலை மாற்றினேன். அடுத்தது என்ன கந்தசஷ்டி கவசமா ஒலிக்கும், அதுவும் காதல் பாட்டுதான், 'வேறென்ன வேறென்ன வேண்டும்' ஒலித்தது. எப்படியும் ஒரு அரைமணி நேரம் ஆகும். பேசாதே பயணம் செய்தாள். அவள் ப்ராஜக்ட் பற்றி மட்டும் கொஞ்சம் விசாரித்துக்கொண்டேன். நான் வேலை செய்யும் அதே பில்டிங் தான், வேறு தளத்தில் இயங்கும் ப்ராஜக்ட்.

வீடு வந்து சேர்ந்தோம். மேகாவிற்கு அவள் அறையைக் காண்பித்தேன். புது போர்வை தலையணை உறை எடுத்துத்தந்தேன். சாப்பிட வாங்க என்று சொல்லிவிட்டு, ஒரு ஐந்து சப்பாத்தி தயார் செய்தேன். சமையலுக்கு என்று ஒரு பெண் தினம் வந்து எனக்கு சமைத்து வைத்துப்போவாள். எனக்கும் சுமாராக சமைக்கத்தெரியும், அவள் ஏற்கனவே செய்த சப்பாத்தியோடு நானும் செய்து தயாராய் வைத்தேன். அதற்குள் மேகா முகம் கழுவிக்கொண்டு வந்தாள்.

'சாரி உங்களுக்கு ரொம்ப கஷ்டம் என்னாலே'

சிரித்துக்கொண்டே தட்டில் சப்பாத்தி பன்னீர் வைத்துக்கொடுத்தேன். கூடவே பால். கொஞ்சம் ஊர்க்கதை பேசினோம். அறையில் எல்லாம் வசதியாய் இருக்கா என்று விசாரித்துவிட்டு, குட் நைட் சொல்லி, மேகா கதவை பூட்டிக்கொள்ள நான் என் அறைக்குத் திரும்பினேன்.

[ மேகா ... இன்னும் வருவாள்  ]