Thursday, October 6, 2022

தமிழமுது 15

திருக்குறள்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. (45)

 

மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.

----------------------------------------------------------------------------

நாலடியார்

புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை; - இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால்.         29

 ஒருவன் இப்பொழுது நின்று கொண்டிருந்தான்; உட்கார்ந்தான்; படுத்தான்; தன் உறவினர் அலறி அழ இறந்தான் என்று கூறப்படுவதால், புல் நுனியிலிருக்கும் நீர்த்துளியைப் போல நிலையில்லாத தன்மையுடையது இந்த உடம்பு என்று எண்ணி, இப்பொழுதே அறவினைகளைச் செய்க!

----------------------------------------------------------------------------

அபிராமி அந்தாதி

பூத்தவளே, புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம்
காத்தவளே. பின் கரந்தவளே. கறைக்கண்டனுக்கு
மூத்தவளே. என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே.
மாத்தவளே. உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே?

 உலகம் பதினான்கையும் பெற்றவளே! எப்படிப் பெற்றாயோ, அப்படியே உலகத்தைக் காப்பவளே! பின்பு ஏதோ ஒரு காரணம் கருதி, உலகத்தை உன்னில் அடக்கிக் கொண்டவளே! கறைக் கண்டனுக்கு (ஆலகால விஷத்தை உண்டதால் கறை எனப்பட்டது) மூத்தவளே! (ஆதி சக்தியிலிருந்தே சிவன், பிரம்மா, விஷ்ணு முதலானோர் தோன்றினார்கள் என்பது வரலாறு) என்றும் சீர் இளமை பொருந்திய திருமாலுக்குத் தங்கையே! அருந்தவத்தின் தலைவியே! அபிராமி அன்னையே! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்கேன்.

--------------------------------------------------------------------------------

தேவாரம்

மழையார் மிடறா மழுவா ளுடையாய்
உழையார் கரவா உமையாள் கணவா
விழவா ரும்வெண்நா வலின்மே வியஎம்
அழகா எனும்ஆ யிழையாள் அவளே. (2.23.1)

 

நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன் பூண்ட என் மகள், \\\"மேகம் போன்ற கரிய மிடற்றினனே, மழுவாகிய படைக்கலனை உடையவனே, மான் ஏந்திய கரத்தினனே, உமையாள் கணவனே, விழாக்கள் பல நிகழும் வெண்ணாவல் ஈச்சுரம் என்னும் திருவானைக்காவில் மேவிய எம் அழகனே! அருள்புரி\\\", என்று உன்னையே நினைந்து கூறுகின்றாள்.

--------------------------------------------------------------------------------

திருவாசகம்

ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய்
ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந் தெய்த்தேனை
ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஓட்டுகந்து
தேனையும் பாலையுங் கன்னலையும் ஒத்தினிய
கோனவன்போல் வந்தென்னைத் தன்தொழும்பிற் கொண்டருளும்
வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய் (8.8.14)

 யானை முதலாகிய எல்லாப் பிறவிகளிலும் பிறந்தும் இறந்தும் இளைத்த என்னை உடலுருகச் செய்து, என்வினைகளை ஒழித்து, தேன் போல எனக்கு இனிமையைத் தந்து என்னைத் தன் திருத்தொண்டுக்கு உரியனாக்கின அச்சிவபெருமானது திருவடியைப் புகழ்ந்து பாடுவோம்.

--------------------------------------------------------------------------------

திருமந்திரம்

வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே  (10.2.1)

 

`அறவேட்கை உடையேம்` எனத் தம்மைப் பற்றிச் சொல்லிக்கொள்வார் சிலர், `வேதத்திற் சொல்லப்படாத அறமும் உண்டு` எனக் கூறுவராயினும், அஃது உண்மையன்று; வேதத்திற் சொல்லப்படாத அறம் யாதொன்றும் இல்லை. மக்கள் ஓதி உணர வேண்டுவனவாய எல்லா அறங்களும் வேதத்திலே உள்ளன. அதனால், அறிவுடையோர் பலரும் வேதத்தை மறுத்துச் செய்யும் சொற்போரை விடுத்து எல்லாச் சொல்வளமும், பொருள்வளமும் உடைய வேதத்தை ஓதியே வீடடையும் நெறியைப் பெற்றார்கள்.

--------------------------------------------------------------------------------


( தொடரும் )

copy right to the respective web sites.


No comments:

Post a Comment