மாலை வேளையில்
மலர்ச் சோலை மூலையில்
மன்னவனே உனக்காக
மங்கை நான் காத்திருந்தேன்;
கண்கவர் ஆடையிலே
கவிதையொன்று சொல்லிக்கொண்டு
காளை நீ வருவாயென்று
கன்னி நான் காத்திருந்தேன்;
பூவினுள் நுழைந்து வண்டு
புதுத்தேனை நிறையப் பருகி
போதையில் பாதை புரியாது
பறந்து திரிந்ததைப்
பார்த்துச் சிரித்தேன்;
ஆண் மயிலும் பெண் மயிலும்
ஒன்றையொன்று உரசிக்கொண்டும்
ஒன்றோடொன்று மோதிக்கொண்டும்
களித்துக் கிடந்ததைக்
காணமுடியாது கண்டுகிடந்தேன்;
நேரம் ஆக ஆக
நீ அங்கு வராது போக
எங்கோ ஒரு சோகப்பாடல் யாரோ பாட
என் கண்ணிலிருந்து கண்ணீர் ஓட
ஏனோ நான் உயிரில்லா உடல்போலே
எழுந்து போனேன்;