Friday, September 23, 2016

நீதியைத்தேடி



பிறந்தேன்
பின் ஓடச்சொன்னார்கள்
ஓடினேன்
பள்ளி தேடி ஓடினேன்,
கல்வி தேடி ஓடினேன்,
பணம் இறைத்து பட்டம் பெற ஓடினேன்;
*
பின் இறைத்த  பணத்தை நிரப்ப ஓடினேன்
வேலை தேடி ஓடினேன், இடையில்
சேலை தேடி ஓடினேன்.

காதல் தேடி,
கன்னியர் தேடி ஓடினேன்;
*
எல்லாவற்றுக்கும் ஒருவிலை
இன்னும் இன்னும் என்றுஓடினேன்
பல நாடுகள் பறந்தோடினேன்;

எதை எதையோத் தேடி
எங்கெங்கோ ஓடினேன்,
எல்லை மறந்து ஓடி ஆடி வாடி
இன்று அமைதியாய்;
*
இதோ என் வாழ்க்கை முடியப் போகிறது,
இத்தனை நாள் ஓடியதெதற்கு எனத்தெரியாமல்
இன்று நிற்கிறேன், திரும்பிப்பார்க்கிறேன்

வாழ்க்கை என்றால் என்ன என்றெனைக் கேட்கிறேன்;

இதற்கு நான்மட்டுமா காரணம் என்றெண்ணிப் பார்க்கிறேன்;
*
நான் ஒடினேனா என்னைத் துரத்தினார்களா
எனக்குத் தெரியவேண்டும்,
இப்பொழுதாவது உண்மை புரியவேண்டும்;

வாழ்க்கையை மறக்கச்செய்து
வாழ்வென்றால் என்னவென்று உணர்த்தாது மறைத்து

எல்லாவற்றையும் வணிகமயமாக்கி
என்னை எங்களை வாழ விடாது செய்தவர் யார் ?
*
என்னிடம் நிதி நிறைய இருக்குறது.
ஆனால் நீதி வேண்டும்.

உங்களுக்கு 
உண்மை தெரிந்தால் சொல்லுங்கள், 
இல்லை
என்பின்னே வாருங்கள்.

இதோ ...
மீண்டும் ஓடுகிறேன் ...
நீதியைத்தேடி.

No comments:

Post a Comment