Thursday, August 7, 2014

நீ



கண் விழித்தால் அருகில் நீ;
'கண்ணா இங்கெப்படிடா வந்தாய் நீ'
என்றுகேட்டால்
அறைத்தோழி முறைக்கிறாள்;
'அட ராமா' என்று சொல்லிக்கொண்டே
குளியலறைக்குள் சென்றால்
அரையில் ஆடையோடு அங்கே நீ;
ஆடை அணிகையில்
இடையிலிருந்து கை எடுக்காது
இம்சிக்கிறாய் நீ;
உணவருந்த உட்கார்ந்தால்
ஒரு கவளம் கேட்கிறாய் நீ;
ஆண்டவனே துணை என்று
ஆலயம் தொழ சென்றால்
ஆடவன் நீ
அருகில் தொடுதூரத்தில்;
ம் ... வேறென்ன செய்ய
‘மாரியாத்தா காளியாத்தா
என்னையும் சீக்கிரம்
ஆத்தா ஆக்கு‘
என்று வேண்டிக் கொண்டு
வெளியே வந்தால்,
நாலு சக்கர வண்டியில்
எதிரில் நீ.

Tuesday, August 5, 2014

மழை - 3



அன்று...
மழை நாளில் ஒரு நாள்
அவள் விரலோடு விளையாடிக்கொண்டே நான்
என் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டு அவள்;
கவிதை ஒன்று சொல்லேன் என்றாள்;
   இரு அற்புதக் கவிதைகளை
   இறுக்கி பிடித்துக் கொண்டு
   படிக்கவிடாத பாவையே...
என்று ஆரம்பித்தேன்;
முதுகில் குத்தினாள்;
வேறு சொல் என்று கட்டளையிட்டாள்; 
   நர்த்தனம் ஆடும் விழிகள்;
   நறுமணம் வீசும் மொழிகள்;
   நிலவின் நகல் முகம்...
ஆகா அற்புதம், அப்புறம் ... என்றாள்
  உண்மையைச் சொல்லடி
சொல்லுகிறேன், மேலே சொல் என்றாள்;
   உன் தங்கை மட்டும்
   எப்படி இப்படி அழகாய் இருக்கிறாள்
என்று முடித்தேன்;

கோபத்தில் என்னைக் கடித்து விட்டு
விருட்டென்று சென்றுவிட்டாள்;
இதே மழை நாளில் தான் ஒரு நாள்...

Friday, August 1, 2014

ஒரு காலம்



தூளியில் தூங்கிக் கிடந்தது ஒருகாலம்
துக்கமேதுமின்றி துள்ளித் திருந்தது ஒருகாலம்
தூண்மறைவில் மறைந்து நின்று பேசியது ஒருகாலம்
தூரத்தில் நின்று ஏக்கத்தோடு பார்த்தது ஒருகாலம்
தூற்றுவாரையெல்லாம் துச்சமாய் மதித்து
தன் வழி சென்றது ஒருகாலம்,

சிவனையெண்ணி
சிவோஹம் எனச்சொல்லி
சிவபதம் கிட்ட
சிந்தித்திருப்பது இக்காலம்;